Friday 20 December 2013

பிரியாணி

 

        இது கடந்த 4 வருடங்களில் நான் தியேட்டருக்கு சென்று ரசித்த ஐந்தாவது படம்.அதுவே நான் விமர்சனம் எழுதும் முதல் படமாகவும் வந்திருக்கிறது.ஒரு சில குடும்பங்களில் அனைவரும் ஒரே நடிகருக்கு மட்டும் ரசிகர்களாக இருப்பார்கள் அது போல் என் குடும்பத்தில் அனைவரும் ரசிகர்களாக இருக்கும் இயக்குனர் என்றால் அது வெங்கட் பிரபு-தான்.சென்னை-28 மூலம் தமிழ் சினிமாவுக்கு வேறு உத்தியில் கதை சொன்ன இயக்குனர் இப்ப மசாலா மணம் கமகமக்கும் "பிரியாணி"யை கிண்டியிருக்கிறார்..

      முதலில் யுவனுக்கு ( U1) 100 வது படத்துக்கான வாழ்த்துக்கள். பொறுப்புணர்ந்து பாடல்களையும் பின்ணணி இசையையும் தந்திருக்கிறார் "இளைய இசைஞானி"  ,"சிங்ககுட்டியாச்சே" !!!

        கதை - பாட்டில் ,பெண்களிடம் போதையாக இருக்கும் "சுகன்" என்கிற கார்த்திக்கு அவரது புத்திசாலித்தனத்தை பார்த்து  ஓவர் நைட்டில் கோடீஸ்வரனாகும் வாய்ப்பை தர (மருமகன் ஆக்கி கொள்ள ) விரும்புகிறார் நாசர்.அதை எதிர்க்கிறார் நாசரின் மூத்த மருமகன் "ராம்கி".நாசருடன் பார்டியில் கலந்துகொண்ட பிறகு சென்னைக்கு போகும் வழியில் பிரியாணி சாப்பிட ஆசைப்படுகிறார் கார்த்தி.அங்குவரும் ஒரு பெண்ணின் அழைப்பை ஏற்று அவரது ஹோட்டல் அறைக்கு சென்று தண்ணியடித்து "மிஸ்ஸிபி" நதியில் கலக்க முயற்சிக்கிறார்.
          காலையில் எழுந்து பார்த்தால் காரில் கிடக்கிறார்.அவரது காரில்
 நாசரின் பிணம், அவரது நண்பன் எங்கே ?,அவரை அழைத்து வந்த பெண் எங்கே?,நாசரை கொலை செய்தது யார்?,நாசரை கொலை செய்ததாக போலீஸ் ஏன்  கார்த்தியை துரத்துகிறது ? அத்தோடு நில்லாமல் கார்த்தியின் குடும்பத்தை அழிக்க நினைக்கும்  வில்லன்/வில்லி யார்??!!
 என்பதே பிரியாணி-யின் ஃபார்முலா.
           இந்த ஃபார்முலாக்களை சரி விகிதத்தில் தூவி பிரியாணி  கிண்டியிருக்கிறார்  வெங்கட் பிரபு.



       கார்த்தி இந்த படத்தில் இயக்குனரை நம்பி தன்னை ஒப்படைத்திருப்பது தெரிகிறது.பருத்திவீரன்,ஆ,ஒருவன் பாதிப்பில்லாத ஃப்ரெஷ் கார்த்தி .இயக்குனர் சொன்னதை சரிவர செய்து தன்னை ஒரு நடிகன் என நிரூபித்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகு மொத்தமே அவருக்கு இரண்டு அல்லது மூன்று காஸ்டியூம்தான் நினைக்கிறேன்.அந்த அளவுக்கு கோ-ஆப்ரைட் செய்து நடித்திருக்கிறார்.ஹன்சிகா கேரக்டருக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வேலை இல்லை எனினும் இந்த படத்துக்கு அவர் ஒகே-தான்.பிறகு பிரேம் ஜி வழக்கம்போல அண்ணன் சொல்லிக்கொடுத்ததை செய்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்.
        "ராம்கி" அப்படியே இருக்கிறார்.சில இடங்களில் முதிர்ச்சி தெரிகிறது.அவருக்கு இன்னும் கொஞ்சம் டைமிங் வரவேண்டும் என நினைக்கிறேன் .பணக்கார மாப்பிள்ளை ராம்கிக்கு நண்பனாக டெரர் முகத்துடன் வருகிறார் ஜெயப்பிரகாஷ்.சம்பத் இருக்கிறார், ஆனால் அவருக்கான "நச்" கேரக்டர் இல்லை.மல்டி ஸ்டாரர் படங்களை "வெங்கட் பிரபு" வெறுக்க வைத்துவிடுவாரோ எனுமளவுக்கு நடிகர்கள் வருகிறார்கள் "ஜெய் ,விஜய் வசந்த், அஸ்வின், வைபவ் ,அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர்......போதும் ப்ரோ முடியல..
          வெங்கட் பிரபு பாணியில் முதல் பாதி ஜாலி ஹோலி  பட்டாசு  என
கலர் கலராய் விரிகிறது படம் .இரண்டாம் பாதியில் பட்டாசு கிளப்பியிருகிறார் வெங்கட்.இடைவேளை முடிந்து உள்ளே வந்து உட்கார்ந்தவுடன் "ஒரு சாதாரண மனிதன் பெரிய பிரச்சனையில் சிக்கவைக்கப்பட்டால் என்ன செய்வான்" என்பதை  சற்றே எதார்த்தை மீறி கமர்சியல் படத்துக்கான நியாயத்துடன்  பரபரப்பாய் கிளைமேக்ஸை நோக்கி நகர்கிறது படம்,சில ஸ்பீடு பிரேக்கர்களுடன் ,வெங்கட் பிரபுவே பல பேட்டிகளில் இரண்டாம் பாதி என்னுடைய மற்ற படங்களை போலல்லாமல்  காமெடி இல்லாமல் இருக்கும் என்றெல்லாம் சொன்ன பிறகும் பறக்கும் இரண்டாம் பாதியில் வரும் காமெடிகள்தான் படத்துக்கு ஸ்பீட் பிரேக்.


மீதி தியேட்டர்ல .....
        

         வெங்கட் பிரபுவுக்கு இந்த படம் "சரோஜா" க்கு மேல ,மங்காத்தா-வுக்கு கீழ. கார்த்தியை  பொறுத்தவரை எதாவது ஹிட் படம் கொடுத்துவிட மாட்டோமா என நடுக்கடலில் தவிப்பவருக்கு  இந்த படம் நிச்சயம் உயிர் காக்கும் படகுதான். பெரிய இடைவெளிக்கு பிறகு கார்த்தி-க்கு ஒரு ஹிட் படம்...

         மொத்தத்தில் இது "கமகமக்கும் சூடான பீஸ் ஃபுல் பிரியாணி" கொஞ்சமே கொஞ்சம்  மசாலா கம்மியா....."வெங்கட் பிரபு"வின் டயட் வெற்றியில்தான் முடிந்திருக்கிறது... 

"என்னுடைய மார்க்"         

Tuesday 29 October 2013

வலி

        வலி  உடலில் காயம்படும் போதும் உறவில் காயம்படும் போதும் உண்டாகிறது ... விபத்தினால் ஏற்படுவது தாங்கி கொள்ளமுடியாத வலி. ஏதாவது உடல் குறைபாட்டினால் செய்கிற ஒவ்வொரு செயலிலும் வலி ஏற்படுகின்ற மனிதர்களை சந்தித்திருக்கிறேன். உதாரணத்துக்கு நான் 
பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது ஒருவர் பழைய "சன்னி" வண்டியை ரொம்ப நேரமாக கிக் செய்துகொண்டிருந்தார் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை .அப்பத்தான் கவனிச்சேன் ஒரே கால் மட்டும்தான் ஓரளவுக்கு நல்லா இருக்கு ,அந்த கால் பெருவிரலில் மட்டுமே வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.அந்த பெருவிரல் வழக்கத்திற்கு மாறாக மிக பெரியதாய் அவருக்கு இருந்தது.. பிறகு நான் வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்தேன். .அப்போது வந்த ஆச்சர்யம் "நம்மால செருப்பு போடாத வெறும் காலில் கூட வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியலையே ,இவரு எப்படி வலியை தாங்கிட்டு பெருவிரலில் மட்டும் ஸ்டார்ட் செய்கிறார்,அந்த மனஉறுதி எங்கேயிருந்து வந்திருக்கும் " இப்படி வலிகள் குறித்த கேள்வி சமீபத்தில் மனதில் உழன்று கொண்டிருந்தது அதையும், சமீபத்தில் என்னை பாதித்த வலிகள் குறித்த தகவல்கள் ,அனுபவங்களையும்  பதிவு செய்திருக்கிறேன்....

வலிகளின் மீதான என் முதல் ஆச்சர்யம்
        பகவான் ரமணர் குறித்ததாகும்...பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவருக்கு வந்திருந்த கேன்சர் கட்டியை நீக்கும் ஆபரேசனுக்கு ஒத்துக்கொண்டார்...இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த ஆபரேசனுக்கு அவருக்கு மயக்க மருந்துகள் எதுவும் கொடுக்கபடவே இல்லை..அவர் ஆபரேசனை புன்முருவலுடன் கவனித்துக்கொண்டிருந்தார்.
பிறகு அவரிடம் இதுபற்றி கேட்டபோது "இந்த உடல் வேறு... நான் வேறு... வலி வேறு..வலியை கவனித்தேன் காணாமல் போய்விட்டது" என்றாராம்.


வலிகளின் மீதான என் இரண்டாவது ஆச்சர்யம்
         விகடனில் வந்த மதனின் கேள்வி பதில்களில் வலிகள் குறித்த கேள்விக்கு மதன் சொன்ன பதில் " வலி இருப்பதால் தான் உங்கள் உடலில் சிறு காயம்பட்டால் கூட அந்த இடத்தை கவனித்து மேலதிக பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம்.இல்லையெனில் நம் கையை ஒருவர் வெட்டிவிட்டு போனால் கூட கவனிக்காமல் விட்டு அதிக ரத்தப்போக்கினால் மரணமடைந்து விடுவோம்...எனவே வலி என்பது "வரம்" என்று முடித்திருந்தார்.  


வலிகளின் மீதான என் மூன்றாவது ஆச்சர்யம்
           ஜெயமோகனின் "அறம்".அதில் வரும் யானை டாக்டரில் செடிகளின் ஒவ்வாமையால் வலி ஏற்பட்ட DFO ஆஃபீசரிடம் டாக்டர் சொல்லுவதாய் வரும் "ஒண்ணுபண்ணுவோமா? சொறியாமல் இருக்க முயற்சிபண்ணுங்க. அரிக்கும், அந்த அரிப்பை கூர்ந்து கவனியுங்க. என்ன நடக்குதுன்னு பாத்துண்ட்டே இருங்க " ...


            ஒரு கட்டத்தில் ஆஃபீசர் சொல்வார் "ஆமா, பசுவுவுக்கு பிரசவம் ஆறதை பாத்திருக்கேன். கண்ணைமட்டும் உருட்டிக்கிட்டு தலைய தாழ்த்தி நின்னுட்டிருக்கும்…’ யானை டாக்டர்- ‘ஆமா அவங்களுக்கு தெரியும், அதுவும் வாழ்க்கைதான்னு….மனுஷன்தான் அலறிடுறான். மருந்து எங்க மாத்திர எங்கன்னு பறக்கிறான். கைக்கு அகப்பட்டதை தின்னு அடுத்த நோயை வரவழைச்சிடறான்…மேன் இஸ் எ பாத்தடிக் பீயிங்...." என்பார்.


            அறத்திலேயே "பெருவலி" யில் தண்டுவட கேன்சரினால் பாதிக்கப்பட்ட கோமல் சுவாமினாதனிடம் ஜெயமோகன் கேட்பதாய் வரும்  ‘வலிக்கலையா சார்?’ ‘ஜெயமோகன், இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டுது. எப்ப பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ராத்திரியிலே திடீர்னு முழிச்சுண்டு படுத்தி எடுத்திரும். ஆனா இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேலே ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம், என்ன?’ என்பார் கோமல்


          ஜெயமோகன் சொல்வார் "வலி எப்டி இருக்கு?’ என்றேன். ’முந்தாநாள் ஞாநி வந்திருந்தார். இதையேதான் கேட்டார். அந்த கதவை திறந்து இடுக்கிலே கட்டைவிரலை வை. அப்டியே கதவை இறுக்கமூடி அழுத்தமா புடிச்சுக்கோ. அப்டியே நாளெல்லாம் வச்சுக்கோ. அப்டி இருக்குன்னேன்"-கோமல்...இந்த வலி குறித்து படிக்கையில் நம் விரலும் கதவிடுக்கில் மாட்டிய உணர்வை பெற்றிருக்கும் ,,,

 
            சென்ற கோடையில் வீட்டுக்கு நொங்கு வாங்க சென்றிருந்தேன் எனக்காக நொங்கு சீவிக்கொண்டிருந்தார்   வேகமாக சீவும்போது அருவாள் அவருடைய பெருவிரலின் சதையை வெட்டி ருசி பார்த்துவிட்டு கீழிறங்கியது..ரத்தம் .....அவர் உடனே நொங்கு சீவும்போது வரும் நீரை துடைப்பதற்கு வைத்திருந்த துணியை கிழித்து விரலை சுற்றி கட்டிக்கொண்டார் ..அவரின் மனைவியிடம் லேசான பதற்றம் ..நான் "ஏங்க டாக்டர் கிட்ட போகலையா"ன்னேன் ..."இந்த நொங்க இன்னைக்கி வித்து காசாக்கினாத்தான் நம்ம பொழப்பு ஓடும் இத அப்புறம் பார்த்துக்கலாம் சார்" என்றார் ..எனக்கும் வலித்தது .....


          வலியை தீர்மானிப்பது எதுவென தெரியவில்லை பணமா.... மனமா ...
உடலா ...என பட்டியலிட எனக்கு தெரியவில்லை .பெருவலியை சுமந்து கொண்டும், அதை கடந்துசென்றும் ஏராளமானோர் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.நாம் இங்கு "லேசான காய்ச்சலுக்கே " லீவ் எடுத்துக்கொண்டு போய் டாக்டரை பார்த்துவிட்டு வருகிறோம்.அதை விட்டுத்தான் பார்ப்போமே என்று நினைப்பதில்லை ...வலியை தாங்கவும்  பழகிக்கொள்ளவேண்டும்...பிறகு சாதாரண விஷயத்துக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கையாவது குறையும் நம்மைவிட வலிகளை தாங்கிக்கொண்டு பிழைப்பவர்கள் நினைத்து நமக்கு ஏற்படுகிற பிரச்சனைகளை,வலிகளை எளிதில் கடந்துபோகிற மனோதிடம் பிறக்கும். இந்த  உலகை இயக்குபவர்கள் பெரும் வலிகளை  சுமந்து கடந்தவர்களே .....அவர்களின்றி அமையாது உலகு .......
         

Monday 14 October 2013

சாய்பாபா

சாய்பாபா


                            குங்குமத்தில் வரும் சாய்பாபா தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன் .அதில் சென்றவாரம் படித்தது "பாபா எப்போதும் ஒரே வேளை 5 வீடுகளுக்கு மட்டும்தான் பிச்சை எடுக்க செல்வராம் .அதிலேயே அவருக்கு தேவையான பிச்சை கிடைத்துவிடுமாம்.கிடைத்த சாதம்,ரொட்டி,போளி இவற்றை தட்டில் வைத்து ஒன்றாக சாப்பிடுவார்..அதிலேயே அவரும் சாப்பிட்டுவிட்டு பக்தர்களுக்கும்,காக்கை ,குருவி, நாய் போன்றவற்றுக்கும் பகிர்ந்தளிப்பராம்.சில நேரங்களில் 4 ,5 தடவை பிச்சை எடுக்கசெல்வராம்..சில நேரங்களில் நாளைக்கு 12 முறை கூட பிச்சை எடுக்க செல்வாராம் ..ஆச்சர்யம் என்னவென்றால் அன்றைக்கு அவரைப்பார்க்க நிறைய விருந்தினர்கள் (பக்தர்கள்) வருவார்கள் எல்லா உணவும் காலியாகிவிடும் "இவ்வளவு பேர் வரப்போவது பாபாவுக்கு முன்கூட்டியே எப்படி தெரியும் என்று மக்கள் ஆச்சர்யமடைவார்கள்"



                                                 பாபாவின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று

                    "யார் நாக்கை அடக்குகிறார்களோ அவர்கள் வாழ்க்கையை வென்றவர்கள், உலகை வென்றவர்கள்"

இதற்கு ஏற்றாற்போல் ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது.... 

