Tuesday 1 April 2014

தனியாக விடமாட்டேன்

அருணுக்கு காலையில் செல்போனில் வந்த செய்தி நெஞ்சை அழுத்தியது...

அது அவனது 5 வருட காதலுக்கு பின் ,வரும் ஜூனில் திருமணத்திற்கு நிச்சயத்திருக்கும் காதலி அபர்ணா , காலையில் ஜிம்முக்கு சென்றுவிட்டு வரும்வழியில் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டாள் என்பதே!



அவன் கதறி அழவில்லை  ,இந்த தகவல் பொய்யாக இருக்க வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டு அவனே காரை எடுத்துகொண்டு புறப்பட்டான்..

வழியெல்லாம் அபர்ணாவுடன் இரவில் பேசியது காதில் ஒலித்துகொண்டே இருந்தது.. விழியோரம் நீர் வழிய செல்போனில் ஸ்கிரீன்சேவராக இருந்த அபர்ணாவை பார்த்த போது "அபு" என பெருங்குரலில் கத்தினான். அது கதவுகள்  மூடப்பட்ட காரெங்கும் எதிரொலித்து அடங்கியது...

அவன் அபர்ணாவின் வீட்டை அடைந்தபோது கூடியிருந்த கூட்டம் அவளின் மரணத்தை சொல்லியது..

வாசலில் நின்றிருந்த அவள் தந்தை "மாப்ளே உங்ககூட சேர்ந்து வாழ அவளுக்கு கொடுத்து வைக்கலியே" என சொல்லி கதறி அழுதபோது அவனும் உடைந்து அழுதான்..

மரணித்த அவளின் முகத்தை பார்க்க தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் பார்த்தபோது "அபு" தூங்குவதை போலவே மரணித்திருந்தாள். நெற்றியில் லேசான ரத்தக்கோடுகள்..

அவளை உற்று பார்த்தபோது அவள் உதடு லேசாக அசைவது தெரிந்தது..பின் அவள் கால் பெருவிரலும் அசைந்தது..

மாமா "அபு" சாகலை உயிரோடுதான் இருக்கா ,என அவன் கத்தியபோது அவனுக்கு குரல் வரவில்லை..நெஞ்சடைத்தது... அங்கிருந்த கூட்டம் அவனை அதிர்ச்சியாக  பார்த்தது..

"அபு" என பெருங்குரலில் அவன் அழைக்க அவள் திடுக்கிட்டு பெருந்தூக்கத்தில் இருந்து எழுந்தவளாக ..
           "அருண்,,வந்துட்டீங்களா ,உங்கள விட்டுட்டு போயிட்டேன்னு நினைச்சேன்..," "ம்...வந்துட்டேன்,உன்னை தனியா போகவிடமாட்டேன் " என்ற அருண் அவளின் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டான்...

திடீரென கூட்டம் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது...

"அய்யோ கல்யாணபொண்ணு செத்த அதிர்ச்சியில் மாப்பிள்ளையும் செத்துட்டாரே..." என்று சொல்லி அழுதது கூட்டம் ...

அப்பொழுது அருண் ,அபர்ணா இருவரின் ஆத்மாக்களும் அங்கு அழுதுகொண்டிருந்தவர்களை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்..!


4 comments: