Monday 19 June 2017

மணிவண்ணனும் அமைதிப்படையும்



                      

                   மணிவண்ணன் தமிழ் சினிமாவில் திரில்லர் படங்களுக்கு புதிய வாசலை திறந்தவர் இவரின் நூறாவது நாள் தமிழின் தலை சிறந்த திரில்லர்களில் ஒன்று எந்தளவுக்கு என்றால் அதன் பாதிப்பில் கொலை செய்யுமளவுக்கான பாதிப்பை ஏற்படுத்தியது.மணிவண்ணன் கோயம்புத்தூர் சூலூர்காரர்.காலேஜில் இங்கிலீஷ் படிக்க முடியாமல் சென்னைக்கு வேலைக்கு சென்று பின் இயக்குனரானவர்.இங்கிலீஷ் சரியாக புரியாமல் அப்ளிகேசனை ஃபில் அப் செய்ய சொன்ன சத்யராஜ் பின்னாட்களில்" மணிவண்ணன் இயக்குனராக நான் தான் காரணமென "வேடிக்கையாக சொல்வார். மணிவண்ணன் ஒரு வியத்தகு இயக்குனர் என்றால் மிகையில்லை எல்லா ஜானரிலும் படமெடுத்து வெற்ற கண்ட இயக்குனர் அவர்.
                  மற்றவர்கள் போல சினிமா ஆசை கொண்டு சென்னைக்கு வந்து பசியும் பட்டினியுமாய் கிடந்து இயக்குனரானவர் இல்லை.கோவை செழியன் என நினைவு அவர் மூலம் சென்னைக்கு வந்தவர் தயாரிப்பாளர் கே ஆர் ஜி ஆபீசில் வேலை செய்கிறார்.அப்போது சிகப்பு ரோஜாக்கள் படம் தயாரிக்கிறார் கே ஆர் ஜி.அது
சம்பந்தமாக அடிக்கடி ஆபீஸ் வரும் பாரதிராஜா விடம் வேலை கேட்கிறார் (பாக்யராஜுக்கு அவருக்கும் சிறிது முட்டல் இருந்த நேரம்,சிகப்பு ரோஜாக்கள்-ளில் பாக்யராஜ் ஃப்ரீலான்சராக பணிபுரிந்து கொடுத்தார். வசனமும் அவரே) அதனால் அவரும் சம்மதித்து சேர்த்துக்கொள்கிறார்." நான் மத்தவங்க மாதிரி கஷ்டபட்டு இயக்குனர் ஆகல,சென்னைக்கு வந்ததிலிருந்து உதவி இயக்குனராகி பின் இயக்குனரானது வரை எதுவும் நான் கஷ்டபடவில்லை அதுவாக எளிதாக எனக்கு கிடைத்தது " என பேட்டியில் சொன்னார். இதை அவர் எளிதாக சொன்ன போதும் அவருக்கும் சவால்கள் உண்டு 