                          உடுமலைப்பேட்டையில் சாய்பாபா கோயில் ஒன்று சமீபத்தில் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம்  செய்யப்பட்டது. அன்று அன்னதானமும் நடைபெற்றது.கும்பாபிஷேகம் நடந்த அன்று யாரும் எதிர்பாராத வகையில் 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கலந்துகொண்டு அந்தவிழா மிக சிறப்பாக நடைபெற்றது..பிறகு 48 நாட்கள் மண்டலபூஜை நடைபெற்றது..அப்போது வாராவாரம் வியாழன் அன்று (பாபாவுக்கு உகந்தநாள் ) சிறப்பு பூஜைகள்  நடைபெறும்.அன்று நான் உட்பட நிறைய பக்தர்கள் தங்கள் சக்திக்கு தகுந்தவாறு பொங்கல்,புளியோதரை, தயிர்சாதம், கேசரி ,லட்டு ,பூந்தி, சுண்டல், பிஸ்கட், பழங்கள் போன்ற உணவு பொருட்களை பாபா முன் படைத்து பூஜை முடிந்தபின்னர் அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு வினியோகிப்போம்..அன்று சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
                              இந்த கூட்டம் வியாழன் அன்று யாரும் எதிர்பாராதது. ஆனாலும் வந்திருக்கும் எல்லோருக்கும் வினியோகிக்க பிரசாதம் வந்துகொண்டே இருக்கும்.அன்று  எல்லோருக்கு பிரசாதத்தை தொண்ணையில் போட்டு தருவது வழக்கம்.எல்லாரும் சரிசமமாக வரிசையில் வந்து  பிரசாதம் வாங்க வருவார்கள்.ஒரு உள்ளங்கை அளவுள்ள தொண்ணையில் பொங்கல் புளியோதரை,கேசரி,சுண்டல் அனைத்தும் சிறிது சிறிதாக அதில் கலந்திருக்கும். யாரும் முகம் சுளிக்காமல் அதை பக்தியோடு வாங்கி சாப்பிடுவார்கள்.... வந்திருப்பவர்  2 பிஸ்கட்டாவது வாங்காமல் போகமுடியாது. அனைவருக்கும் பிரசாதம் கிடைத்துவிடும்.

                     இந்த நிகழ்வுகளை பிறகு யோசித்து பார்த்தபோது எனக்கு தோன்றியது ....

1.பாபா இப்போதும் தன்னை தேடி வருபவர்களை பசியுடன் அனுப்புவதில்லை.
2.எல்லோரையும் சரிசமமாக நடத்துகிறார்
3.எதிர்பார்க்காமல் எவ்வளவு பேர் வந்தாலும் கூட அவர்களையும் பசியுடன் அனுப்புவதில்லை
4.மேற்கூறிய "யார் நாக்கை அடக்குகிறார்களோ அவர்கள் வாழ்க்கையை வென்றவர்கள் உலகை வென்றவர்கள்" தத்துவத்திற்கு ஏற்ப பக்தர்களுக்கு அனுபவத்தை தருகிறார்.
5.தானம் செய்தவருக்கு பிறருக்கு உதவிய சந்தோசத்தை அனுபவமாக தருகிறார்.


பாபா முக்தியடைந்த இந்நாளில் அவரை பற்றிய இந்த செய்தியை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி..




சாயி கவசம்
ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெயஜெய சாயி நமோ நம!
சற்குரு சாயி நமோ நம!

ஓம் சாய்ராம்...!

                             


Friday 13 September 2013

பூனை

               அப்போது எனக்கு 19 வயசிருக்கும் அப்போதுதான் பூனையை தொட்டு பார்க்க தூக்கி கொஞ்ச வாய்ப்பு கிடைத்தது.எங்கள் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் என எதுவும் இல்லை.கொஞ்சம் தெரு நாய்களை அருகில் சென்று பார்த்ததோடு சரி..என் ஒண்ணுவிட்ட சின்னம்மாவின் கணவர் வெறிநாய் கடித்து இறந்திருந்த காரணத்தால் நாய்கள் மீதான பயம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
            பூனைகள் மீது அவ்வளவு பயம் கிடையாது எனினும் எனக்கு ஒவ்வாமை இருந்ததது, பூனையின் முடிகள் அதைஅதிகப்படுத்தும் என்ற காரணத்தால் அதனருகில் செல்லவோ தூக்கி கொஞ்சவோ கூடாது என அப்பா சொல்லி வைத்திருந்தார். நானும் அதை கடைபிடித்தேன்.
                அப்போது நான் எலக்டிரிக்கல்ஸ் கடையில் மாதம் 500 ரூ சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன் ..கடையின் முதலாளி ஒரு பூனைப்பிரியர் என சேர்ந்த பிறகு தெரிந்துகொண்டேன்...முன்னமே தெரிந்திருந்தால் கொஞ்சம் யோசித்திருப்பேன்...ஆனாலும் அது நல்ல வேலையாக பட்டதால் பூனையை சகித்துகொள்ள முடிவு செய்தேன்...ஆரம்பத்தில் பூனையும் என்னை கண்டு கொள்ளவில்லை.. முதலாளி உள்ளே வந்து "பிங்கி" என அழைத்தால் பரண் மீதிருந்து ஸ்பீக்கர்கள் ரேடியோக்கள் அட்டை பெட்டிகள் என லாவகமாக கால் வைத்து  கீழிறங்கி  ( அதை பார்க்க நல்லா இருக்கும் ) அவரை வந்தடையும்.அவரும் பூனையுடைய கிண்ணத்தில் அது நேற்று சாப்பிட்டது எதாவது  மீதமிருந்தால் அதை கழுவிவிட்டு ( சில நேரங்களில் நானும் கழுவி கொடுப்பேன்) கொண்டு வந்திருக்கும் பாலை ஊற்றுவார்.பூனையும் அதற்காக காத்திருந்தது போல குடிக்கும்,சில நேரங்களில் மிச்சமும் வைக்கும்..மீசையில் பால் ஒட்டும்படி பால் குடித்து முடிப்பாள் பிங்கி.
             முதலாளியின் மகனும் பூனைப்பிரியர்.அவர் ஒரு படி மேலே போய் பூனையின் வாயில் வாய் வைத்து கொஞ்சுவார்.ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் அருவருப்பாக பட்டது...பிறகு அதிக அன்பு சுத்தம் பத்தம் பார்ப்பதில்லை என தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் நான் கடைக்குள்ளே சென்றால் பூனை என்னை பார்த்ததும் ஓடி ஒளிந்து கொள்ளும்.எனக்கும் அப்பாடா என நிம்மதி..கொஞ்ச நாளில் என்னை அங்கீகரித்ததோ என்னவோ என்னை கண்டு ஓடுவதில்லை...
                ஒரு நாள் முதலாளி கடைக்கு வராததால் நானே கடையில் பால் வாங்கி அதன் கிண்ணத்தை கழுவி ஊற்றினேன்.அப்போது நான் அருகில் இருந்தும் என்னை இடைஞ்சலாக நினைக்காமல் பால் குடிக்க ஆரம்பித்தது.அன்று லேசாக அதன் தலையை தடவிக்கொடுத்தேன்.அது ஒன்றும் செய்யவில்லை..அன்று இரவு லேசாக மூச்சுவிட சிரமமாக இருப்பது போல் தோன்றியது.பின்னாட்களில் இந்த எண்ணம் தோன்றவில்லை .
                அதன் பிறகு பூனை எனக்கும் கொஞ்சம் பிரியமானதாக ஆகிவிட்டது..நான் அழைக்கும்போது அது எலிவேட்டையில் கொஞ்சம் பிஸியாக இருந்தாலும் நான் இங்கே இருக்கிறேன் என ஒரு அட்டெனன்ஸ்ஸை போட்டுவிட்டு வேட்டையை தொடரும்...நான் நிற்கும் போது கால்களுக்குள் புகுந்து வரும் விளையாட்டை என்னிடம் விளையாடும் வரை என்னிடம் நெருக்கமானது...
               நிற்க நான் தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் பூனை இதுவல்ல...அது அடுத்த வரியில் வருது.....
   "பிங்கி"யுடன் பழக பழக நாமும் ஒரு பூனை வளர்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.அதற்கு ரொம்பநாள் காத்திருக்க தேவையில்லாமல் ஒருநாள் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போகும் சாலையோரத்தில் ஒரு குட்டி பூனையை கண்டேன்..
 

