Friday 13 September 2013

பூனை

               அப்போது எனக்கு 19 வயசிருக்கும் அப்போதுதான் பூனையை தொட்டு பார்க்க தூக்கி கொஞ்ச வாய்ப்பு கிடைத்தது.எங்கள் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் என எதுவும் இல்லை.கொஞ்சம் தெரு நாய்களை அருகில் சென்று பார்த்ததோடு சரி..என் ஒண்ணுவிட்ட சின்னம்மாவின் கணவர் வெறிநாய் கடித்து இறந்திருந்த காரணத்தால் நாய்கள் மீதான பயம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
            பூனைகள் மீது அவ்வளவு பயம் கிடையாது எனினும் எனக்கு ஒவ்வாமை இருந்ததது, பூனையின் முடிகள் அதைஅதிகப்படுத்தும் என்ற காரணத்தால் அதனருகில் செல்லவோ தூக்கி கொஞ்சவோ கூடாது என அப்பா சொல்லி வைத்திருந்தார். நானும் அதை கடைபிடித்தேன்.
                அப்போது நான் எலக்டிரிக்கல்ஸ் கடையில் மாதம் 500 ரூ சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன் ..கடையின் முதலாளி ஒரு பூனைப்பிரியர் என சேர்ந்த பிறகு தெரிந்துகொண்டேன்...முன்னமே தெரிந்திருந்தால் கொஞ்சம் யோசித்திருப்பேன்...ஆனாலும் அது நல்ல வேலையாக பட்டதால் பூனையை சகித்துகொள்ள முடிவு செய்தேன்...ஆரம்பத்தில் பூனையும் என்னை கண்டு கொள்ளவில்லை.. முதலாளி உள்ளே வந்து "பிங்கி" என அழைத்தால் பரண் மீதிருந்து ஸ்பீக்கர்கள் ரேடியோக்கள் அட்டை பெட்டிகள் என லாவகமாக கால் வைத்து  கீழிறங்கி  ( அதை பார்க்க நல்லா இருக்கும் ) அவரை வந்தடையும்.அவரும் பூனையுடைய கிண்ணத்தில் அது நேற்று சாப்பிட்டது எதாவது  மீதமிருந்தால் அதை கழுவிவிட்டு ( சில நேரங்களில் நானும் கழுவி கொடுப்பேன்) கொண்டு வந்திருக்கும் பாலை ஊற்றுவார்.பூனையும் அதற்காக காத்திருந்தது போல குடிக்கும்,சில நேரங்களில் மிச்சமும் வைக்கும்..மீசையில் பால் ஒட்டும்படி பால் குடித்து முடிப்பாள் பிங்கி.
             முதலாளியின் மகனும் பூனைப்பிரியர்.அவர் ஒரு படி மேலே போய் பூனையின் வாயில் வாய் வைத்து கொஞ்சுவார்.ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் அருவருப்பாக பட்டது...பிறகு அதிக அன்பு சுத்தம் பத்தம் பார்ப்பதில்லை என தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் நான் கடைக்குள்ளே சென்றால் பூனை என்னை பார்த்ததும் ஓடி ஒளிந்து கொள்ளும்.எனக்கும் அப்பாடா என நிம்மதி..கொஞ்ச நாளில் என்னை அங்கீகரித்ததோ என்னவோ என்னை கண்டு ஓடுவதில்லை...
                ஒரு நாள் முதலாளி கடைக்கு வராததால் நானே கடையில் பால் வாங்கி அதன் கிண்ணத்தை கழுவி ஊற்றினேன்.அப்போது நான் அருகில் இருந்தும் என்னை இடைஞ்சலாக நினைக்காமல் பால் குடிக்க ஆரம்பித்தது.அன்று லேசாக அதன் தலையை தடவிக்கொடுத்தேன்.அது ஒன்றும் செய்யவில்லை..அன்று இரவு லேசாக மூச்சுவிட சிரமமாக இருப்பது போல் தோன்றியது.பின்னாட்களில் இந்த எண்ணம் தோன்றவில்லை .
                அதன் பிறகு பூனை எனக்கும் கொஞ்சம் பிரியமானதாக ஆகிவிட்டது..நான் அழைக்கும்போது அது எலிவேட்டையில் கொஞ்சம் பிஸியாக இருந்தாலும் நான் இங்கே இருக்கிறேன் என ஒரு அட்டெனன்ஸ்ஸை போட்டுவிட்டு வேட்டையை தொடரும்...நான் நிற்கும் போது கால்களுக்குள் புகுந்து வரும் விளையாட்டை என்னிடம் விளையாடும் வரை என்னிடம் நெருக்கமானது...
               நிற்க நான் தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் பூனை இதுவல்ல...அது அடுத்த வரியில் வருது.....
   "பிங்கி"யுடன் பழக பழக நாமும் ஒரு பூனை வளர்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.அதற்கு ரொம்பநாள் காத்திருக்க தேவையில்லாமல் ஒருநாள் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போகும் சாலையோரத்தில் ஒரு குட்டி பூனையை கண்டேன்..
 