                 பாரதிராஜா பிறரின் கதைகளையே அதிகம் படமாக்குவார் முக்கியமாக அவர் நண்பர் செல்வராஜ் மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் கதைகள் அப்படி அவர் தன் உதவி இயக்குனரான மணிவண்ணனின் கதையை படமாக்குகிறார் அதுதான்"பூங்கதவே தாழ் திறவாய்" "இது ஒரு பொன்மாலை பொழுது" என வைரமுத்து வுக்கு வாசலை திறந்துவிட்ட "நிழல்கள்" படம்.இதை "இறைவி" படத்தின் மூலம் எனலாம். ஒரு குடும்பம் நாசமாய் போவதுதான் கதை.படத்தின் ரிசல்ட்டும் அதேதான்.பாரதிராஜா மணிவண்ணனை மீண்டும் கதை பண்ண சொல்ல மிக கமர்சியலாக யோசித்து ஒரு கதையை எழுதுகிறார். படத்தின் கதையை சொல்லி ஒகே வாங்கும் மணிவண்ணன் படத்தின் மொத்த திரைக்கதை வசனத்தையும் எழுதி முடித்த பின் உதவி இயக்குனர் என்பதால் அவர் கையிலேயே வைத்திருக்கிறார். இப்போது போல அப்போது நகல் எடுக்கும் பழக்கம் அதிகம் இல்லை. ஆற்றோரத்தில் ஷூட்டிங்கில் பாறையில் தாவி நடக்கும்போது கைதவறி விழுந்து மொத்த பேப்பர்களும் தண்ணீரில் அடித்து சென்றுவிடுகிறது.இதை அறிந்த இன்னொரு ஆள் மனோபாலா.படத்தின் ஸ்கிரிப்ட் கையில் இல்லாமலையே காட்சி வசனங்களை மாறாமல் சொல்லி கொடுத்து சூட்டிங் நடத்துகிறார்.இடையில் இரவுகளில் ஒற்றை ஆளாக மீண்டும் கதையை அப்படியே தயார் செய்கிறார்.ஸ்கிரிப்ட் தொலைந்து போனது பாரதிராஜா வுக்கு தெரியாமலையே பட சூட்டிங்கை வெற்றிகரமாக முடித்தார்.
          அதுதான் கார்த்திக்கின் அறிமுக படம் வெள்ளிவிழா கண்டது  "அலைகள் ஒய்வதில்லை" மணிவண்ணன் என்ற எழுத்தாளனுக்கு முதல் வெற்றி. ( வருடங்களை நியாபகம் வைத்துகொள்ள தெரியாத என் அம்மாவிடம் நான் சின்ன வயதில் நான் எந்த வருஷம்மா பொறந்தேன்னு கேட்டா "அலைகள் ஓய்வதில்லை வந்தப்ப பொறந்தடா" (1981) ன்னுட்டு வேலை செய்வாங்க,ஆக மணிவண்ணன் வெற்றிகரமான சினிமா கதாசிரியராகி என் வயதாகிறது :)) ) அலைகள் ஓய்வதில்லை அனுபவத்தில் பெற்ற நியாபகசக்திதான் பிறகு அவர் படங்களை எந்த பேப்பரில் எழுதாமலும் காட்சிகளை நினைவடுக்குகளில் கோர்வைபடுத்தி வசனங்களையும் ஸ்பாட்டில் சொல்லி கொடுத்து படமெடுத்து வெற்றி பெற அடிப்படை என நினைக்கிறேன். ஒரு விழாவில் "நான் பேப்பரில் எழுதாமல் படமெடுப்பதை பெருமையாக சொல்கிறார்கள் அது கஷ்டம் நீங்க யாரும் அப்படி பண்ணாதீங்க எழுதி படமெடுங்க" என்றார்.


             இப்படி பாரதிராஜாவுக்கே படம் எடுக்க கதை கொடுத்த மணிவண்ணன் முதலில் இயக்கியது அவர் கதையை அல்ல.திரு.கலைமணி அவர்களின் கதையை
இவர்தான் ஏ ஆர் முருகதாஸின் குரு .கலைமணியிடம் புரூப் ரைட்டராக /அஸிஸ்டெண்ட்டாக வேலை செய்தவர்தான் ஏ ஆர் முருகதாஸ் அவர் தமிழின் சிறந்த கதை சொல்லியாக தொழில் கற்றது அங்கிருந்துதான். எஸ் ஜே சூர்யா கேட்டுக் கொண்டதற்காக வாலி படத்தில் பணிபுரிந்தார் அதன் மூலம் தீனா வாய்ப்பையும் பெற்றார். பேக் டூ மணிவண்ணன்.
         அப்போது இருந்த சிறந்த கதை சொல்லிகள் (கதையை மட்டும் கொடுக்கும் ) கலைமணி, கலைஞானம் ,ஆர் செல்வராஜ் ஆகியோர் ஆவர்.இதில் கலைமணி ஒரு கதையை சொல்ல தயாரிப்பாளர்கள் இயக்குனராக யாரைப்போடலாமென கேட்க அவரொரு பெயரை சொல்கிறார், அவர் இயக்க முடியாத சூழ்நிலையில் பாரதிராஜா வின் பிரதான அஸிஸ்டெண்டான  மணிவண்ணனை ரெக்கமெண்ட் செய்கிறார் கலைமணி.படத்தின் கதையை கேட்ட மணிவண்ணன் பாசமும் நகைச்சுவையும் செண்டிமெண்ட்டும் சேர்த்து படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி படமாக்குகிறார் அதுதான் "கோபுரங்கள் சாய்வதில்லை" .அந்த பட காமெடியும் பாடல்களும் இப்போது பார்த்தாலும் நன்றாக இருக்கும். இது சின்ன வீடு படத்தின் மூலம் என்றும் சொல்லலாம்.அதில் எம் புருஷந்தான் பாடல் ஹிட் அடித்தது.பின்னாளில் "எம் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்" என மணிவண்ணனின் நண்பர் மனோபாலா அதே சுகாசினியை வைத்தே படம் எடுக்கும் அளவுக்கு போனது.


