Friday 12 December 2014

லிங்கா


   
          60 வயதுக்கு பிறகு எம் ஜி ஆர் -க்கே கிடைக்காத கதாநாயகனாக நடித்த படத்துக்கான  மிகப்பெரிய ஒப்பனிங் 64 வயது ரஜினிக்கு சாத்தியமாகியிருக்கிறது. இது கமலுக்கும் தொடர்வது சந்தோஷம். ரஜினி - கே எஸ் ரவிகுமார் - ரஹ்மான் - ரத்னவேலு காம்பினேஷன், 4 வருடம் கழித்து வெளியாகும் ரஜினி படம் என்ற பெரிய சுமையை சுமந்து வந்திருக்கிறார் "லிங்கா" .தன் தாத்தா லிங்கேஸ்வரனின்  பெயரை கூட வெளியே சொல்ல கூச்சப்படும்  பேரன் திருடன் "லிங்கா" போலீஸ் கைதிலிருந்து தப்பிக்க தன் தாத்தா மக்களுக்காக கட்டிய அணை இருக்கும் இடத்துக்கு செல்கிறார் அங்கு தன் தாத்தாவின் அருமை பெருமைகளை புரிந்துகொண்டு அணைக்கு தற்போது வரவிருக்கும் ஆபத்தை தடுத்து அணையை காப்பாற்றுவதே "லிங்கா".

          ரஜினி படங்களில் சோசியல் மெசேஜ், ரஜினியின் முதல் பீரியட் படம் (!!) அதிக பெர்பார்மென்ஸ் செய்யும் ரஜினி ,அதிக பில்டப் இல்லாத சின்ன ரஜினி ,வசனங்களில் அடக்கி வாசித்தாலும் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை படம் முழுக்க சொல்வது என ரஜினிக்கு, ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் புதுக்களம் " லிங்கா "



        படத்தின் பிளஸ் ராஜா லிங்கேஸ்வரன்தான் .புது ஸ்டைல், புது மேக்கப் , அலட்டிக்காத நடிப்பு என  கலக்கியிருக்கிறார் ரஜினி.என்னைக்கேட்டால் லிங்காவை ஒரு பீரியட் படமாகவே எடுத்திருக்கலாம்.அந்தளவுக்கு விஸ்தீரணமும் ஒழுங்கும் அதில் இருக்கிறது .தசவாதாரத்தில் பெரிய கூட்டத்தை வேலை வாங்கிய ரவிக்குமாரின் தெளிவு இதில் தெரிகிறது. சிவராத்திரி அன்று கோவிலை திறப்பது , கலெக்டர் ரஜினிதான்" ராஜா " லிங்கேஸ்வரன் ,ரஜினியின் எழுதிகொடுத்த பத்திரத்தை எரிக்காமல் காக்கும் சீன் என பல இடங்களில் ரவிக்குமார் "டச்" தெரிகிறது "மனசு சந்தோஷமா இருந்தா எங்க இருந்தாலும் நல்லா இருக்கலாம் மனசு சரியில்லைன்னா எங்க இருந்தாலும் நல்லா இருக்க முடியாது" என வசனங்களில் மிளிர்கிறார் . சமகால ரஜினி கேரக்டரை கையாண்டதில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். அதுவும் நெக்லஸை திருடும் சீன் ரொம்ப நீளளளம்.ரவிக்குமார் தன்னுடைய டிஸ்கஷன் டீமை மாற்றவேண்டிய நேரமிது.


            பீரியட் காலத்தில் திருஷ்டியாக சோனாக்ஷியின் நடிப்பு.சரோஜா தேவி காலத்து மேக்கப்புடன் அனுஷ்கா என ஹீரோயின்கள் படத்துக்கு மைனஸ்கள். இன்னும் நடிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து நடித்திருக்கிறார்கள்  ராதாரவி மனசில் பதிகிறார் .சுந்தர்ராஜனின் குள்ளநரித்தனம் எடுபடவில்லை .பிரிட்டிஷ் கால வெள்ளைக்கார கலெக்டருக்கு அவ்வளவு சீன்கள் தேவையில்லை.சந்தானம் கருணாகரன் பாலாஜி ஆகியோர் ரஜினியின் நண்பர்களாக காமெடி செய்கிறார்கள்.ரஜினி என்ற மேஜிக்மேனுக்காக படத்துக்கு செல்பவர்கள்தான் அவர் ரசிகர்கள்.அவர் தன் பாதையை மாற்ற முயற்சித்திருப்பது நன்றாக தெரிகிறது.அந்த மேஜிக் இருக்கிறதா என ரசிகர்கள்தான் சொல்லவேண்டும்.

       
              என்னாச்சு ரஹ்மானுக்கு ரஜினி படத்துக்கே ஓபனிங் சாங்தான் முக்கியம் அதில் சொதப்பிவிட்டார்."மோனா மோனா " "என் மன்னவா" பார்க்க கேட்க சந்தோஷம்.ஈமெயிலில் இசையமைத்தால் எப்படி படத்தோடு ஒன்றிணைந்த பாட்டு வரும் என எதிலேயோ படித்தேன்.அதுதான் தெரிகிறது பின்னணி இசையில் சாரி ரஹ்மான்.இமான் அனிருத் தேவி ஸ்ரீ பிரசாத் யுவன்  என ரஜினிக்கு சாய்ஸ் உண்டு .இல்லேன்னா சந்திரமுகியில் கலக்கிய வித்யாசாகருக்கு கூட மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம்.காவியத்தலைவன் வழியில் லிங்காவும் செல்கிறது ரஹ்மானால்.ஒரு தீம் கூடவா சிக்கல ??!!

           "DOP -ரத்னவேலு" அணை காட்சிகளை படம் பிடித்த விதம் பீரியட் கால ஒளிப்பதிவு,பாடல்கள் என கிடைத்த பந்துகளில் சிக்ஸர் அடித்திருக்கிறார் , "கலை - அமரன்" கலக்கியிருக்கிறார் .அதிலும் அணை செட் கோவில் செட் கலக்கல் .

         ரஜினி தன் வயதுக்கேற்றபடி படம் செய்ய வேண்டும் முயற்சிக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது .அதற்காக புதிய இயக்குனர்களோடு இணைந்து ரசிகர்களை சந்தோசப்படுத்துவார் என நம்புகிறேன்.அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் .கமான் ரஜினி சார் "Lets Begin"


      
          
          


Saturday 20 September 2014

கமல்ஹாசன் என்னும் சினிமா யானை





               எப்போது பார்த்தாலும் கண் விலகாமல் ஆச்சர்யம் தரும் யானை ,ரயில்,அருவி,பெண் குழந்தை போல எனக்கு ஆச்சர்யம் தரும் இன்னொரு விஷயம் கமல். பார்வையற்றவன் யானையின் உருவத்தை சொல்ல முயற்சித்தது போல முயற்சி செய்திருக்கிறேன்
              தமிழ்சினிமா 75-ந்தில் இருந்து 80-களின் பெரும்பகுதி வரை "கரகர"கரம் மசாலாவாகவே இருந்தது.இதில் பாலச்சந்தர் பாரதிராஜா போன்றவர்கள் நல்ல படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.எம்ஜியார் சிவாஜி போன்ற சினிமா சீனியர்களின் ஓய்வுக்கு பிறகு தமிழ்சினிமாவில் மசாலா மணத்தை குறைக்க முற்பட்டதில் முதலிடம் கமலுக்கு கொடுக்கலாம்.ரஜினிக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்த முள்ளும் மலரும் மூலமாக பாலுமகேந்திராவை தமிழுக்கு கொண்டுவந்தது கமல் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.அதுவரை டாக்கியாக இருந்த சினிமாவை மூவியாக மாற்ற முயற்சித்தவர்கள் மகேந்திரன் ,பாலுமகேந்திரா.அவர்களை ஒத்த அலைவரிசையில் இருந்தவர் கமல்."கமல் மலையாள படங்களில் பிசியாக நடித்துகொண்டிருந்தபோதே தமிழ்சினிமாவின் நிறத்தை மாற்றும் எண்ணம் இருந்தது இத்தனைக்கும் அப்போது அவர் வயது 25 க்குள் இருந்தது" என எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.
             கமல் ஆரம்பகாலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக இருந்தாலும் பின்பு ஆக்சனுக்கும் மாறினார்வர்தான். நிறைய மசாலா படங்கள் மூலம் வெற்றியை சுவைத்தவர்தான். "குரு" சகலகலா வல்லவன் அதில் சிகரம் என சொல்லலாம்.தன்னுடைய 100 வது படமான 'ராஜபார்வை"யில் நடித்தபோது கமலின் வயது 25.தன்னுடைய 100 வது படம் என்பது ரிஸ்க் இல்லாமல் வெற்றிபடமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா ஹீரோக்களும் விரும்புவார்கள்.(இதில் விதிவிலக்காக ஜெயித்தவர்கள் எம் ஜி ஆர், சிவாஜி,விஜயகாந்த்-தான்,ரஜினி சத்யராஜ் பிரபு எல்லோருக்கும் 100 வது படங்கள் தோல்விப்படங்களே ). கமல் சினிமாவின் நிறத்தை மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் தெரிந்தே "ராஜபார்வை" என்ற தீயில் கையை வைத்தார்."ராஜபார்வைக்காக விருது வாங்கியபோது மட்டும்தான் கை "சில்' என்று இருந்தது" என கமல் குறிப்பிட்டார்.


          கமலும் சகலகலா வல்லவன் தூங்காதே தம்பி தூங்காதே மூலம் உச்சபட்ச வெற்றியை சுவைத்தார் .ஆனால் அதில் சிக்கிக்கொள்ளாமல் எழுத்தாளரை சினிமாவுக்கு கொண்டுவரவேண்டும் ஆவலில் சுஜாதாவுடன் இணைந்து எடுத்த படம்தான் "விக்ரம்".எனக்கு தெரிந்து கம்ப்யூட்டர் முதன்முதலில் காமிக்கபட்டது விக்ரமில்தான். ஏவுகனையை அதன் ஆபத்தை தமிழர்கள் அறிய செய்த படம்."ப்ளூ மேட்" டெக்னாலிஜியில் உருவான முதல் தமிழ்ப்படம் (க்ளைமேக்ஸ்) ராஜஸ்தானுக்கு தமிழர்கள் சுற்றுலா சென்றுவந்தது போல் அழகாக படம்பிடிக்கபட்ட படம் .சத்யராஜ் வில்லனாக நடித்த கடைசி படம் என பல விஷயங்கள் இதில் உண்டு.இயக்குனர் ராஜசேகர் இடையில் மாவீரனை இயக்க போய்விட சந்தானபாரதியும் கமலும் செய்த பேட்ச் ஒர்க் படத்துக்கு செட்டாகவில்லை விக்ரம் தோல்விப்படமாக அமைந்தது.அதுவரை  நடித்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் அதில் போட்டிருந்தார் கமல் என்ற தகவலும் உண்டு.மன்னாதி மன்னன் தோல்வி அடைந்த்திருந்தால் என்னவாகியிருக்குமோ அது கமலுக்கு நடந்தது எனத்தகவல் .ஆனாலும் வித்தியாசமான முயற்சிகளை விடவில்லை.

           தொடர்ந்து பிசியாக நடிக்க வேண்டிய சூழல், இல்லையென்றால் "பேர் சொல்லும் பிள்ளை"யும், மங்கம்மா சபதமும் வந்திருக்காது.கமலின் பேனா கமர்சியல் வெற்றி பெற்றது "அபூர்வ சகோதர்களில்தான். மூன்று வேடங்கள் மூன்று பாடி லாங்குவேஜகள் என கமல் தன்னை வருத்தி ரசிகனை குதூகலப்படுத்திய படம் கிரேசி மோகன் கமலுக்கு "பக்கா"பலம் ஆனார்.அப்பு கேரக்டருக்கு கமல் பட்ட சிரமங்கள் ஏராளம் அதில் பின்புறமாக கால்களை கட்டிக்கொண்டு நடித்ததும் ஒன்று.அதில் அப்பு கேரக்டரை சற்று மனநிலை பாதித்தவனாக காட்டியிருந்தாலும் கூட (வில்லன் படம் மாதிரி ) இந்த படம் வெற்றி பெற்றிருக்கும்.ஏனெனில் திரைக்கதை அவ்வளவு நன்றாக இருந்தது,இப்படி மெனகெட்டிருக்க தேவையில்லை.ஆனால் ரசிகனுக்கு புதிய விஷயத்தை கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக கமல் அவ்வளவு மெனகெட்டார் என்பதுதான் நிதர்சனம்.கமல் அபூர்வ சகோதர்கள் வரையிலும், ரஜினி பாட்ஷா வரையிலும் ரசிகர்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டில் உட்காரவைத்துவிடுவார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள் என்பது தகவல்.சிவாஜியையே ஒதுக்கியவர்கள் அல்லவா தமிழர்கள்.


            கமல் 90 க்கு  பிறகு தன் பாதையை மாற்ற எடுத்த முதல்முயற்சிதான் "குணா".. குணா மனநிலை பாதிக்கபட்டவன்,அவனது தாய் தப்பான தொழில் செய்பவள் இதற்குமுன் எந்த பெரிய ஹீரோவும் தன்னுடைய பின்புலத்தை இவ்வளவு மோசமாக அமைத்துகொண்டதில்லை.கமல் -இளையராஜா-சந்தானபாரதி என்ற கூட்டணி வெற்றிதராமல் போனாலும் தமிழுக்கு மற்றொரு வாசல் திறந்த படம் குணா.கமல் பேனா பிடித்த படங்களின் திரைக்கதையில் ஒரு ஒழுங்கு இருக்கும்.அதில் இரண்டாம்படம்தான் குணா.இவ்வளவு மெனக்கெடல் ஒரு படத்துக்கு வேண்டுமா என ரசிகனை பேசவைத்தது. அதுவரை வெறும் பைத்தியம் என்ற உச்சரித்த தமிழ்சினிமா "மனநிலை பாதிக்கப்பட்டவன்" என்ற சொல்லை உபயோகிக்க காரணமாயிருந்தது குணாதான்.அது செல்வராகவன் காதல்கொண்டேன் செய்யுமளவுக்கு வந்து நின்றது.கமல் குணா-வாகவே மாறி உலவினார், ஒரு அறைக்குள்ளேயே கமல் சுற்றி சுற்றி வசனம் பேசும்போது தமிழ்சினிமாவும் சுற்றியது .அதுவரை இருந்த ஸ்டேண்டிங் காமிராக்களுக்கு விடுதலை.குணா குகைக்கு (முன்பு டெவில்ஸ் கிச்சன் ) போகும் வழி மிகவும் ஆபத்தானது.ஒவ்வொருவராக பாலத்தில் சென்று அந்த இடத்தை அடைவார்களாம்.கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கமல் அதில் சென்று நடித்தார்.ஆனாலும் அது அப்படியொரு இடத்தில் படமாக்கபட்டது ரசிகனுக்கு தெரியாது.கடைசி ரசிகனுக்கும் நியாயம் செய்யவே அப்படி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து சிரமத்துடன் நடித்தார். அதனால்தான் ராஜாவின் "கண்மனி அன்போடு காதலன்"க்கு நியாயம் செய்ய முடிந்தது.இதுதான் எல்லா ராஜா ரசிகனின் ப்ளே லிஸ்ட்டிலும் கண்மனி இடம் பிடிக்ககாரணம்.
              கமலின் பேனாவுக்கு வைரைக்கல் வைத்த படமென்றால் தேவர்மகன்-தான்.அன்னை இல்லத்து ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு அரிதாரம் பூசியதற்கு அதுவரை அவர் பெறாத சம்பளத்தை கொடுத்தார் கமல்.(படையப்பாவில் ரஜினி அதை முறியடித்தார்.)பொதுவாக கமல் ரஜினி நடிக்கும் படங்களில்தான் மற்ற நடிகர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கும் என்ற தகவலும் உண்டு.குருதிப்புனலில் இயக்குனர் விஸ்வநாத்துக்கு சம்பளம் 85 லட்சதுக்கு மேல் கொடுத்தார் என்பது தகவல்.கமல் தன்னை சிறந்த தயாரிப்பாளராகவும் நிலைநிறுத்திக்கொண்டவர்.தேவர் மகன் மூலம் "ஃபங்க்" ஸ்டைலை அறிமுகம் செய்து வைத்தார்.அனைத்து நாயகர்களின் ரசிகர்களும் கூட பேதமின்றி "ஃபங்க்" வைத்துக்கொண்டார்கள்.பொதுவாக கமல் ஸ்டைல் செய்யமாட்டார் செய்தால் அது வெகுநாளைக்கு இருக்கும் உதாரணம் "சத்யா" பட ரிங் இப்ப வர்ற காலேஜ் பசங்ககிட்ட கூட டிரெண்ட்..


              தமிழ்சினிமாவின் சிறந்த பத்து படங்களை சொன்னால் அதில் தேவர் மகனை சேர்க்காமல் முடிக்கமுடியாது.தேவர்மகனில் சிவாஜி இருக்கும் காட்சிகளில் கமல் அடக்கியே வாசித்தார்.சிவாஜி என்ற பிதாமகனை வேறொரு கோணத்தில் காட்டி ரசிக்கவைத்தார்.தேவர்மகனின் வசனங்கள் இன்றும் பாடமாக படிக்கவேண்டியவை தமிழ்சினிமாவின் சிறந்தவசனங்களை உள்ளடக்கிய படங்களில் ஒன்று.திரைக்கதை என்ற இலக்கணத்துக்கு சரியான உதாரணம்.தெற்கில் இருக்கும் ஜாதி வெறியை பெரியவர் சின்னவர் என்ற பேதத்தை சொத்து பிரச்சனையை அந்த பகுதி மக்களின் வெள்ளந்திதனத்தை கண்ணாடிபோல் காட்டியது திரைக்கதை,சங்கிலி முருகன் அதற்கு உதவினார். சிவாஜியின் "இன்னைக்கு  நான் விதை போடுறேன்" வசனம் மனிதவாழ்வில் பாடமாக படிக்கவேண்டிய ஒன்று."போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா" என்று சொல்லி தமிழர்களை விழிக்கசெய்தார்.தலைவாசல் விஜய், வடிவேல் போன்ற திறமையாளர்களை அடையாளம் காட்டினார்.எனக்கு பிடித்த கமலின் "எவர் கிரீன் மூவி" என்றால் அது "தேவர்மகன்"தான்.