 
              அருகில் தாய் பூனையோ மற்ற குட்டி பூனைகளோ இல்லை தனித்துவிடப்பட்ட குட்டி..பால் வெள்ளை நிறத்தில் லேசான சாம்பல் மேகங்கள் படிந்தது போன்ற தோற்றத்தில் மியாவ் என்றபடி நின்றிருந்தது.நான் பூனை காக்கும் கடவுள் போல என்னை நினைத்துக்கொண்டு அந்த பூனையை  அழகாக கையில் அடுத்து அதற்கு வலிக்காமல் இருக்குமளவுக்கு பிடிகொடுத்து,போட்டேன்   பீடுநடை வீட்டை நோக்கி...மதியசாப்பாட்டுக்கு பூனையுடன் வந்திருப்பதை பார்த்து அம்மாவுக்கு அதிர்ச்சி.
                "என்னடாபூனையை தூக்கிட்டு வந்திருக்க ,உங்க நைனா பார்த்தா சத்தம் போடுவாரே"ன்னு சொன்னாங்க..அப்புறம் பூனைக்கு ஊத்தறதுக்கு பாலும் எனக்கு சாப்பாடும் கொடுத்தாங்க..நான் சாப்பிட்டு விட்டு கடைக்கு வந்தேன்..அம்மா நைட் வரைக்கும் பூனையை பார்த்துகிட்டாங்க. அப்புறம் நான் போய் பூனைக்கு மறுபடியும் பால் ஊற்றி வைத்தேன்,குடிச்சது..எதோ காரணத்தினால் பூனை கத்தியபடியே இருந்தது...நான் ஒரு பெரிய பின்னல் கூடையை எடுத்து பூனையை மூடி வைத்தேன்.
              அப்பா வந்தார் சாப்பிடும் போது கவனிக்கவில்லை போல, சாப்பிட்டு முடிந்து எல்லாரும் படுத்தும்விட்டோம். நான் பூனையின் சத்தத்தில் கலவரமாய் முழித்தபடி படுத்திருந்தேன்.பூனை மட்டும் தூங்காமல் கத்திகொண்டே இருந்தது.. தூங்கிட்டிருந்த அப்பா எந்திருச்சி உட்கார்ந்துட்டார்.."என்னது பூனை சத்தம்" என கேட்கவும், அம்மா விவரத்தை சொல்லிட்டாங்க..அப்பா என்னை பார்த்து "நாளைக்கு காலைல இந்த பூனை இங்க இருக்க கூடாது ,அவ்ளோதான்" என சொல்லிவிட்டு படுத்துகொண்டார்..அப்பாவின் கோபம் எனக்கு தெரியும் மண்ணில் விளையாடுவதை பார்த்துவிட்டாலே வேப்பங்குச்சியை ஒடித்து அதால் அடித்து முழங்கால்களை வீங்கவைத்து விடுவார்...நான் பூனையை வெளியே விட்டு விட மனதளவில் தயாரானேன்..
             எனக்கும் பூனைக்கும் அடுத்தநாள் சீக்கிரமே விடிந்தது, ஞாயிற்றுக்கிழமை என நினைவு.பூனையை தூக்கி கொண்டு எங்கிருந்து எடுத்தேனோ அந்த இடத்துகே திரும்ப போனேன்...அங்கு அப்போதும் எந்த பூனையும் தென் படவில்லை...விடியற்காலையானதால் ரோட்டில் ஜன நடமாட்டம் அதிகமில்லை.நான் பூனையை  அந்த இடத்திலேயே கீழிறக்கி விட்டேன்.அது என்னை "ஏன் என்னை மறுபடியும் ரோட்டுல விடுற" என்பது போல ஒரு பார்வை பார்த்தது.நான் அதைகவனிக்காதது போல திரும்பி நடக்க ஆரம்பித்தேன்...."மியாவ் மியாவ் என என்னை பார்த்து அழைத்தபடி இருந்தது அந்த குட்டி பூனை..காதிருந்தும் செவிடனாய் நடந்தேன்..வெகுதூரம் "மியாவ் மியாவ்" ஈனஸ்வரத்தில் கேட்டுகொண்டிருந்ததை போல உணர்வு.
             இப்ப எனக்கு 32 வயசாகுது.இப்பவும் தூக்கம் பிடிக்காத இரவுகளிலும் , எதாவது சத்தம் வந்து உறக்கம் கலைத்து செல்லும் பொழுதுகளிலும்  அந்த பூனையின் "மியாவ்" சத்தம் மட்டும் ஈனஸ்வரத்தில் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.ஒரு  பாவச்செயலை செய்த வருத்தம் எனக்கு  இன்றும் இருக்கிறது.

Monday 15 July 2013

மகனுக்கு பெயர் வைத்த கதை...

                
    