            மணிவண்ணன் இயக்கியதில் கோபுரங்கள் சாய்வதில்லை ,நூறாவது நாள், விடிஞ்சா கல்யாணம், 24 மணிநேரம் ,சின்ன தம்பி பெரிய தம்பி ,பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம் ,ஜல்லிக்கட்டு, வாழ்க்கை சக்கரம், புதுமனிதன் ,தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை போன்றவை முக்கிய ஹிட் படங்கள் ஆகும். தன் தந்தையின் வழியில் திமுக மீது ஆரவம் கொண்டவர்.அது உச்சத்தில் இருந்த போது அவர் பெரிதும் மதித்த கலைஞர் கதை வசனத்தில் பாலைவன ரோஜாக்கள் எடுத்தார் படமும் வசனமும் பயங்கர ஹிட் .பின்னாட்களில் கலைஞர் அவர்கள் "என்னய்யா எவ்வளவு சம்பாதிச்சு வெச்சிருக்க"ன்னு கேட்க தலைவர் கேட்க "உங்ககிட்ட பாஸ்புக் இருக்கிற அளவுக்கு கூட எங்கிட்ட பணம் இல்ல தலைவரே" ன்னு கிண்டலாக பதில் சொல்ல அதையும் ரசித்தார் கலைஞர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆபரேசன் செய்து காலை விந்தி விந்தி வந்த மணிவண்ணனிடம் "யோவ் என்ன மாதிரி வீல் சேர் வாங்கிக்கய்யா வசதியா இருக்கும்"ன்னு சொல்லி அக்கறையை காட்டினார் கலைஞர் .இனிமேல் இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்காது. 
           ஒரு பேட்டியில் "உங்கள் வாழ்வில் கருப்பு நாட்கள் என எதை சொல்வீர்கள்?" என கேட்டதற்கு "ஒரு சிறிய பிரச்சனை காரணமாக இளையாராஜா வுடன் சில படங்களில் சேர்ந்து பணிபுரிய முடியாமல் போயிற்று அதுதான் என் வாழ்வில் கருப்பு நாட்கள்" என குறிப்பிட்டார்.அந்த காலகட்டங்களில் வந்த படங்கள் வாழ்க்கை சக்கரம் சந்தன காற்று புது மனிதன் தெற்குதெரு மச்சான் போன்றவை ஆனாலும் அந்த படங்களும் பாடல்களும் பயங்கர ஹிட். அதற்கு முக்கிய காரணம் சத்யராஜ் க்கு வாய்த்த புது ஜோடி"கவுண்டமணி". மணிவண்ணன் இளையராஜா கூட்டணி மீண்டும் இணைந்த படம் "அமைதிப்படை" கடைசிப்படம் "ஆண்டான் அடிமை".நாம் இப்பொழுது பார்க்கபோகும் அமைதிப்படையும் இப்படி ஸ்க்ரிப்ட் இல்லாமல் ஸ்பாட்டில் டயலாக் சொல்லிகொடுத்து உருவாக்கப்பட்ட படம்தான்.ஆனால் படம் பார்த்தபோது நம்மால் இதை கண்டுபிடித்திருக்க முடியுமா?