              தேவர் மகனுக்கு பிறகு கமல் மீதான மரியாதை கூடிய படம் "மகாநதி".கிருஷ்ணசாமியாக கமல் வாழ்ந்தார்.பெண்களுக்கு எதிராக அக்கிரமங்களை அநீதிகளை வெளிச்சமிட்டு காட்டிய படம்."சோனாகாஞ்சி" என்ற வார்த்தையை கடைசி தாய்மாருக்கும் கொண்டுபோய் சேர்த்தார்.ஒரு தவறான தொழில் செய்யும் பெண்ணின் காலில் விழுந்து அழுது தன்னுடைய நட்ச்சத்திர அந்தஸ்த்தை உடைத்து "தான் ஒரு நடிகன் மட்டுமே" என்று கமல் ஊருக்கு உணர்த்தினார் சகமனிதனின் கோபம் என்ன செய்யும் என காட்டினார் .எனக்கு தெரிந்து பெண்களோடு சேர்ந்து ஆண்களும் கண்ணீர் சிந்தியபடி பார்த்தபடம் "மகாநதி" தான்.அதில் முதன்முதலில் "ஆவிட்" எனும் கம்ப்யூட்டர் எடிட்டிங்கை தமிழ்சினிமாவுக்கு அறிமுகம் செய்தார்.புதுமையை தமிழ்சினிமாவில் புகுத்திகொண்டேயிருக்க வேண்டும் என விரும்பினார்.இந்த யானையை பற்றி எழுதும்போது அன்பே சிவம் ஹேராம் இரண்டையும் எழுதாமல் இருக்க முடியாது.ஆனால் அதை தொட்டால் இந்த கட்டுரைக்குள் அடக்க முடியாது.அதற்கென ஒரு பதிவு எழுதனும்..


                சில படங்கள் காலங்கள் கடந்தபோதும் பார்க்குறப்ப எல்லாம் அப்டியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்.சில படங்கள் சில காலம் கழித்து கொண்டாடப்படும் ஆனால் வந்த புதிதில் வரவேற்பை பெறாமல் போயிருக்கும்.இதில் விக்ரம்,மைக்கேல் மதன காமராஜன், பம்மல் கே சம்பந்தம் ,பஞ்ச தந்திரம்,தில்லு முல்லு அன்பே சிவம் போல பல படங்கள் உண்டு.அதில் ஒன்றுதான் "ஆளவந்தான்".மனப்பிறழ்வை மிக வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்த படம்.அதில் வரும் நந்துவின் கவிதைகள் வீரியம் மிக்கவை (உபயம் வைரமுத்து ).நந்து வந்தவுடன் படத்தின் நிறம் மாறும்..வேகம் வேகம்...பாடல் இசைக்கு சங்கர் எசான் லாய்,பின்ணனி இசைக்கு மகேஷ் என கமலின் புதிய படை தங்கள் பங்கை சரியாக செய்தார்கள். கமல் வில்லனுக்கென எந்த காம்பரமைஸும் செய்துகொள்ளாமல் நந்துவுக்கு தோன்றுவதயே திரைக்கதையாக அமைத்தார். இடைவேளைக்கு பிறகான படத்தின் வேகம் சமீபத்தில் கூட எந்த படத்திலும் பார்த்த நியாபகம் இல்லை.
           2000 தீபாவளிக்கு வந்த தெனாலிக்கு கொடுத்த வரவேற்பை 2001 தீபாவளிக்கு வந்த ஆளவந்தானுக்கு மக்கள் ஏன் கொடுக்கவில்லை என்று இன்றும் தெரியவில்லை. பெண்கள் பலருக்கு கமல் நிர்வாணமாக அமர்ந்திருந்த,படுத்திருந்த போஸ்டரே படத்துக்கு செல்ல தேவையில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.அந்த சமயத்தில் கமல் பெர்சனல் வாழ்வில் வந்த பிரச்சனைகளும் படத்தின் மைலேஜை குறைத்தது, கமலஹாசன் உடைகள் "சாய்" என டைட்டிலில் வந்தது.கலைப்புலி தாணுவே போதுமான விளம்பரம் கொடுத்ததாக தெரியவில்லை.தாணு கமலை விமர்சித்து அவரே தியேட்டர்களில் எடிட்டும் செய்தார்."பெண்ணை கட்டி கொடுத்தாச்சு இனி நல்லபடியா பார்த்துக்குறதும் கொடுமைபடுத்துறதும் அவங்க கையில இருக்கு"என கமல் பேட்டிகளில் வருத்தப்பட்டார்.கமல் மீதான் கோபத்தை கமல்-சரிகா விவாகரத்துக்கு பிறகு புன்னகை பூவே படத்தில் சரிகாவை ஒரு பாடலுக்கு ஆட வைத்து தாணு காட்டிக்கொண்டார்.கமல் செய்த ஒரே தவறு ஆளவந்தானை 2001-ல் ரிலீஸ் செய்ததுதான்.2015 ல் எடுத்து ரிலீஸ் செய்திருந்தால் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும்.இதற்கு லார்ட் ஆப் த ரிங்க்ஸ் தயாரிப்பாளர் "பேரி ஆஸ்பர்னின் பாராட்டே உதாரணம்.


           கமலுக்கும் ராஜாவுக்குமான நட்பு மிக ஆச்சர்யம் அளிக்ககூடிய ஒன்று.2005 க்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை ஆனாலும் அவர்களின் நட்பு அப்படியே இருக்கிறது .ராஜாவின் லண்டன் இசை விழாவில் ஒரு பாடகனாக கலந்து கொண்டு பாடினார்.ராஜாவுக்கும் கமல் கொஞ்சம் ஸ்பெசல்தான் ஏனெனெனில் ராஜாவின் பாடல்களுக்கு அதிகபட்ச நியாயம்செய்து படமாக்கியதில் கமலுக்கு மட்டுமே முதலிடம்.இஞ்சி இடுப்பழகி உருவான விதத்தை கமல் சொல்ல கேளுங்கள். 
இஞ்சி இடுப்பழகி



            கமல் ஹாலிவுட் படங்களை காப்பியடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.நல்ல விஷயங்களை மக்கள் அறிந்திராத விஷயங்களை நெருக்கமாக கொண்டுவர உதவிபுரிகிறார் என்றே சொல்ல வேண்டும்.அவ்வை சண்முகி "என் மீசையானாலும் மனைவி"தான்னு கிரேசி மோகன் பலமுறை சொல்லியும் இது மிஸஸ் டவுட் பயர்-தான் என்று சொல்கிறார்கள்.அப்படியே பார்த்தாலும் ஆண்-பெண் புரிந்துகொள்ளலை சேர்ந்து வாழவேண்டிய அவசியத்தை மிக நகைச்சுவையாக சொன்னதில் அவ்வை சண்முகி ஆங்கில படத்தை விட நன்றாகவே இருந்தது.கமல் நல்ல இந்தியப்படங்களையும் விட்டதில்லை. மராட்டி "துரோக்கால்"தான் குருதிப்புனல் ஆனது.சத்யா கூட ரீமேக்தான். 
அது இப்ப "பாபநாசம்" வரை தொடர்கிறது.
                   இந்த யானையின் பிடித்த முகங்களில் ஒன்று ரசிகன் முகம் .சிவாஜி நாகேஷ் அவ்வை சண்முகம் எம் ஆர் ராதா பாலச்சந்தர் என அவர் ரசிக்கும் விஷயங்களும் அதை இப்போது சொல்லும்போதும் காட்டும் ஆர்வமும் ரசிக்க தகுந்த ஆச்சரியப்படக்கூடிய ஒன்று. சமீபத்தில் சுகாசினி ஒரு நிகழ்ச்ச்சியில் கமலிடம் "வீரபாண்டிய கட்டபொம்மன் ,கப்பலோட்டிய தமிழன் படங்களை ரீமேக் செய்து நடிக்க சொன்னால் எந்த படத்தில் நடிப்பீர்கள்" என கேட்டதற்கு கமலின் பதில் "எந்த கேரக்டரில்ன்னு சொல்லவே இல்லையே" என்றவர் வேண்டுமானால் கப்பலோட்டிய தமிழன் படத்தில் சுப்ரமணிய சிவாவாக நடிக்கலாம் ஏன்னா அதுல என் ஆசான் சண்முகம் அண்ணாச்சி நடித்திருந்தார் "என பதில் சொன்னார். அவர் சிவாஜிக்கும் அவர் இடத்துக்கும் கொடுக்கும் மரியாதை பிரமிக்க தகுந்த ஒன்று.இத்தனைக்கும் சிவாஜி கடைசிவரை கமலை தன் வாரிசாக அறிவிக்கவே தயங்கினார் என்பதே உண்மை.சிவாஜி தன் நடிப்புலக சக்கரவர்த்தி எனும் நாற்காலியை யாரிடமும் பங்கு போட்டுக்கொள்ள விரும்பவில்லை தேவர்மகன் நாற்காலி உட்பட.