                 இதுக்கு கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் ..நான் 2004-ல் வங்கியில் பணிபுரிந்தபோது எங்கள் மேனேஜர் வீட்டுக்கு போயிருந்தேன்.அவருடைய அப்போது அவரது மகனுக்கு 1 வயதிருக்கும்..குழந்தையின் பெயரை 
கேட்ட போது "துரண்யு" என்றும் அதற்கு சமஸ்கிருதத்தில் " மின்னலை விட வேகமானவன் (!)"என்று பொருள் எனவும் கூறினார்...அதை கேட்டபோது நமக்கு குழந்தை பிறக்கும்போது கொஞ்சம் வித்தியாசாமான பெயரை 
வைக்கவேண்டும் என முடிவு செய்துகொண்டேன்..இதெல்லாம் என் கல்யாணத்திற்க்கு 2 வருடங்களுக்கு முன்பு...
               திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து மனைவிக்கு  கரு ஃபெலோஃபின் டியூப்பில் (fallopian tube) உருவானதால் மனைவியை காப்பாற்ற  உடனடியாக ஆபரேசன் செய்து கருவை எடுக்க வேண்டிய நிலை...பின் ஆபரேசனும் நடந்து கரு எடுக்கப்பட்டது..இந்த சம்பவத்திற்க்கு பின் குழந்தைகள் மீதான ஆவலை தள்ளிவைத்தோம்.பின்னர் ஒருவர் சொன்னதால் "திருக்கருகாவூர்" சென்று "கர்ப்பரட்சாம்பிகை"யை வழிபட்டோம்..அடுத்தமாதமே மகன் கருவாக  தங்கினான். முதல் செக்கப் சென்றபோது நான் பார்த்தது கரு கருப்பையில் உருவாகியிருக்கிறதா என்று மட்டும்தான்...(இதற்கு முன்பும் பின்புமான என் வாழ்வு வாழ்க்கைகான போராட்டங்கள்  நிரம்பியது அது இப்ப வேண்டாம்)
               இந்த கரு உருவானவுடன் நாங்கள் முடிவு செய்தது குழந்தையின் பாலினம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளகூடாதென குழந்தையின ஆரோக்கியம் மட்டுமே பிரதானமாக இருக்கவேண்டுமென்றும் என்று மட்டும்முடிவு செய்துகொண்டோம்.ஆனாலும் நான் எனக்கு உடன் பிறந்த சகோதரி இல்லாத காரணத்தினால் பெண் குழந்தை வேண்டுமெனவும்,மனைவி ஆண் குழந்தை வேண்டுமெனவும் ஆசைப்பட்டோம் ..இருவரும் இதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.ஏனெனில் முதல் ஏமாற்றம் எங்களை அந்த அளவுக்கு பாதித்திருந்தது...இந்த சமயத்தில் நான் முடிவு செய்தது குழந்தைக்கு வித்தியாசமான பெயர் அல்லது சுத்த தமிழ் பெயர் வைக்கவேண்டுமென..
ஆனாலும் எந்த பெயரையும் முடிவு செய்யவில்லை....
         அந்த நாளும் வந்தது , சிசேரியன் என்றபோதும் எந்த நல்ல நேரத்தையும் குறித்துகொடுக்காமல் ஆபரேசனுக்கான ஏற்பாடுகள் எல்லாம் எந்த நேரத்தில் சரிபட்டு வருகிறதோ அப்போதே ஆபரேசனை வைத்துக்கொள்ளுங்கள் என்று டாக்டர்களிடம் சொல்லிவிட்டேன்.18-12-2009 அன்று மாலை 5.49 க்கு என் மகன் பிறந்தான்...மகன் என்றவுடன் நான் முடிவு செய்த பெயர்
"ராம்" காரணம் ( தாத்தா ராமசாமி + ரமணர்+சாகேத்ராம் (ஹேராம்) ),
 ( ஸ்ரீராமன்+ The One )   என்ற பொருளும் அந்த பெயருக்கு உண்டு என்பதாலும் மனதுக்கு நெருக்கமான,அழைக்க எளிதான பெயர் என்பதாலும் அந்த பெயரை தேர்வு செய்தேன். ஜாதகம் குறிக்கபோன இடத்தில் ஜோசியக்காரர் 
ஒரு குண்டை போட்டார்.
                   குழந்தைக்கு பெயர்  "த" "ப"  வரிசையிலும்தான் இருக்கவேண்டுமென சொன்னார்...எனக்கு கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது.சரியென மனதை தேற்றிக்கொண்டு  நானும் என் மனைவியும் சில பெயர்களை செலக்ட் செய்தோம்.கடையாக ஃபைனல் லிஸ்டுக்கு வந்த பெயர்கள் "தனுஷ் ,தனஞ்சஜெய்,தயாநிதி,ப்ரணவ்" தனுஷ் சினிமா நடிகரின் பெயர் என்பதால் அவரை பார்த்து வைத்தது போல் தோன்றும் என்பதால் அது கழிக்கபட்டது..நான் வைக்க விரும்பிய பெயர்கள் தனஞ்ஜெய் (சூரியன் )
தயாநிதி (கருணைக்கருவூலம்  )
                     இதில் "தனஞ்ஜெய்"யை  மகன் வளரும்போது மற்றவர்கள் "தனா" என சுருக்கிகூப்பிட்டு பெண் பெயர் போல ஆகிவிடுமென கூறி நிராகரித்தார் மனைவி...பின் நான் முடிவு செய்த பெயர் "தயாநிதி"..இதற்கு வீட்டிற்க்கு
உள்ளே இருந்து மட்டுமல்ல பக்கத்து வீட்டில் இருந்து கூட எதிர்ப்பு வந்தது..காரணம் கலைஞரின் குடும்ப பெயராகஇருக்கிறதென்பதே.. "இந்த பெயர் கலைஞரின் குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல" நான் .. ஆனாலும் நான் மதிக்கும் ஒருவர்கேட்டுக்கொண்டதால் அந்த பெயர் வைக்கும் யோசனையையும் நிராகரிக்க முடிவுசெய்தேன்..நான் "D" வரிசை பெயர் வைக்க விரும்பியதன் காரணம் என்னுடைய ஸ்ரீனிவாசன் "S"-ல் ஆரம்பிப்பதால் கடைசி பெஞ்ச்தான் எப்போதும் கிடைக்கும் ,"D" வரிசை பெயர்களென்றால் முன்வரிசை கிடைத்து பாடங்களை நன்றாக கவனிக்காலாமே என்ற எண்ணம்தான்.
                  மனைவி ஆரம்பத்தில் இருந்து ஆர்வம் காட்டிய பெயர் ப்ரணவ்,தனுஷ் ,இதில் தனுஷ் நியாயமான காரணத்தினால்
கழிந்துவிட்ட பிறகு மனைவியின் சாய்ஸ் "ப்ரணவ்"...கடைசி வரிசை கன்ஃபார்ம் என்ற போதும் மனைவியின் விருப்பத்திற்கு சம்மதித்தேன்.                    "ப்ரணவ்" எனும் பெயர் "ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை குறிக்கிறது.தவிர கொஞ்சம் வித்தியாமான ஆனால் புரியும்படியான பெயர் என்பதால் அந்த பெயருக்கு இசைந்தேன்.மொத்தத்தில் மனைவியின் முடிவே கடைசியில் ஜெயித்தது.
                  பிறகு மகனின் பெயரோடு இனிசியலாக என் பெயரையும்,மனைவியின் பெயரையும் (அகிலாண்டேஸ்வரி) குறிப்பிடும்படி "S.A.ப்ரணவ்" என்றே வைத்தோம் இப்ப  நான் என் மகனை  ஆசையாக "ராமசாமி,ப்ரணவ் ராமசாமி" எனவும் அழைக்கிறேன்,என் மனைவி ப்ரணவ் எனவும் ..சில வயதான் பெரியவர்கள் அவனை பிரணாப் என அழைக்கிறார்கள்.. அவன் எல்லாப்பெயர்களையும் ஏற்றுக்கொண்டு  எங்களின் அழைப்புக்கு செவி சாய்க்கிறான் ....     

Thursday 20 June 2013

பார்வையற்றவரின் மதிய உணவு

                                          பார்வையற்றவரின் மதிய உணவு

                                                       


               சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் 1.30 மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தேன் அப்போது பார்வையில்லாத ஒருவர் காருக்கு அருகில் நின்று காருக்குள் ஆள் இருப்பதாக எண்ணிக்கொண்டு ஊதுபத்தி விற்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.நான் அதை கவனித்து அருகில் சென்று " காருக்குள் யாரும் இல்லை" என சொல்லிவிட்டு அவரிடம் 30 ரூ  மதிப்புள்ள ஊதுபத்தி பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டேன், 50 ரூ நோட்டை கொடுத்து மீதி சில்லறை 20 ரூ-வையும் வாங்கிக்கொண்டேன்..
               பிறகு அவர் என்னிடம் "சார் இங்க பக்கத்துல எதாவது ஹோட்டல் இருக்குதா?" என்றார் நான் "ம், இருக்குதே உக்காருங்க டிராப் பண்ணுறேன்-ன்னு சொல்லி அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டேன் . அவர் "சார் ஒரு ஊதுபத்தியாவது  வித்துட்டுதான் சாப்பிடனமுன்னு இருந்தேன், காலையில இருந்து ஒரு ஊதுபத்தி கூட விக்கல ,அதனால இன்னும் சாப்பிடல ,இப்பதான் சாப்பிடனும்"ன்னு சொன்னார் ...எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது ..ஓரளவுக்கு சாப்பாடு விலை குறைவாக இருக்கும் ஹோட்டலில் அவரை இறக்கிவிட்டு ,அங்கு என்னென்ன சாப்பிடலாம் என்று சொல்லி என் கையில் மீதமிருந்த 20 ரூ-வையும் அவருக்கே கொடுத்தேன் .சிறிது மறுப்புக்கு பிறகு வாங்கிக்கொண்டார்.பிறகு அவரிடம் இருந்து
விடை பெற்றுக்கொண்டேன்.
                  நான்  என் வீட்டு உபயோகத்துக்கும் அலுவலக உபயோகத்துக்கும் தேவையான ஊது பத்திகளை இது போன்ற பார்வையற்றவர்களிடமே கடந்த 2 வருடங்களாக வாங்கி வருகிறேன் ..எதோ என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவுவதாக ஒரு மன திருப்தி.
                 இதை  படிப்பவர்கள் இனி இதைப்போல் பார்வையற்றவர்கள் ஏதாவது விற்க கண்டால் உங்களுக்கு தேவையும்,நேரமுமிருந்தால் அந்த பொருளை அவர்களிடமே வாங்கிக்கொள்ளுங்கள்.நீங்களே அவரின் முதல் வாடிக்கையாளராக கூட இருக்கலாம் ...அது அவரின் அன்றைய உணவுக்கு வழிவகுப்பதாக கூட இருக்கலாம்   ......... "அன்பே சிவம்"