                         அமைதிப்படை

           மணிவண்ணனின் பொலிடிக்கல் மாஸ்டர்பீஸ் "அமைதிப்படை" எனலாம். அந்தப்படம் சத்யராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு இரட்டை வேடம் + வில்லனாக நடிக்கும் படம் என்ற அறிவிப்புடன் ஆரம்பிக்கபட்டது 1994 ல் ஜெ வின் துக்ளக் ஆட்சிகாலத்தில் வெளிவந்தது. ஆனால் அதுதான் தமிழக அரசியலின் அரிச்சுவடி யாக இருக்கும் யாரும் நினைக்கவில்லை.சத்யராஜ் + மணிவண்ணனுக்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.மணிவண்ணன் திமுக விலிருந்து விலகி வைகோ-வை ஆதரித்த நேரம்.அதனால் பொலிடிக்கல் சட்டையரில் எல்லாரையும் கிண்டலடித்திருப்பார். நமக்கு ஒரு பிரச்சனைன்னா அதை மனதில் வைத்துக்கொண்டு பகவத்கீதை யை எதோவொரு பக்கத்தை படித்தோமானால் அதில் தீர்வு / ஆறுதல் இருக்கும் என ஒரு நம்பிக்கை உண்டு அதுபோல அரசியலில் ஒரு நிகழ்வு பிரச்சனை நடந்தால் அதன் காரணம் என்ன என்பது அமைதிப்படையில் இருக்கும்.


          "டெலிபோனை கண்டுபிடிச்ச்சது வேணும்னா கிரஹாம் பெல்லா இருக்கலாம் ஆனா அதுல எப்படி ஒட்டு கேட்கணும்ன்னு கண்டுபிடிச்சதே நாங்கதான்"-ன்னு சொல்வார் சத்யராஜ் அப்படி ஒட்டு கேட்ட டெலிபோன்தான் தலிவரின் மகளை திகார் வாசம் செய்ய வைத்தது.முதல் உதாரணம் அமாவாசை கேரக்டர் இப்போ இருக்க / இருந்த பெரிய தலைவர்களின் பிளாஷ்பேக் அதுதான்.எல்லா ரவுடிகளுக்கும் ஒரே பிளாஷ்பேக்தான்-ன்னு அட்டகாச பட வசனம் போல நம் அரசியல்வாதிகளில் 90 % பேருக்கு இது பக்காவா பொருந்தும் அப்படி அமைதிப்படை லாஜிக்கில் சிக்காதவர்கள் மிகமிக அரிதான அரசியல்வாதிகளே.இப்ப நாகராஜசோழன் என்ற பெயரில் சுற்றினாலும் ஆரம்பம் அமாவாசை தான் ,அதாவது இவர்கள் வளர்ந்த பிறகு அவர்களது வரலாறு பெருமையாக கூறிக்கொள்ளும்படி உருவாக்கப்பட்டது.எப்படி என்றால் ஒவ்வொரு முறையும் இந்தியாவில் கொள்ளையடிக்க வந்த கஜினி முகமது-வைத்தான் 17 முறை படையெடுத்து இந்தியா வந்து வென்றான் என விடாமுயற்சிக்கு உதாரணமாக சொல்கிறோம்.இப்படி பெரும்பாலும் பொய்யால் கட்டமைக்கபட்டதே தமிழக / இந்திய அரசியல் தலைவர்களின் வரலாறு." நாம முன்னேறனும்ன்னா நாயென்ன மனுசனென்னங்க ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான் "என்பதே தமிழக/இந்தியாவில் கடந்த 30 வருடங்களில் கோலாய்ச்சிய தலைவர்களின் அடிப்படை கொள்கை எனலாம்.
               இதற்கு முன்பும் தமிழில் அரசியல் படம் வந்திருக்கிறது ஆனால் அதிலெல்லாம் ஒரு ரவுடி அரசியல்வாதி ஆவான் இல்லேன்னா இருக்கிற அரசியல்வாதி கெட்டவனாகவோ நல்லவனாகவோ இருப்பான் .அமைதிப்படை யில் மட்டும்தான் உடல்வலிமை காட்டாமல் புத்தி வலிமை துரோகம் ராஜதந்திரம் குடும்பசிக்கல்கள் அல்லக்கைகளின் வாழ்க்கை என அனைத்தையும் மிக எதார்த்தமாக தொட்டிருப்பார். ஆகச்சிறந்த உதாரணம் "பட்டாபட்டி டவுசர் சீன்".சத்யராஜ் குளித்து கொண்டிருக்கும் போது ஏண்டா மணியா இந்த எலெக்சன்ல ஜெயிச்சிருவமா என்ற கேள்விக்கு தொடர் பதிலாக மணிவண்ணன் "சீட் கட்சி கொடுத்துடுவாங்க ஒட்டு அத ஜனங்கள்ல போடணும், முன்னெல்லாம் நாம மட்டும்தான் கள்ள ஓட்டு போட்டுகிட்டிருந்தோம் இப்ப நம்ம கட்சிலிருந்து போனவனுங்க தான அவங்க கள்ள ஓட்டு பின்றானுங்களே" ன்னுவார்.இது தமிழ்நாட்டு முக்கிய திராவிட கட்சிகளின் ஒட்டு பற்றிய / ஒட்டு வங்கி குறித்தது.உடனே நாமதான் ஒண்ணும் பண்ணலியே என்ற கேள்விகளின் பதிலாக எதாவது பண்ணனும் என்ற நினைவுடன் அண்டராயரை அவிழ்த்து போடுவார்.அதை புதிய அல்லக்கை எடுக்க மணிவண்ணன் அவரிடம் சண்டைக்கு போவார் என்ன பேசிகிட்டிருந்தோம் என சத்யராஜ் கேட்க சண்டை போட்டதுல மறந்துட்டோங்க்கன்னா என்பார் மணிவண்ணன் "அப்போ சண்ட போட்டா பழசெல்லாம் மறந்திருமா"என்ற இன்றைய அரசியலின் அரிச்சுவடியை சொல்வார் சத்யராஜ்.