                 "நாகேஷ்" இன்றுவரை கமல் எந்தவொரு தொலைக்காட்சி பேட்டியிலும் நாகேஷை குறிப்பிடாமல் பேசிப்பார்த்த நியாபகம் இல்லை. நாகேஷ் குறித்து சொல்லும்போதெல்லாம் 200% எனர்ஜியாக சொல்லுவார்,இன்னும் கூட கண்கள் விரிய விரிய நாகேஷ் பாலச்சந்தர் நட்பை விவரிப்பார்.கமலின் தற்போதைய உயரத்துக்கு இந்த அளவுக்கு சக நடிகனை ரசிப்பதை வெளியில் காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.ஆனாலும் ரசிப்பதில் குறை வைப்பவரல்ல கமல்.கமல் தன் படங்களில் நாகேஷை தொடர்ந்து பயன்படுத்தி அன்பை காட்டினார்.அவ்வை சண்முகி ஜோசப் ,அபூர்வ சகோதர்கள் வில்லன், பஞ்ச தந்திரம் "மாமனார்" நம்மவர் புரபசர், மகளிர் மட்டும் பிணம்,வசூல் ராஜா வாத்தியார் அப்பா என கமல் நாகேஷுக்கு கொடுத்த வைரைட்டிகள் அதிகம்.தசாவதாரத்தில் கமல் நாகேஷுக்கு கொடுத்தது கவுரவ "செண்ட் ஆப்" "ஐ அம் ஹானர்டு"டா என நாகேஷ் கமலை பார்த்து சொன்னார்.தன் விருப்ப நடிகரின் கடைசிப்படம் தன் படமாக மாறிப்போனதில் கமல் நிச்சயம் சந்தோசப்பட்டிருக்கமாட்டார்.


                 கமலுக்கு கடவுள் பக்தி இல்லை ஆனால் குரு பக்தி நிறைய உண்டு.பாலச்சந்தரின் மீது கமல்ஹாசனின் மரியாதை வியக்கதக்க ஒன்று இந்த விசயத்தில் கமல்-ரஜினி இருவரும் நேர்க்கோட்டில் இருப்பார்கள்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கமல் சொன்னார் "பாலச்சந்தர் காரில் வந்துகொண்டிருந்தபோது இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கிறது ரோட்டுல போறவனையா என பாலச்சந்தரிடம் ஒருவர் கேட்க அவர் ரோட்டுல போற அவன்தான் நடிக்க போறான் என்று பாலச்சந்தர் சொன்ன
இடத்தில் நடந்துசென்று கொண்டிருந்தது நான்,நல்லவேளை அந்த பக்கம் நான் நடந்து போனேன்" என குறிப்பிட்டார். கமல் பாலச்சந்தரின் இயக்கத்தில் கடைசியாக நடித்தபடம் உன்னால் முடியும் தம்பி என்றாலும் கூட பார்த்தாலே பரவசம் படத்தில்கூட ஒரு சீன் வந்து தன் குரு பக்தியை காட்டினார்.உத்தமவில்லனில் பாலச்சந்தரை நடிக்கவைத்து இப்போதும் குருபக்தியை காட்டிக்கொண்டிருக்கிறார் கமல் தி கிரேட்.


                கமல்-ரஜினி நட்பும் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றுதான்.ரஜினி 80 க்கு பிறகு துறவறம் மேற்கொள்ள முயற்சித்தபோது அவரை மீண்டும் லௌகீக வாழ்க்கைக்கு அழைத்துவர முயற்சித்ததில் பெரும்பங்கு கமலுக்கு உண்டு.கமல்-சிம்ரன் பிரச்சனையில் ரஜினி தலையிட்டு தீர்த்துவைத்தார் என்ற தகவலும் உண்டு. ரஜினி "தெனாலி" என தலைப்பு வைக்க படையப்பாவுக்கு ஒரு இடைவேளை மட்டுமே விடவேண்டும் என கமல் முடிவு செய்ய என இருவரது நட்பும் மிக ஆச்சரியமிக்க ஒன்று.
               
               கமல்ஹாசன் படங்கள் என்றாலே "லிப் கிஸ்" என எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் சினிமா விமர்சகர்கள்.உண்மையில் அதுபோல அமைந்தது சில படங்களே அதுவும் காட்சிக்கு தேவைப்பட்டிருக்கும் ஹேராம்,மகாநதி,குருதிப்புனல்,புன்னகை மன்னன் என சில படங்களில் மட்டுமே வரும் .இப்போது யோசித்தால் அடுத்துவரும் காட்சிக்கு தேவையானதாகவே இருக்கும்.தேவர்மகனுக்கு பிறகு கமலின் படங்களில் சமூகப்பொறுப்பு அதிகமாகவே இருந்தது.திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லாத கமல் இதுவரை அதற்கு முரணான படங்களில் நடித்ததில்லை.மும்பை எக்ஸ்பிரஸ்ல் வரும் மனீஷாவின் கேரக்டர் உதாரணம்.அவ்வளவு தவறான குணங்களுடைய பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு மனிதர்கள் அனைவரும் குறையுடையவர்கள்தான் ,நாம்தான் அனுசரித்து நல்வழிப்படுத்தி வாழவேண்டும் என சொல்லாமல் சொன்னார்.கிளைமேக்ஸில் எங்க போறோம் என்பதற்கு "நேர் வழியில" என பதில் சொன்னார்.தொடர்ந்து வேட்டையாடு விளையாடு-வில் ஜோதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொள்வார் இதில் கமல் முரண்பட்டிருந்தால் கௌதம் மேனன் மாட்டேன் என சொல்லியிருக்கமாட்டார்.ஆண் பெண் மறுமணத்துக்கான் அழகான கவிதை அது. 
             புத்தங்களை படிக்கவேண்டும் என வலியுறுத்துபவர். "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி "நிகழ்ச்சியில் ஜெயமோகனின் "அறம்" புத்தகத்தை பிரகாஷ்ராஜுக்கு பரிசாக தந்ததனால் "அறம்" அனைவரும் அதிகளவில் படிக்கும் புத்தகம் ஆனது.நீ.வெ ஒரு கோடியில் கிடைத்த பரிசுத்தொகை 50 லட்சத்தைக்கூட "பெற்றால்தான் பிள்ளையா" அறக்கட்டளைக்கு கொடுத்து தன் சமூகப்பொறுப்பை காட்டினார்.அவருடைய நற்பணி இயக்கங்கள் செய்துவரும் நற்பணிகள் ஏராளம்.பாபநாசம் படப்பிடிப்பில் கூட அந்த பகுதி சமூக ஆர்வலர்களை தேடிப்போய் சந்திக்கிறார். தற்போதைய தமிழ்சினிமாவில் 1965-க்கும் 2015-க்கும் இடையிலான தமிழ்சினிமாவின் அப்டேட்டட் அறிவுப்பாலமாக இருப்பது கமல் மட்டுமே. சில குறைகள், விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்சினிமாவின் உண்மையான கதாநாயகன் கமல் மட்டுமே.யெஸ் தி ரியல் "ஆளவந்தான்"
   
 

Friday 23 May 2014

கோச்சடையான்

          நான் இப்போது தீவிர கமல் ரசிகனாக இருந்தாலும் ,ஒவ்வொரு ரஜினி படரிலீசின்போதும் 12 வயதுவரை இருந்த உள்ளிருந்த ரஜினி ரசிகன் வெளியே வந்துவிடுகிறான். அந்த ரசிகனின் பார்வையில் இந்த படத்தின் விமர்சனம்!!



                  ஏனெனில் படத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு அப்படி.கமல் செய்திருக்கவேண்டிய படத்தை ரஜினிகாந்த் செய்திருக்கிறார்.இந்த படத்தை சாதாரண படமாக எடுத்தால் ரஜினியை பார்க்கிறோம் என்ற உணர்வை தவிர இந்த பிரம்மாண்டத்தை கண்முன் கொண்டுவந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!!!இந்த படத்தை "மோசன் கேப்சர் ஃபோட்டோ ரியலிஸ்டிக்" முறையில் எடுத்தது மிகச்சரியே.படத்தின் கிராஃபிக்ஸ் அளவு "டின் டின்"க்கு அருகில் இருக்கிறது.

          படத்தில் மூன்று ஹீரோக்கள்"ரஜினி,கே.எஸ்.ரவிக்குமார்,சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்" ரஜினியின் மகள் என்பதற்காக தேவையில்லாமல் படம் எடுக்க வந்துவிட்டார் என்ற விமர்சனங்களை எல்லாம் உடைத்துவிட்டார் சௌந்தர்யா. 2 மணி நேரப்படத்தை தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். ரவிக்குமார்,ரஜினிகாந்தின் அனுபவத்தையும்  தன்னுடைய புதுமையையும் இணைத்து ரசிகர்கள் இதுவரை பார்க்காத ரஜினியை காட்டியதற்கு சௌந்தர்யாவிற்கு ஸ்பெசல் பூங்கொத்து.