Tuesday 30 April 2013

ஆக்சிடெண்ட்

                                                        ஆக்சிடெண்ட் 

              இன்று மதியம் சுமார் 12 மணிக்கு என் அலுவலகத்தின் முன்னால் பஸ்சும் இண்டிகா காரும் கிராஸ் செய்தன ..பெரும் சத்தம் ....கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பஸ்ஸின் பக்கவாட்டில் பட்டு இண்டிகா கார் அந்தரத்தில் ஒருசுற்று (தலை குப்புற அல்ல ) பக்கவாட்டில் சுற்றி கீழே விழுந்தது ...உடனே நான் எந்திரித்து காருக்கு ஓடினேன் ....கார் முன்புறம் நன்றாக நசுங்கி விட்டது..இடித்த பேருந்து சிறிதுதூரம் தள்ளி நின்றுவிட்டது ,, ...டிரைவர் சீட்டில் இருந்தவர் தலை மற்றும் கையில்  ரத்த காயத்துடன் வண்டியில் இருந்து வெளிவர முயற்சி செய்தார் ..காருக்குள் இருந்து ஒரு பெண்ணின் கூக்குரல் தன் மகன் நிலை அறிய ....பின்னால் இரண்டு சிறுவர்களின் அழுகை சத்தம் வேறு ...நான் முன்பக்க கதவை திறந்து அவர் வெளிவர  உதவினேன் ....பின்பக்க கதவை திறக்க முடியவில்லை  ....என் உடன் பணிபுரிபவர்கள் பின் பக்க கதவை திறந்து விட்டனர் ...உள்ளே இரண்டு சிறுவர்கள் ,தாய் .......,,வண்டியை ஒட்டி வந்தது தந்தை ...இரண்டு சிறுவர்களில் ஒருவனுக்கு பெரிதாக அடி இல்லை,இன்னொருவனுக்கு கையில் அடி ..தோள்பட்டை விலகியிருக்கலாம் .... வேறு உயிர்ச்சேதம் இல்லை ...அவர்களை காரிலிருந்து வெளிலே கூட்டி வந்து எங்கள் அலுவலக வாசற்படியில் உட்கார வைத்தோம்...
அதற்குள் கூட்டம் கூடி விட்டது சுமார் 20 பேருக்கு மேல் சேர்ந்து விட்டனர்....நான் அலுவலகத்திற்கு  உள்ளே ஓடி வந்து 108-ஐ அழைத்தேன் ..விவரம் சொன்னேன் ..விவரங்கள் கேட்டு காத்திருக்க சொன்னார்கள் ...வெளியே நின்றவர்களும் 108-க்கு அழைத்தனர் ...அதே நேரம் என் மொபைலில் அருகிலுள்ள போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை  அழைத்தேன் ...என்னை போலீஸ் ஸ்டேசனில் தெரியும் என்பதால் போனை எடுத்தவுடன் "சார் தகவல் தெரியும் ,போலிஸ் வந்துக்கிட்டிருக்கு" என்றார் ...அதே நேரம் காத்திருப்புக்கு பின் "சார் அந்த ஏரியாவில் உள்ள ஆம்புலன்ஸ் வெளியே சென்றுள்ளது அங்குவர முக்கால் மணி நேரம் ஆகும் ,என்ன செய்யலாம்" என என்னிடம் கேட்டார், மறுமுனையில் கால்சென்டர் பணியாளருடன் குறிப்பிட்ட ஆம்புலன்சின் டிரைவரும் கான்பிரன்சில் இருந்தார் ... கிட்டதட்ட 5 நிமிடத்தில் போலீசும் வந்து விட்டார்கள்  ...நான் உடனே "சரி போலீஸ் வந்து விட்டது அவர்களை வைத்து வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொள்கிறேன்" என்று சொல்லி வைத்துவிட்டேன்...
நான் போலீஸ்காரரிடம் சென்று (தெரிந்தவர்) "108 கிடைக்கவில்லை வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுங்கள் "என்றேன் ..அதே நேரத்தில் அடிபட்டவர்களுக்கு என் ஆபிசில் இருந்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தார்கள் ...வேறு ஆம்புலன்ஸ் உடனே கிடைக்கவில்லை ....கிட்டத்தட்ட 20 நிமிடம் ஆன பிறகு ஆம்புலன்ஸ் வந்தது ...அப்போது அந்த காரில் வந்த பெண்மணியின்  (தலையில் லேசான அடி ) போனை வாங்கி அவர் உறவினர்களுக்கு தகவல் சொல்ல முயற்சித்து கொண்டிருந்தார் ..ஆனால் அவர் தம்பியே போனை எடுக்கவில்லை ,,,முதலில் அடிபட்ட பெண்மணியின் கணவர் ,குழந்தைகள் இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு GH க்கு புறப்பட்டது ஆம்புலன்ஸ் ..பெண்மணியின் உறவினர்களுக்கு போன் செய்ய முயற்சி செய்தவர் அவருடைய காரில் பெண்மணியை GH -க்கு அழைத்து சொல்வதாக சொன்னார் ...காரில் இருந்த அவர்களின் உடமைகளை எல்லாம் எங்கள் அலுவலகத்திற்குள் கொண்டு வந்து வைத்துவிட்டோம் ....அந்த பெண்மணியை உள்ளே அழைத்து வந்து முகத்தை கழுவி துடைக்க உதவினோம் ...பின்னர் அவர் சொன்ன இன்னொரு நம்பரை டயல் செய்து கொடுத்தேன் .,..மறுமுனையில் (இன்னொரு தம்பி போல )போனை எடுத்தார் ...பெண்மணி போனை வாங்கி அழுது கொண்டே பேசினார் ,,பிறகு நண்பர் ஒருவர் போனை வாங்கி விவரத்தை  அவர் தம்பியிடம் சொல்லி பயப்பட ஒன்றும் இல்லை நீங்கள் கிளம்பி வந்தால் போதும் என்றார் ...பிறகு அந்த பெண்மணி தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை எங்கள் அலுவலகத்திலேயே வைத்துவிட்டு  எங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு GH -க்கு கிளம்பினார்...அவர்கள் இருவரும் சித்த மருத்துவ டாக்டர்களாம் ,கோவையிலிருந்து தேனி நோக்கி செல்லும்போது நடந்த விபத்து இது...தவறு இருபுறத்திலும் உள்ளது ....

பிறகு போலீஸ்காரர்  வந்து "கிரேன் வருவதற்குள் யாராவது வந்து கார் பேட்டரியை கழட்டிக்கொண்டு போய் விடப்போகிறார்கள் பார்த்து கொள்ளுங்கள் (!!!!) ,நாங்கள் சொல்லாமல் அவர்களின் பொருட்களை யாரிடமும் கொடுக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டு போனார் ..
பிறகு மதியம்  பஸ் மேனேஜர் வந்து என்னிடம் விவரம் சேகரித்தார் ...அவர் உறவினர் ஒருவரும் வந்து விட்டார் .அவர் ஆக்சிடெண்ட் ,அவர்களின் நிலை குறித்த தகவல்களை என்னிடம் கேட்டு தெரிந்துகொண்டார் ......பின்னர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று போலீஸை உடன் அழைத்து வந்து பொருட்களை பெற்றுக்கொண்டார்..
அவர் அந்த பெண்மணிக்கு போன் போட்டு என்னிடம்  கொடுத்தார் "ரொம்ப நன்றி சார் எங்களுக்கு உதவினதுக்கு என்றார் ,உங்கள் விசிட்டிங் கார்டை கொடுத்து விடுங்கள்" என்று கூறினார் ,"பரவாயில்லங்க" என்றேன் நான் ,, அவர் உறவினரிடம் என் விசிட்டிங் கார்டையும் கொடுத்துவிட்டேன்... அவர்கள் கோவை PSG -ல் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்கள் பயமில்லை  எனவும் தெரிந்து கொண்டேன் ....