               எலெக்சன் நேரத்தில் மட்டும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் மாதிரி எதிர்கட்கட்சிகளின் ஊழல்களை பேசுவதும் ,அரசாங்கத்தின் பெயர் கெடும் போது பீப் சாங் மாட்டுக்கறி ஜாதிப்பிரச்சனை மதக்கலவரங்கள் ரயிலை எறிப்பது சிலை உடைப்பு செருப்பு மாலை நடிக / நடிகர்களின் பிரச்சனை ஆரம்பித்து திசை திருப்புவது இல்லேன்னா நமீதாவை ஆட விட்டு/ உச்ச நட்சதிரங்களை பேச வைத்து பாராட்டுவிழா நடத்தி கொள்வது என திசை திருப்புதல் நடக்கிறது.அரிஜன் ஒருவன் இறந்துபோக உதவி கேட்டுவரும் அரிஜனிடம் பணம் கொடுத்து உதவி செய்வது போல செய்து உயர்ஜாதியினரின் தெருவில்  பிரச்சனை ஏற்படுத்தி ஜாதிக்கலவரத்தை தூண்டுவார்.
 "ஒரு ஜாதியை / மதத்தை ஆதரிப்பதாக சொல்பவன் எல்லாம் அதற்கு நன்மை செய்பவன் இல்லை" என்ற உண்மையை உரக்க சொல்லியிருப்பார் மணிவண்ணன்.அந்த அரிஜன் கலவரத்தின் காரணகர்த்தாவான நாகராஜசோழனை போட்டுத்தள்ள வந்து சுடப்படுவான் அவனை சின்ன சத்யராஜ் பார்க்க போகும்போது உன் பேர் என்ன என்ற கேள்விக்கு "வைகோ"வின் முழுப்பெயரான "கோபால்சாமி" என்பான் .கும்பகோண மகாமககுள விபத்தை கிண்டலடித்த சீனையே ஜெ கண்டுகொள்ளாமல் விட ஆட்சிலேயே இல்லாத இன்னொருவர் தன் செல்வாக்கால் சென்சார்போர்டில்  "கோபால்சாமி" என்ற வார்த்தையை மியுட் செய்ய வைத்தார்,அது இப்ப நீங்க டிவிடில பார்த்தா கூட தெரியும். 