சிறப்பம்சங்கள்

1.திரு.நாகேஷ் அவர்களை திரையில் கொண்டுவந்து அந்த கேரக்டருக்கும் வேலை கொடுத்திருப்பது நாகேஷே டப்பிங் பேசியிருப்பதுபோல் அதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.
2.நாசர் அமைச்சரவையில் ராஜ குருவாக வருபவர் ரஜினியின் இஷ்ட தெய்வமான ராகவேந்திரரை போன்ற முகத்துடன் வடிவைக்கப்பட்டிருப்பது.
3.இடது கை பழக்கமுடைய ரஜினி தமிழ்பட சித்தாந்தங்களால் அதை அதிகம் வெளிப்படுத்துவதில்லை.ஆனால் இந்தபடத்தில் ராணா ரஜினியை இடக்கை பழக்கமுடையவராகவே காட்டியிருக்கிறார்.அதுவும் இடதுகையில் ரஜினி வாளை எடுத்து ஸ்டைல் செய்வது அழகு.
4.பிரம்மாண்ட அரண்மனைகள் ,பூங்காக்கள்,போர்க்களம் என பிரம்மாண்ட உலகத்தை நம் கண்முன் படைத்திருக்கிறார்கள்.
5.சண்டை காட்சிகள் ,பாடல் காட்சிகளில் சௌந்தர்யா & டீம்-ன் கடும் உழைப்பு தெரிகிறது.
6.கண்டிப்பாக இந்த படத்தை 3டி யில் பாருங்கள் கொடுத்தகாசுக்கு பைசா வசூல் . ரஜினியின் பெயர் போடும்போது இருக்கும் 3டி அதிசயம் படம் முழுக்க நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

      படத்தின் ஆரம்பத்திலேயே "மேக்கிங் ஆப் கோச்சடையான்" போட்டு
பாமர ரசிகருக்கும் புரியும்படி விளக்கம் கொடுத்துவிடுகிறார்கள். இதனால் நம்மால் படத்துடன் ஒன்றிபோய் பார்க்க முடிகிறது.  ரவிக்குமார் அல்லது ரஜினியின் ஐடியாவாக இருக்கலாம்.



கதை

தன் தந்தை கோச்சடையானை நயவஞ்சகமாக கொன்றவனையும் ,தந்தையை வஞ்சகத்தின் பிடியில் சிக்க வைக்க காரணமாக இருந்தவனையும் மகன் "ராணா" கொன்று பழிதீர்க்கிறான் ,தன் தந்தையின் லட்சியத்தையும் நிறைவேற்றுகிறான் .இந்த கதைக்கு எல்லோரும் ரசிக்ககூடிய திரைக்கதை அமைந்திருக்கிறார் K.S.R

            கதை -திரைக்கதை -வசனம் கே.எஸ்.ரவிக்குமார் என்று போட்டதற்கான நியாயத்தை செய்திருக்கிறார் ரவிக்குமார்.வசனங்கள் ஒவ்வொன்றும் எளிதாக புரியும்படி அதேசமயம் ஆழமாக எழுதியிருக்கிறார்.ஆரம்பத்தில் ரஜினி சிற்றரசுகளை கைப்ப்ற்றுவதும் பின்பு ட்விஸ்டுமாய் வேகமெடுக்கிறது திரைக்கதை. "மோசன் கேப்சர்" படமாக இருந்தாலும் ரஜினியின் அறிமுகக் காட்சியில் கைத்தட்டல் தியேட்டரை அதிரச்செய்கிறது.
              அதேபோல் கோச்சடையானுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும்  காட்சியமைப்பில் (தசாவதாரம் சாயல் விழுவதை மறுக்கமுடியவில்லை) நம் கண்ணில் நீரை வரவழைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் போர்க்கள வசனங்கள் கிளாப்ஸை அள்ளுகிறது.படத்தை முடிக்கும் போது அவருடைய டச்சை காட்டுவதற்காக ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

       A.R.ரஹ்மானுக்கு பீரியட் படங்களுக்கு இசையமைக்க தெரியாது என்ற கருத்தை அடித்து உடைத்திருக்கிறார்.ரஜினி பயணிக்கும் இரட்டை குதிரைகளில் ஒருவராய் பாய்ந்திருக்கிறார்.  "எங்கே போகுதோ வானம்" தியேட்டரில் பார்க்க ,கேட்க "வரம்", 
"மெதுவாகத்தான்"  கிளாசிக் வரிசை பாடல்
"மாற்றம் ஒன்றுதான் " ரஜினியின் குரலால் நம்மை வசீகரிக்கிறது .கோச்சடையானின் ருத்ரதாண்டவமும் படத்தின் பலங்களில் ஒன்று.
"கர்ம வீரன்" நரம்புகளை முறுக்கேற்றுகிறது .
ரஹ்மான் ரஜினி படத்துக்கு மட்டும்  ஸ்பெசல் சிரத்தை எடுத்து வேலை செய்கிறார் எனத்தெரிகிறது . படத்தின் ரீரிக்கார்டிங் நன்றாக இருக்கிறது.

           தீபிகா படுகோனே ,ஷோபனா,சரத் ,நாசர் ,ஆதி ,ருக்மணி ,ஜாக்கி ஷெராப், சண்முகராஜ்  நன்றாக செய்திருக்கிறார்கள். ரஜினிக்கு சிக்ஸ் பேக் எல்லாம் நன்றாக இருக்காது ஏதோபோல் இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள், அதெல்லாம் இல்லை நன்றாக ரஜினிக்கு பொருத்தமாக இருக்கிறது. ரஜினி படத்தில் ரஜினியை தவிர மற்றவர்களின் மீது கவனம்  போகாது.அது இந்தபடத்திலும் மாறவில்லை.

           படத்தில் மைனஸ் என்று பார்த்தால் இடைவேளைக்கு பிறகு வரும் அந்த சோகப்பாடல்தான்.அதை எடுத்துவிட்டால் இன்னும் பக்காவாக இருக்கும் .2 மணிநேரப்படம்தான் .படம் ஆரம்பித்தவுடன் சட்டென இடைவேளை வந்தது போல் தோன்றுகிறது. படம் முடிந்தவுடன் க்ரெடிட்ஸ் உடன் "மேக்கிங்" போடுகிறார்கள்.தவறாமல் பார்க்கவும்.
          இந்திய சினிமாவில் முதன்முதலில் இந்த டெக்னாலஜியில் ஒரு தமிழ்ப்படம் வந்தற்கு நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். "கோச்சடையான்" தமிழ் / இந்திய சினிமாவின் மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


ரஜினி ஒரு பேட்டியில் "இது இன்னொரு படையப்பா,பாட்ஷா  போல் ரசிகர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் தரும்" என்று சொன்னார்.அது உண்மைதான் சௌந்தர்யா அதை உண்மையாக்கி காட்டியிருக்கிறார்.
                               சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் அவர்களுக்கு
                                                     "வெல்கம் டூ தமிழ் சினிமா"

Tuesday 20 May 2014

த்ரிஷ்யம் - Drishyam ( Visual ) விமர்சனம்

             தென்னிந்தியாவில் கமல் , ரஜினிக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர் மோகன்லால். நிறைய கமர்சியல் படங்களில் நடித்தாலும் நடிப்பு மீட்டர் எதார்த்தை தாண்டாமல் பார்த்துக்கொள்பவர்."த்ரிஷ்யம்" ஹிட் படம் , ரீமேக்கில் கமல் நடிக்கிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு அதிகரித்தது.நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு பார்த்த த்ரிஷ்யம் படத்தின் கதை .

           "தற்போது நிறைய பொது இடங்களில் மறைவாக கேமராவை  வைத்து பெண்களை அசிங்கமாக படமெடுப்பது நடந்துவருகிறது .அதுபோல் ஒரு நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு என்ன நடக்கும் ,பெண் ,அவளது குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும்,அது போன்ற செயல்களை செய்யும் மகன்களின் பெற்றோர்களின் நிலை என்ன?, அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தால் நடவடிக்கை என்னவாக இருக்கும்"என்பதே


             கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் இருக்கும் டிபிகல் மலையாளப்பட ஊரில் கேபிள் டிவி நடத்திக்கொண்டிருக்கிறார் மோகன்லால் (ஜார்ஜ் குட்டி ).அருகில் போலீஸ் ஸ்டேசனும் டீக்கடையும் இருக்கிறது.பத்து சொச்சம் மக்களும் இருகிறார்கள்.அங்கு இருக்கும் லஞ்ச போலீஸ் சகாதேவனை தைரியமாக கிண்டலடிக்கிறார்.சினிமா பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் மோகன்லால் நடைமுறை வாழ்வில் வரும் சிக்கல்களுக்கு கூட சினிமா காட்சிகளை யோசித்து பார்த்து தீர்வு சொல்கிறார் (உதாரணத்திற்கு "மறைத்து வைக்கப்பட்ட ஒருவரது மகனை கண்டுபிடிக்க ஹேபியஸ் கார்பஸ் மனு போட சொல்வது" மாதிரி தீர்வுகளை கூட )
              கேபிளில் போடும் நல்ல சினிமா பார்க்கும் ஆவலில் சில நாட்கள்  கேபிள் டிவி ஆபீசிலேயே தங்கிக்கொள்கிறார் மோகன்லால் அவரது குடும்பம் அங்கிருந்து சற்று தள்ளி இன்னொரு மலையாள டிபிகல் பச்சை பசுமை கிராமத்தில் இருக்கிறது.செல்போன் வைத்துக்கொள்ளாத மோகன்லாலை  (டவர் பிரச்சனையாம் ) மழை பெய்யும்போது அலுவலக லேண்ட்லைன் அவுட் ஆப் ஆர்டர் ஆனால் தொடர்புகொள்ள முடியாது.5 ஏக்கர் தோட்டத்துடன் உள்ள தன் வீட்டில் மோகன்லாலுக்கு வயதுக்கு வந்த பள்ளிக்கு செல்லும் பெரிய மகளும் (அஞ்சு),இன்னொரு சிறிய மகளும் இருக்கிறார்கள் மனைவியாக மீனா (ராணி ). மோகன்லால் ஒய்வு நேரத்தில் விவசாயமும் செய்கிறார்.தாய் தந்தையின்றி வளர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட மோகன்லாலுக்கு மீனாவின் தந்தை மற்றும் குடும்பத்தார் ஆதரவாக இருக்கிறார்கள் .

              கேபிள் டிவி அலுவலகத்துக்கு எதிரில் புதிய போலீஸ் ஸ்டேசன் கட்ட ஆரம்பிக்கிறார்கள்.அப்போது மோகன்லாலின் நண்பரான ஸ்டேசன் கட்டிட கான்ட்ராக்டரை லஞ்ச போலீஸ் சகாதேவன் மிரட்ட மோகன்லால் எதிர்த்து குரல்கொடுக்க போலீசுக்கும் லாலுக்கும்  முட்டல் ஆரம்பிக்கிறது . லாலேட்டனின் பெரிய மகள் அனைத்து பள்ளிகளும் பங்கேற்கும் ஒரு விழாவில் பங்கேற்க செல்கிறாள்.விழா முடிந்து திரும்பிவரும் அடுத்த நாளே ஒருவன் பெண்களை வளைத்து வளைத்து வீடியோ ,போட்டோ எடுத்ததை மீனா ,லாலேட்டனிடம் சொல்கிறாள் அவன் ஒரு போலீஸ்'ஐ ஜியின் மகன் (வருண் ) என்றும் சொல்கிறாள் ,மீனா மகளை கண்டிக்கிறார் .
             அன்று மோகன்லாலின் இரண்டு மகள்களும் கடைக்கு  சென்று திரும்ப வரும்போது பெண்களை வீடியோ எடுத்த வருணை சந்திக்கிறாள் அஞ்சு .அவன் மோகன்லாலின் பெரிய மகள் குளிக்கும் வீடியோவை அவளுக்கு தெரியாமல் எடுத்து வைத்து அதை அவன் நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டுகிறான்.அதை நெட்டில் போட்டு பரப்பாமல் இருக்க ஒரு இரவு அவளுடன்  கழிக்கவேண்டும் என்கிறான்.,இரவு வருகிறேன் என சொல்லி செல்கிறான்.
             இரவு அடைமழையில் அந்த பெண்ணை அடைய வருண் வருகிறான். அவனிடம் பேசி பிரச்சனையை தீர்க்க முயல்கிறார் மீனா. அவன் மீனாவையே கேட்க, கோபமுற்ற மூத்த மகள் அவன் தலையில் இரும்பு ராடால் அடிக்க செத்துப்போகிறான் வருண், அவள் குளிக்கும் வீடியோ இருக்கும் அவனுடைய செல்போனையும் அடித்து உடைத்து விடுகிறாள் அஞ்சு .இருவரும் சேர்ந்து அவனை தோட்டத்திலேயே புதைத்து விடுகின்றனர் .காலையில் வீட்டுக்கு வரும் மோகன்லால் நடந்த சம்பவம் தெரிந்து குழப்பத்துடன் நிற்க "இடைவேளை"
            மோகன்லால் அவர்களை ஆறுதல் படுத்திவிட்டு ,தன் சினிமா மூளையை பயன்படுத்தி யோசிக்கிறார்.வருணின் சிம்மை எடுத்துக் கொள்கிறார்.வருணின் சிம்கார்டுக்கு புதிய போன் வாங்கி அதை ஆன் செய்யும் போது வருணின் தாயான கீதா பிரபாகர்.ஐ.ஜி வருணின்  செல்போனுக்கு call  செய்கிறார் . மோகன்லால் call-ஐ அட்டெண்ட் செய்தாரா, சினிமா மூளையை பயன்படுத்தி தப்பித்தாரா ,தடயங்களை அழித்தாரா என்பதும்  திரைக்கதை ட்விஸ்ட்கள் ...


                  மோகன்லால் விரோத ஏட்டு சகாதேவன் மோகன்லாலை அந்த கேஸில் சிக்கவைக்க பார்க்கிறார் .வருணின் அம்மா ஐ ஜி விசாரணையை ஆரம்பிக்க சூடுபிடிக்கிறது ஆட்டம் . ஐ.ஜி யாக வரும் "ஆஷா சரத்" கலக்கியிருக்கிறார், கிட்டத்தட்ட மோகன்லாலுக்கு இணையான கேரக்டர் என்றும் சொல்லலாம் .கோபமும்,வன்மமும் , மகனை காணாத ஏக்கமுமாக விசாரணை செய்யும் வித்தியாசமான தாய் புதுசு (தமிழில் குயிலி,ரம்யா கிருஷ்ணன்,ராதிகா நடிக்கலாம்) ...லால் வீட்டுக்கு போலீஸ் ஜீப் வரும் போது நம்மையும்  பதைபதைக்க வைக்கிறார் இயக்குனர் .
                 மோகன்லால் சிக்கினாரா ?!! லால் குடும்பம் என்னவானது , மோகன்லாலின் குழந்தைகளின் எதிர்காலம் என்னவானது என்பதே மீதி படத்தின் சுவாரசியம் மிகுந்த  திரைக்கதையமைப்பு.மோகன்லால் & குடும்பம் சிக்கிக்கொள்ளக்கூடாது என நினைக்கவைக்கும் , இறந்த வருணின் பெற்றோர் மீதும் பரிதாபத்தை வரவைக்கும் திரைக்கதை மூலம் ஜீத்து ஜோசப் ஜெயித்துவிட்டார்.
                படம் முழுவதுமே கூட 100 பேருக்கு மேல் வரவே இல்லை ,டிபிகல் மலையாளப்படம்.ஆகா ஓஹோ படமும் இல்லை ,கொஞ்சம் வித்தியாசமான படம் அவ்வளவே .ஆனால்  மோகன்லால் அசாத்தியமான உடல் மொழியின் மூலம் மொத்த படத்தையும் தூக்கிச்செல்கிறார் , மொத்ததுல

                                      "கலக்கீட்டீங்க மோகன்லால் சார் "

          ஆனால் இதன் ரீமேக்கில் கமல் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதை அப்படியே கமலை வைத்து எடுக்கமுடியாது.அப்படி எடுத்தால் நன்றாக இருக்குமா?! மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என பல கேள்விகள் (என்னோட சாய்ஸ் சரத்,விஜயகாந்த்,சத்யராஜ் ) கமல்  "மகாநதி"யில் வந்த கமலாக மீண்டும் வருவார் என எதிர்பார்க்கிறேன்.

(மலையாளப்படத்தை இங்க்லீஷ் சப் டைட்டிலுடன் பார்த்ததால் விமர்சனத்தில் சில தவறுகள்வந்திருக்கும்.அதை குறிப்பிடவும் சரி செய்து கொள்கிறேன்  )

Sunday 27 April 2014

எனது பார்வையில் எனது சிறந்த ட்விட்டுகள் -பாகம் 1

           இனி ப்ளாக்கில் அதிகம் எழுதலாம் என்று நினைக்கும் போதெல்லாம் ட்விட்டர்ல் இருக்கும் 1500த்தி சொச்சம் ஃபாலோயர்களை இழந்து விடுவேனோ என்று பயம் வருவதால் எழுதி முடித்து ப்ளாக்கில் போடாமல் உள்ள பதிவுகள் மூன்றைத்தொடும்.என் சில பதிவுகளுக்கு எதிர்பார்க்காத ஆதரவும்  கிடைத்திருக்கிறது.(போன பதிவுக்கு ரெஸ்பான்ஸ் சுமார்தான்)
பதிவு எழுதிமுடித்தவுடனேயே நம்ம @get2karthik க்கு மென்சன் போட்டு கருத்துகளை தெரிவிக்கவும்ன்னு சொல்லுவேன் (டீசண்டா "படிச்சிட்டு RT பண்ணுன்னு" அர்த்தம் ) ஆரம்பத்தில் RT பண்ணின கார்த்திக் அப்புறம் போன்ல கூப்பிட்டு கருத்தை சொல்ற அளவுக்கு உஷாராயிட்டாப்டி.
         ஒரு கரண்ட் இல்லா போழுதில் புத்தகம் வாசிக்கவும் தோணாத கணத்தில் முழங்காலில் ஏற்பட்ட அரிப்பின் மையப்புள்ளியை கண்டுபிடித்து சுகமாக சொறிய ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் முழங்கால் ரோஸ் பவுடரை அப்பியது போல் ஆனது.அப்படி ஒரு சுய சொறிதலில் நம்மோட சிறந்த ட்விட்டுகளை (!!!!!!!!!!!!!!!) தொகுத்து ஒரு பதிவாக போடலாமே என முடிவெடுத்தேன். இதனால நம்ம ட்விட்டர் ஃபாலோயர்களுக்கும் ரிஸ்க் கம்மி பாருங்க.