இந்த சம்பவம் எனக்கு கொடுத்த அனுபவங்கள்  :-

"தேவையற்ற வேகமும் , கவனக்குறைவும் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்"

 ஒரு விபத்து நடந்தால் உடனே ஒன்று சேர்ந்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள் ...அடுத்தகட்ட நடவடிக்கையும் என்னவென தெரிகிறது ...மக்களுக்கு "ஹேட்ஸ் ஆப் "...

இன்று விபத்து நடந்த இடத்துக்கு உடனே வந்த போலீசின் வேகமும் ,நடவடிக்கைகளும் நன்றாக இருந்தது.

ஒரு சிலர் சில குறிப்பிட்ட நம்பரில் இருந்து போன் வந்தால் போனை எடுக்காமல் இருப்பதும் ,புது நம்பர் அழைப்பை எடுக்காமல் இருப்பதும் தவறு.
முடிந்தளவுக்கு போனை அட்டெண்ட் செய்யுங்கள் ..அவர் மொக்கை போடுபவர் ,அல்லது தேவையில்லாதவராக இருந்தால் விஷயம் மட்டும் கேட்டு எதோ காரணம் சொல்லி  போன் கட் செய்யலாம் ,.ஆனால் எப்போதும் போன் அட்டெண்ட் செய்யாமல் இருக்க வேண்டாம்.அது  அவரின் உயிர் காக்கும் "Call" ஆக கூட இருக்கலாம்.

வழியில் போகிறவர் கூட தன்  பிரச்னையாக நினைத்து வந்து உதவி செய்கிற
நிலை இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கிறது  ...

என்னளவில் பதட்டப்படாமல் என்னாலான உதவிகளை அவர்களுக்கு செய்தேன் ...இதில் என்  பொதுநலத்தோடு கொஞ்சம் சுயநலமும் உள்ளது ...நான் இங்கு மனைவி குழந்தையுடன் வசிக்கிறேன் ..அங்கு ஈரோட்டில் வசித்துவரும் என் தாய்,தந்தைக்கு  இதுபோல் ஏதேனும் அவசரஉதவி தேவையெனில் அவர்களுக்கு  ஒருவர் இதுபோல் பார்த்து உதவிசெய்வார் என்ற நம்பிக்கை  உள்ளது ....எல்லாவற்றிக்கும் மேலாக" கடவுள் இருக்கிறார்  அவர் ஆபத்து காலத்தில் ஒருவரை கண்டிப்பாக கைவிட மாட்டார்"
என நம்புகிறேன் "தெய்வம் மனுஷ ரூபேனா "


Monday 15 April 2013

ஷீர்டி சாய்பாபா ஒரு அனுபவம்



ஷீர்டி சாய்பாபா ஒரு அனுபவம்





          1999-ம் ஆண்டு  நான் முதன்முதல் சென்று தரிசித்த சித்தர் 
                         பகவான்"ரமண மஹரிஷி"
          அந்த அனுபவம்தான் நான் "சாமியார்கள்" என்று பொதுப்படையாக சொல்லி அழைத்துவந்தவர்களை சித்தர்கள் என்ற வார்த்தையை சொல்லி அழைக்ககாரணம். பிறகு ரமணமஹரிஷியை தொடர்ந்து வணங்கிவருகிறேன்.சமீபமாக மற்ற சித்தர்கள் குறித்த அறிந்துகொள்ளும் ஆர்வமும் வந்துள்ளது.அதில் முதன்மையானவர் "ஷீர்டி சாய்பாபா" கடந்தவருடம் குமுதத்தில் வெளிவந்த அவரது மகிமைகள் குறித்ததொடருக்குபின் அவர்குறித்த ஆர்வம் இன்னும் அதிகரித்தது.
           அதை படிக்கும்போது ஒரு மகான் மக்களுக்காக சாதாரண மனிதராக வாழ்ந்து அவர்களிடம் பிச்சை எடுத்து உண்டு அவர்களின் பாவங்களை போக்கி, அவர்களின் பாவத்தையும் ,நோயையும் தன் உடலில் கட்டியாக வாங்கிகொண்டு வாழ்வளித்தது,
எத்தனையோ பக்தர்களின் குறையை நீக்கியது ,உறங்கும்போது உயரமான இடத்தில் கால்நீட்டிகூட படுத்துகொள்ளும் சுகமில்லாமல் படுத்துகொண்டது போன்றவற்றை படிக்கும்போது அவரை தொழும் ஆர்வம்அதிகரித்தது. ஆனால் அவருடைய
போட்டோவோ சிறிய விக்கிரகமோகூட என்னிடம் இல்லை.
            என் வீட்டு பூஜையறையில் ரமண மகரிஷி,கசவனம்பட்டி சித்தர்,சத்ய சாய்பாபா,பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் படங்கள் உண்டு.ஆனால் ஷீர்டி சாய்பாபா-வின் படம் மட்டும் இல்லை.வீதியில் செல்லும்போது அவரின் படங்களை பார்ப்பேன்,