 
              அருகில் தாய் பூனையோ மற்ற குட்டி பூனைகளோ இல்லை தனித்துவிடப்பட்ட குட்டி..பால் வெள்ளை நிறத்தில் லேசான சாம்பல் மேகங்கள் படிந்தது போன்ற தோற்றத்தில் மியாவ் என்றபடி நின்றிருந்தது.நான் பூனை காக்கும் கடவுள் போல என்னை நினைத்துக்கொண்டு அந்த பூனையை  அழகாக கையில் அடுத்து அதற்கு வலிக்காமல் இருக்குமளவுக்கு பிடிகொடுத்து,போட்டேன்   பீடுநடை வீட்டை நோக்கி...மதியசாப்பாட்டுக்கு பூனையுடன் வந்திருப்பதை பார்த்து அம்மாவுக்கு அதிர்ச்சி.
                "என்னடாபூனையை தூக்கிட்டு வந்திருக்க ,உங்க நைனா பார்த்தா சத்தம் போடுவாரே"ன்னு சொன்னாங்க..அப்புறம் பூனைக்கு ஊத்தறதுக்கு பாலும் எனக்கு சாப்பாடும் கொடுத்தாங்க..நான் சாப்பிட்டு விட்டு கடைக்கு வந்தேன்..அம்மா நைட் வரைக்கும் பூனையை பார்த்துகிட்டாங்க. அப்புறம் நான் போய் பூனைக்கு மறுபடியும் பால் ஊற்றி வைத்தேன்,குடிச்சது..எதோ காரணத்தினால் பூனை கத்தியபடியே இருந்தது...நான் ஒரு பெரிய பின்னல் கூடையை எடுத்து பூனையை மூடி வைத்தேன்.
              அப்பா வந்தார் சாப்பிடும் போது கவனிக்கவில்லை போல, சாப்பிட்டு முடிந்து எல்லாரும் படுத்தும்விட்டோம். நான் பூனையின் சத்தத்தில் கலவரமாய் முழித்தபடி படுத்திருந்தேன்.பூனை மட்டும் தூங்காமல் கத்திகொண்டே இருந்தது.. தூங்கிட்டிருந்த அப்பா எந்திருச்சி உட்கார்ந்துட்டார்.."என்னது பூனை சத்தம்" என கேட்கவும், அம்மா விவரத்தை சொல்லிட்டாங்க..அப்பா என்னை பார்த்து "நாளைக்கு காலைல இந்த பூனை இங்க இருக்க கூடாது ,அவ்ளோதான்" என சொல்லிவிட்டு படுத்துகொண்டார்..அப்பாவின் கோபம் எனக்கு தெரியும் மண்ணில் விளையாடுவதை பார்த்துவிட்டாலே வேப்பங்குச்சியை ஒடித்து அதால் அடித்து முழங்கால்களை வீங்கவைத்து விடுவார்...நான் பூனையை வெளியே விட்டு விட மனதளவில் தயாரானேன்..
             எனக்கும் பூனைக்கும் அடுத்தநாள் சீக்கிரமே விடிந்தது, ஞாயிற்றுக்கிழமை என நினைவு.பூனையை தூக்கி கொண்டு எங்கிருந்து எடுத்தேனோ அந்த இடத்துகே திரும்ப போனேன்...அங்கு அப்போதும் எந்த பூனையும் தென் படவில்லை...விடியற்காலையானதால் ரோட்டில் ஜன நடமாட்டம் அதிகமில்லை.நான் பூனையை  அந்த இடத்திலேயே கீழிறக்கி விட்டேன்.அது என்னை "ஏன் என்னை மறுபடியும் ரோட்டுல விடுற" என்பது போல ஒரு பார்வை பார்த்தது.நான் அதைகவனிக்காதது போல திரும்பி நடக்க ஆரம்பித்தேன்...."மியாவ் மியாவ் என என்னை பார்த்து அழைத்தபடி இருந்தது அந்த குட்டி பூனை..காதிருந்தும் செவிடனாய் நடந்தேன்..வெகுதூரம் "மியாவ் மியாவ்" ஈனஸ்வரத்தில் கேட்டுகொண்டிருந்ததை போல உணர்வு.
             இப்ப எனக்கு 32 வயசாகுது.இப்பவும் தூக்கம் பிடிக்காத இரவுகளிலும் , எதாவது சத்தம் வந்து உறக்கம் கலைத்து செல்லும் பொழுதுகளிலும்  அந்த பூனையின் "மியாவ்" சத்தம் மட்டும் ஈனஸ்வரத்தில் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.ஒரு  பாவச்செயலை செய்த வருத்தம் எனக்கு  இன்றும் இருக்கிறது.