தெனாலிசோமன் @i_thenali
எனக்கு கவிதை எழுததெரியாது என்றேன் நான், தெரியும் என்றாள் என் மனைவி, என் மகனை காட்டி

நிறைய பேர் ஆட்டோகிராப் பட டி வி டி வைத்திருப்பது வெறும் படம் பார்க்க மட்டும் அல்ல அது சிலரையும் சிலவற்றையும் நினைவுபடுத்துகிறது

தவமாய் தவமிருந்து படம் மட்டும் வராமல் போயிருந்தால் பலருக்கு அவர்கள் அப்பனின் அருமை தெரியாமலே போயிருக்கும் -என்னையும் சேர்த்து

யாரையும் சட்டென்று கிண்டல் அடித்துவிடும் நாம் நம்முடைய இசைராஜாவை மட்டும் கிண்டலடிக்காததன் காரணம் அவர் நம்தாயின் ஆணுருவம் என்பதால்தான்

நான் எவ்வளவு திட்டியும் கோபப்படாத ஒருவருடன் கைகுலுக்க முயன்றேன் அதற்குள் மற்றவர்கள் அவசரப்பட்டு அவரை புதைத்து விட்டார்கள்

ஆண்களில் தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று தனிபிரிவு இல்லை வாய்ப்புகிடைத்தவர்கள், வாய்ப்புகிடைக்காதவர்கள் என்று இருபிரிவே உண்டு

மவுண்ட்பேட்டனின் மகளே "என்னுடைய தந்தை நேரு அல்ல" என்று விளக்கம்கொடுக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது இந்தியபிரதம குடும்பத்தின் மரியாதை!

கடவுளை மறுப்பவர்கள் பெரும்பாலும் தன்னுடைய தவறுக்கு அடுத்தவரை காரணமாக சொல்வது இல்லை

ரோஜாவோட வயசையும் நேருவோட வயசையும் பாக்கிறப்போ அவரு ரோஜாவை வெச்சுகிட்டிருந்தாருன்னு நம்பவே முடியல !!

எனக்கு தெரிந்தவரை ஆண்களுக்கு ஹார்ட்அட்டாக்யும் பெண்களுக்கு கேன்சரையும் பெரும்பான்மையாக ஒதுக்கிவைத்து வேடிக்கைபார்க்கிறது இயற்கை!!

உங்கள் மழலையின் கையால் ஊட்டிவிடப்படும் எந்தவொரு உணவும் அமிர்தம்தான் !!!

மனைவியுடன் எந்த கருத்துவேறுபடும் இல்லாமல் ஒருவன் வாழ்கிறான் என்றால்,அவன் அந்தபெண்ணுடன் முழுமையாக வாழவில்லை என்றும்கொள்ளலாம்!

தவறை உணர்பவர்கள் வாழ்க்கையில் தவறே செய்யமாட்டார்கள்:கருணாநிதி# பயத்துல மண்டைகுழம்பி தலைவர் தனக்குதானே அறிவுரை சொல்லிக்கிறார்!

பெரும்பாலும் தான் தோல்வியடைந்த அனுபவங்களே மற்றவர்களுக்கு முன் அனுபவமாக சொல்லப்படுகிறது !

மரணதண்டனை இல்லாத நாடு என்று ஒன்று உலகத்தில் இல்லவே இல்லை ஏனென்றால் எல்லா நாட்டிலும் திருமணம் இன்னும் வழக்கத்தில்தான் உள்ளது!

நமக்கு தேவைபடும்போது கடவுள் உதவிசெய்யவேண்டும் என்பதும் ,நாம் தவறுசெய்யும்போது கடவுள் கண்டுகொள்ளகூடாது என்பதும் விசித்ரமே!

 
கணவன், மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க ஒரேவழி- கல்யாணம் பண்ணிக்கொள்ளாமலே இருப்பதுதான்!

ஆக்சிடென்ட் ஆனவர்கள் அனைவரும் உடம்பில்காயத்துடன் இருக்கவேண்டிய அவசியமில்லை,பட்டுத்துணியணிந்து கல்யாணமாலையுடனும் இருக்கலாம்!

இன்றைய இளைஞர்களின் அடையாளமாக cellphone,கம்ப்யூட்டர், கார் உடன் செல்லதொப்பையும் அடையாளமாக ஆகிவருவது வருந்ததக்கது!!

விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்கத்தா என்று ஜெயலலிதாவுக்கு தீம்சாங் போட்டுகொடுத்த பெருந்தன்மை கலைஞர் குடும்பத்தைவிட யாருக்குவரும்?

இனிய இல்லறத்துக்கு பெரிய சூத்திரங்கள் தேவையில்லை, ஆனால் விட்டுகொடுத்து போகுதல் என்பதே அடிப்படை சூத்திரமாக இருக்கிறது!

ஒருவனின் வாழ்நாள் அவனுடைய பதின்மவயது நிகழ்வுகளினால் கட்டமைக்கப்படுகிறது !!

பேறுகாலம் 10 மாதம் என்பதால் பரவாயில்லை 5 மாதமாக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் டபுள் செஞ்சுரி அடித்திருப்பார்கள்!!


ஒருவன் என்னதான் உலகஇசையால் சூழப்பட்டிருந்தாலும் அவன்மனதுக்கு என்றும் இதமாகஇருப்பது அவன் தன் பதின்மவயதில் கேட்டபாடல்கள்தான்#எனக்கு90s

கடைசிவரை என் தவறுக்கு கண்ணீரை காட்டாமல் இறந்து விட வேண்டும் என்பது என் விருப்பம்!!!

ஒருவனுக்கு புத்தகத்தை விட அதிக வாசிப்பைகொடுப்பது அவன் தாய், தந்தையின் வாழ்க்கைமுறைதான் !

கல்யாணத்திற்கு முன் 'ஏஞ்சல்' என்று நினைத்த மனம்தான், கல்யாணத்திற்கு பின் சிலநேரங்களில் 'டெவில்' என்றும் சொல்லவைக்கிறது!!

நெடுந்தூரசாலை பயணங்களில் என்னுடன் வர ராஜாவை தவிர வேறு சிறந்த நண்பன் எனக்கு இல்லை!!!

கலைஞர் பேச்சை திமுக-காரங்க கூட கேட்குறதில்லை,, கடல்ல வீசிதான் பாருங்களேன்? கட்டுமரமா மிதக்குறாருன்னு பார்த்திடுவோம்#

என்மகனிடம் என்னை கட்டிபிடிக்க சொல்லிகேட்டால், அவன் நடுவில் படுத்துக்கொண்டு இருவரின் மேலும் கையைபோட்டு பொதுவுடைமை செய்கிறான் ! #மகனதிகாரம் 

தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த சொம்பை திருடிக்கொண்டு போவதுபோல்தான், நாம் பூமியை உபயோகிக்காமல் களவாடி கொண்டிருக்கிறோம்!!
 
சங்கடமான சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக மாற்றிகொள்பவனே புத்திசாலி என அறியப்படுகிறான்!  

அமைதிப்படையில் சத்யராஜ் கழட்டிபோட்ட அண்டர்வேரே இன்றும் அரசியலின் மிகசிறந்த சூத்திரமாக இருக்கிறது 

நாம் நினைத்துகொண்டிருக்கும் unsung ஹீரோஸ் வரிசையில் அவரவர் தந்தையையும் சேர்த்து கொள்ளவேண்டும் !

யோகிகளும் தத்துவபுத்தகங்களும் உணர்த்தாத வாழ்க்கையை சட்டென்று ரோட்டில் அடிபட்டு செத்துபோகும் நாய் உணர்த்திவிடுகிறது சில தருணங்களில்!

சிறு குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதற்காகவே பெண்களுக்கு கோயில்கட்டி கும்பிடவேண்டும்

பல மனைவிகள் தன் கணவனை அதிகமாக‌ கண்டுகொள்ளாமல் விட காரணம் தன்னைதவிர எந்தபெண்ணாலும் இவனுடன் குடும்பம் நடத்தமுடியாது என்பதே!

தூக்கத்தின் இடையில்எழுந்து உறங்கும் குழந்தையின் காதுவரை போர்த்திவிட்டு நெற்றியில் முத்தம்கொடுப்பதில் தெரியும்தந்தையின் பரிவு!