 
அவர் படம்வரைந்த போர்டுகள் கண்ணில்படும்.அதை பார்க்கும்போது அவர் படத்தை வீட்டில் வைத்து தொழவேண்டும் என்ற எண்ணம் வந்தது,கூடவே விபரீதஆசையும் "அவர்தான் சக்தி வாய்ந்தவர் ஆயிற்றே, பக்தர்களின் வீட்டிற்கே தேடிவந்து அவர்களின் குறைகளை போக்குபவர் ஆயிற்றே, அவரே நம்ம வீட்டுக்கு வரட்டும் நானாக அவரின் படத்தையோ விக்கிரகத்தையோ வாங்ககூடாது" என்ற எண்ணமும் வந்து அதுவே முடிவாகவும் ஆனது!!! பாபா வீட்டிற்கு வருவாரா?
             நிறைய நேரங்களில் அவர் படம் நம் வீட்டு பூஜையறையில் இல்லையே என்ற ஏக்கம் வந்து,வந்துபோகும்.இந்தநேரத்தில் என் MDன் நண்பர் ஷீர்டி சென்று வந்தார் அவர் சென்றுவந்தவுடன் அவருடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைந்ததை சொன்னார்.அது பற்றி பேசினோம்.இதனிடையில் எங்க ஹவுஸ்ஒனர் வீட்டில் சாய்பாபா குறித்து பேசியிருக்கிறார்கள் ,அன்றே சாய்பாபா படத்தை வண்டியில் வைத்துகொண்டு வருபவர்கள் அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் (பக்கத்து காம்பவுண்ட்). ஆனால் எங்கள் வீட்டிற்க்கு அந்த (சாய்பாபா) வண்டி வரவில்லை.ஹவுஸ்ஒனர் வீட்டில் அதை ஒரு அழைப்பாக ஏற்று ஷீர்டி சென்று வந்துவிட்டார்கள்.அவர்கள் என் வீட்டிற்கு சிறிய பிரசாதமோ சாய்பாபாவின் படமோ கூட கொடுத்தனுப்பவில்லை.
  இது எனக்கு தெரிந்தபோது மிகப்பெரிய வருத்தம்.எனக்கு தற்போது கொஞ்சம் பிரச்சனைகள் உள்ளது.அதே சமயம் MD-யும் திடீரென 
வெளியூர் கிளம்பி போனார் 
              அதற்க்கு அடுத்தநாள் நான் பூஜையறையில் சாமி கும்பிடும்போது சத்யசாய்பாபாவிடம் "நீங்கள் என்னை எத்தனையோ பேரை தேடிவருகிறீகள்,நன்மை செய்கிறீர்கள் ஆனால் என்னை உங்கள் பக்தனாக ஏற்றுக்கொண்டதாக ஏதேனும் சிறுஅடையாளமாவது கொடுங்கள்"என்று வேண்டிக்கொண்டேன்.அன்றோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ என் MD யை அழைத்தபோது ஷீர்டி போய்விட்டு வந்து கொண்டிருப்பதாக  கூறினார்.நான் பேசிமுடித்த பின்னர்"அடடா இவரிடமாவது சாய்பாபாவின் படத்தை வாங்கிவர சொல்லியிருக்கலாமே"என்று நினைத்து வருத்தப்பட்டுகொண்டேன்.பின்னர் இரண்டுநாள் கழித்து மீண்டும் சாய்பாபாவின் படம்வைத்து அலங்கரித்தவண்டி ஒன்றுவந்து எங்கள்வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தது,அப்போதுகூட அவரைபோய் பார்த்து தொழுதுவிட்டுவரலாம்,இதென்ன வீம்பான மனம் என நினைத்தேன், ஆனாலும் போகவில்லை.பிறகு இதுகுறித்த சிறுஉறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
             சென்ற வெள்ளிகிழமை வேறு ஒரு வேலையாக MD வீட்டிற்கு சென்றிருந்தேன் அந்த வேலைமுடிந்து கிளம்பும்போது,அவர் வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்றார் "ஏன்டா உனக்கு சாய்பாபா சிலை வேணுமின்னா எங்கிட்டதானே நீ கேட்கணும், அவன்கிட்டே போய் கேட்டிருக்கே என்றார். (அவர் குறிப்பிட்டது இதற்கு முன்பு ஷீர்டி நண்பரை பற்றி ) "இல்லீங்க சார் நான் எதுவும் அவர்கிட்ட கேட்கல ,சில நேரத்தில் பாபா பற்றி பேசியிருக்கிறேன் அவ்ளோதான்" என்றேன் (உண்மையில் நான் அந்த நண்பரிடம் பாபாவின் சிலையையோ போட்டோவையோ கூட கேட்கவில்லை) "நீ கேட்கலையா, கேட்டமாதிரி இருந்ததே" என்று சொல்லிக்கொண்டே சிறிய செவ்வகபெட்டியை கொடுத்தார்.

                                               

            அதை திறந்துபார்த்தபோது உள்ளங்கை அளவுக்கு வெண்மையான 
"ஷீர்டிசாய்பாபாவின்" சிலை உள்ளே இருந்தது.எனக்குவந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை,உலகில் எங்கோ சிறுமூலையில் இருக்கும் பக்தனின் கோரிக்கையை ஏற்றுகொண்டு அவன் வீடு தேடிவந்த மகானின் கருணையை என்னென்று சொல்லுவேன்.
என் வீட்டு பூஜையறையில் அந்த சிலையை வைக்கும்போது சத்யசாய்பாபா-வை வணங்கி "சொன்னதை செய்து விட்டீர்கள்நன்றி ,நீங்கள் என்னை பக்தனாக ஏற்றுகொண்டதற்கு அடையாளத்தை காட்டிவிட்டீர்கள் நன்றி" என்று சொல்லி சத்யசாய்பாபா,ஷீர்டிசாய்பாபா இருவரையும் வணங்கினேன்.இனி என் பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும் என நம்புகிறேன் "சாய்பாபாவின் கருணைக்கு எல்லை ஏது", "பாபா வீட்டிற்கு வந்துவிட்டார்"  


                                  (அவர் பாதங்கள் )

Saturday 6 April 2013

உயிர் நண்பன்

                                                            உயிர் நண்பன் 
 


                     வேலை முடிந்து கிளம்பும்போது  செல்போன் ரிங்கடித்தது .. பார்த்தால் "ப்ரைவேட் நம்பர்" என செல்போன் திரை காட்டியது ...ஹலோ என்றேன் ...டேய் மச்சான், நான் வினோத் பேசறேன் ,எங்க இருக்க...டேய் நீயாடா எப்ப கலிபோர்னியாவுல இருந்து வந்த ,உனக்கு என்கேஜ்மென்ட்  அடுத்தமாசம்தானே ....சும்மா ,ஒரு சேஞ்சுக்கு கல்யாணமே சூசைட்தாண்டா, அதான் அதுக்கு முன்னாடியே நம்ம பசங்க எல்லாரையும் பார்த்துரலாம்ன்னு வந்தேன் ,அப்புறம் எங்கேயும் நகரமுடியாது ,அதான் உடனே வந்துட்டேன் ,சரிடா குப்பண்ணா பிரியாணி கடைக்கு 8 மணிக்கு வந்துடு,  வெயிட் பண்றேன் ,கொஞ்சம் கதை நிறைய பிரியாணி ....சரிடா என்றேன் ..அவனுக்கு குப்பண்ணா பிரியாணி ரொம்ப  பிடிக்கும்,கலிபோர்னியாவுக்கு போனதுக்கு அப்புறம் இப்பதான் முதல்தடவை வர்றான் .
             7.45 க்கு குப்பண்ணாவுக்கு சென்றேன் அவன் எனக்கு முன்பே காத்திருந்தான் ...கொஞ்சம் டல்லடித்திருந்தான்... ஏன்டா  டல்லா இருக்கே என்றேன் ,மொதல்ல ஆர்டர் பண்ணு என்றான் ...பிரியாணி ,வஞ்சிரம் மீன் உள்ளே போனதும் மெதுவாக பேச ஆரம்பித்தான் "இங்க வேற கல்யாணம் பிக்ஸ் பண்றாங்க ,அங்க ஒரு மேட்டர்ல சிக்கிட்டேன் அதுல இருந்து வெளிய வர்றது  ரொம்ப கஷ்டம் ,அதுனால ஒரு முடிவு பண்ணிட்டேன் " என்ன பிரச்னை .....ப்ச் ,சொல்லி சரி பண்ற நிலைமைய தாண்டிடிச்சு ,விட்ரு ...சரி விடு ,சரியாகிடும் நாங்கெல்லாம் இருக்கோம்ல ..."நீங்க இருந்து என்ன பண்ணுவீங்க ,போடா" ,அந்த பிரச்சனைய தீர்க்க முடியாது ,நான் பார்த்துக்குறேன்" அவன்  சகஜமாக கொஞ்சநேரம் ஆனது  ,டின்னர் முடிஞ்சு  கொஞ்சம் கவலையுடன்  என்னை திரும்பி பார்த்தபடியே போனான் .
                வீட்டுக்கு போய் கட்டிலில் விழுந்தேன்  நல்லதூக்கம் ...காலையில அம்மா பதட்டமா  எழுப்பினாங்க ..டேய் டிவிய பாருடா ...பிளாஷ் நியூஸில் "கலிபோர்னியாவில் இந்திய இளைஞர் தற்கொலை" ..."50-வது மாடியில் இருந்து குதித்தார்,பெயர் வினோத், வயது 26, ஈரோட்டை சேர்ந்தவர் "ன்னு புதியதலைமுறையில் தகவல் சொன்னார்கள் அதில் அவர்கள் காட்டிய போட்டோவில் இருந்தது வினோத் ..என்னால் நம்ப முடியவில்லை...என் போனை எடுத்து பார்த்தேன் அதில் கால் ரெஜிஸ்டரில் அந்த பிரைவேட் நம்பர் மட்டும் இல்லை ...திடீரென போன் ரிங்கடித்தது,,, " foreign number " எடுத்தேன் ....
லண்டனில் இருந்து எங்க கிளாஸ்மேட்  மகேஷ் பேசினான் ..
            "டேய் கார்த்தி .. வினோத் வந்திருக்கான்டா பேசுறியா"
       எனக்கு தொண்டை வறண்டு மயக்கம் வந்துகொண்டிருக்கிறது !