வீட்டிற்கு பேய்வந்து கொல்லும் கிரட்ஜ் படத்திற்கும், ஒவ்வொருவரின் கல்யாண கேசட்டிற்கும் எந்தசம்பந்தமும்இல்லை#தைரியமாக பார்க்கலாம்

மனைவி கஷ்டப்பட்டு சமைத்து அதை நாம் சாப்பிடும்போது அருகிலேயே நின்று,நல்லாருக்கா?என கேட்கும்போது "சுமார்தான்"என சொல்லமுடிவதில்லை

அதிகம் பேசாமல் இருப்பவர்கள் புத்திசாலியாக இருக்கவேண்டிய அவசியமில்லை,நினைப்பதை சரியாக சொல்லத்தெரியாதவர்களாககூட இருக்கலாம்!

திருமணமான பெண்கள் 100-க்கு 2 வீடுகளில் துன்புறுத்தப்படுகிறார்கள்!
மீதி 98 வீடுகளிலும் ஆண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்!!

அதிக சந்தோஷத்தில் இருக்கும்போது வாக்குறுதி கொடுக்காதே, அதிக கோபத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதே! -யாரோ

அடுத்தஜென்மத்தில் நான் ஆணாக இவர் பெண்ணாக பிறந்து நான்அனுபவிப்பதை இவரும் அனுபவிக்கவேண்டும் என்றவேண்டுதலும் சில மனைவிகளுக்கு உண்டு!

தன்னுடைய உண்மையான பாசத்தை மகனுக்கு கடைசிவரை சொல்லாமலே பல தந்தைகள் இறந்துவிடுகின்றனர் #அந்தவகையில் பெண்கள் கொடுத்துவைத்தவர்கள்!

தான் நல்லவன் என்று ஒருவன் நினைப்பதற்கு வைத்துகொள்ளும் அளவுகோல் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது !!

பெண்களின் உலகம் என்பது சில புத்தகங்களாலும், சில நண்பர்களாலும், நல்ல சமையலிலும் நல்ல இசையாலும் இயங்குகிறது!

Tuesday 1 April 2014

தனியாக விடமாட்டேன்

அருணுக்கு காலையில் செல்போனில் வந்த செய்தி நெஞ்சை அழுத்தியது...

அது அவனது 5 வருட காதலுக்கு பின் ,வரும் ஜூனில் திருமணத்திற்கு நிச்சயத்திருக்கும் காதலி அபர்ணா , காலையில் ஜிம்முக்கு சென்றுவிட்டு வரும்வழியில் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டாள் என்பதே!



அவன் கதறி அழவில்லை  ,இந்த தகவல் பொய்யாக இருக்க வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டு அவனே காரை எடுத்துகொண்டு புறப்பட்டான்..

வழியெல்லாம் அபர்ணாவுடன் இரவில் பேசியது காதில் ஒலித்துகொண்டே இருந்தது.. விழியோரம் நீர் வழிய செல்போனில் ஸ்கிரீன்சேவராக இருந்த அபர்ணாவை பார்த்த போது "அபு" என பெருங்குரலில் கத்தினான். அது கதவுகள்  மூடப்பட்ட காரெங்கும் எதிரொலித்து அடங்கியது...

அவன் அபர்ணாவின் வீட்டை அடைந்தபோது கூடியிருந்த கூட்டம் அவளின் மரணத்தை சொல்லியது..

வாசலில் நின்றிருந்த அவள் தந்தை "மாப்ளே உங்ககூட சேர்ந்து வாழ அவளுக்கு கொடுத்து வைக்கலியே" என சொல்லி கதறி அழுதபோது அவனும் உடைந்து அழுதான்..

மரணித்த அவளின் முகத்தை பார்க்க தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் பார்த்தபோது "அபு" தூங்குவதை போலவே மரணித்திருந்தாள். நெற்றியில் லேசான ரத்தக்கோடுகள்..

அவளை உற்று பார்த்தபோது அவள் உதடு லேசாக அசைவது தெரிந்தது..பின் அவள் கால் பெருவிரலும் அசைந்தது..

மாமா "அபு" சாகலை உயிரோடுதான் இருக்கா ,என அவன் கத்தியபோது அவனுக்கு குரல் வரவில்லை..நெஞ்சடைத்தது... அங்கிருந்த கூட்டம் அவனை அதிர்ச்சியாக  பார்த்தது..

"அபு" என பெருங்குரலில் அவன் அழைக்க அவள் திடுக்கிட்டு பெருந்தூக்கத்தில் இருந்து எழுந்தவளாக ..
           "அருண்,,வந்துட்டீங்களா ,உங்கள விட்டுட்டு போயிட்டேன்னு நினைச்சேன்..," "ம்...வந்துட்டேன்,உன்னை தனியா போகவிடமாட்டேன் " என்ற அருண் அவளின் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டான்...

திடீரென கூட்டம் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது...

"அய்யோ கல்யாணபொண்ணு செத்த அதிர்ச்சியில் மாப்பிள்ளையும் செத்துட்டாரே..." என்று சொல்லி அழுதது கூட்டம் ...

அப்பொழுது அருண் ,அபர்ணா இருவரின் ஆத்மாக்களும் அங்கு அழுதுகொண்டிருந்தவர்களை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்..!


Friday 28 March 2014

லவ்வர்ஸ் ( பாதி உண்மை )

                 என் பேரு ரகுநாதன்.நான் இப்ப வந்திருக்கிறது வெள்ளியங்கிரி மலையடிவாரத்துல இருக்கிற தியான மையத்துக்கு.கொஞ்சம் மனசு சரியில்லாதப்ப எல்லாம் இப்படி வருவேன்...எப்போ மனசு சரியில்லாம போகும்ன்னா வீட்டுல மனைவி நான் செஞ்ச தப்பை கண்டுபிடிச்சு சண்டை போடுறப்ப எல்லாம்..நேத்து நான் ஆஃபீஸ் மீட்டிங்குன்னு சொல்லிட்டு ஃப்ரெண்ட் வீட்டுல தண்ணியடிசிட்டு மல்லாந்துட்டேன்..அத அவ கண்டுபிடிக்க ,இப்ப நான் இங்க வந்தாச்சு .. எனக்கு திருமணத்தின் மீதான வெறுப்பு அதிகரித்துவிட்டது.
                                   தியானம் செய்து முடித்தவுடன் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன்...அங்கு ஒரு ஜோடி எனக்கு அருகில் இருந்த டேபிளில் வந்தமர்ந்தார்கள்..அவர்களை தியான மையத்திலேயே கவனித்தேன்.அருகருகே  அமைதியாகஅமர்ந்திருந்தனர் .வயது இருவருக்கும் 20 களை கடந்து 25 க்குள் ஊசாலாடிக்கொண்டிருந்தது. அவர்களின் சாப்பிட ஆர்டர் செய்தபோதுதான் கவனித்தேன்..இருவரும் வெவ்வேறு வகை உணவில் ஒரு பிளேட் மட்டுமே ஆர்டர் செய்து, அதை ஷேர் செய்து சாப்பிட்டார்கள்..ஒருவரின் ரசனையை மற்றவர் புரிந்துகொண்ட ஜோடியாக தெரிந்தது.புதுக்கல்யாண ஜோடி என்பது என் அனுமானம். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட ஆரம்பித்தபோது அந்த ஜோடி மீது எனக்கு மரியாதை வந்துவிட்டது..பின்ன விட்டுகொடுத்து ,அடுத்தவரின் ரசனையை புரிந்துகொண்டு வாழும் ஜோடி அல்லவா ..அவர்கள் பேசிக்கொள்வதை கேட்கும் ஆவல் வந்தது..


                     நான் முலாம்பழ ஜூஸ் குடிக்கும்போது ,
அவர்களின் சம்பாஷனையை கேட்க , தப்புன்னு தெரிஞ்சும்  என் காதை அவர்களைசுற்றி அனுப்பினேன்..
"நாம கல்யாணதுக்கு அப்புறமும் இப்படியே இருப்போமா" அவன்
"ம்"அவள்,
"அட இன்னும் கல்யாணம் ஆகல போல, லவ்வர்ஸ்" என் காது,
"ok, "உன்னோட" கல்யாணத்துக்கு அப்புறமும் என்னை மறந்துடாத ,
எப்பவும் இப்டியே இருப்போம்" அவன்,
"பார்க்கலாம்"அவள்
ஷாக்காகி "த்தூ" என துப்பிவிட்டு என் காது என்னிடமே வந்தது.
        நான் 180 டிகிரியில் கழுத்தை திருப்பி அவர்களை முறைக்க ஐஸ்கிரீமை அப்படியே வைத்துவிட்டு எஸ்ஸானார்கள் நவீன காதலர்கள்."இனிமே பொண்டாட்டி திட்டினாலும் வீட்டவிட்டு வெளியே வரக்கூடாது.அங்கயே இருந்து அஹிம்சா முறைல நல்லபேர் வாங்கிடனும், வெளில வந்தா புத்திதான் கெட்டுபோகும்" என நினைத்தவாறே நான் பில் செட்டில் செய்ய எழுந்தேன்.