         ஜாதி மதத்த யாரு கண்டுபிடிச்சா ங்கிற கேள்விக்கு "மந்திரம் ஒதுறவங்க கண்டுபிடிச்சாங்க மந்திரி மாருங்க அத கெட்டியா பிடிச்சிகிட்டாங்க"ன்னு இந்திய அரசியல் வரலாற்றை ஓரே வரியில் சொல்லியிருப்பார். என ஜாதி மத பாகுபாட்டை ஜாதி மதத்தை ஒழிச்சிட்டா நாம சோத்துக்கு சிங்கி அடிக்கணும்கிறதயும் சொல்லியிருப்பார். கூடவே பிடிக்காதவர்களை கலவரத்தில் போட்டு தள்ளுவது / விபத்தில் முடிப்பது என "தனிஒருவன்" படத்தின் உயிர்நாடியை போகிற போக்கில் சொல்லியிருப்பார்.
            மணிவண்ணனிடம் எடுபிடியாக சேர்பவர் பேச்சில் அவரை இம்ப்ரஸ் செய்து நெருக்கமாவார் பின்னர் ஒரு பிரச்சனையின் போது வேறு ஒருவரை எலெக்சனில் நிறுத்த யோசிக்கும் மணிவண்ணனிடம் தன்னையே வேட்பாளராக அறிவிக்க தேவையானதை செய்துவிட்டு பதவி வேண்டாமென சொல்வார்.இதுபல தலைவர்கள் பதவி பெற்றதன் பிளாஷ்பேக் இந்த பார்முலா இந்தியா முழுமைக்கும் பொருந்தும். அதுபோல மணிவண்ணனின் தயவால் சீட் கிடைத்து எம் எல் ஏ பதவியை பிடிப்பார் சத்யராஜ் .வேட்புமனு தாக்கலின் போது அமாவாசை யாக இருந்தவர் திடீரென நாகராஜ சோழன் ஆவார்.அப்படித்தான் கட்டமைக்கபட்டது இங்கே பல தலைவர்வகளின் பெருமைமிகு வரலாறுகள்.எம் எல் ஏ ஆனவுடன் வாழ்க்கை கொடுத்த மணிவண்ணனை அஸிஸ்டெண்டாக்கி அவர் செட்டப்பையே தள்ளிக்கொண்டு போய்விடுவார்..அரசியல் சதுரங்கத்தில் இது அதிகம் நடக்கும் ஆட்டமாக இருக்கிறது. 
        காங்கிரசை ஆரம்பித்தவர்கள் எங்கே? அவர்கள் நிலை என்ன? பிஜேபியை நாடு முழுதும் கொண்டு சேர்த்த அத்வானி எங்கே ? திமுக வை ஆரம்பித்த 5 பெரும் தலைவர்களும் அவர்தம் வாரிசுகளும் எங்கே? அவர்கள் கட்சியில் என்ன பதவி வசிக்கிறார்கள்?,அதிமுக வை ஆரம்பித்த எம் ஜி ஆரின் குடும்பத்தினர்க்கு கட்சியில் அவர்கள் பதவிகள் என்ன  என்பதும் உதாரணங்கள்.திமுக வை ஆரம்பித்த அண்ணாவின் மகன் உடல்நிலை சரியில்லாமல் அரசாங்க ஆஸ்பிட்டலில் வைத்தியம் பார்த்து நோய் குணமாகாமல் செலவுக்கும் பணம் இல்லாமல் அவர் வீட்டில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அதுவும் திமுக ஆட்சியிலேயே. அதுபோல ஸ்கூலில் படிக்கும் ரஞ்சிதாவை பரிகாரத்துக்காக திருமணம் செய்வார். அதுவும் தமிழ்நாட்டில்  நடந்ததுதான். பதவிப்பிரமாணம் ,கோ படத்திலும் இது வரும்.படத்தில் ஜோதிடர் வந்து கட்டம் கணித்து சொல்வதும் வெளியில் பகுத்தறிவு பேசினாலும் ஜாதகத்தை வைத்தே கூட்டணி குறித்து முடிவு செய்வதையும் சொல்லியிருப்பார்.
           சுஜாதா-வால் சொத்து சுகங்கள் அந்தஸ்த்தை பெற்ற சத்யராஜ் ஒரு கட்டத்தில் இமேஜுக்காக த்தான் சுஜாதாவை விட்டு வைத்திருக்கிறார் என்பார் சுஜாதா,பின்னர் அதே சுஜாதா வை ஓவர் கான்பிடன்சில் கொல்ல சொல்லிவிட்டு "என்னோட இமேஜுக்காக கொல்லாமலிருக்கவும் தெரியும் ,கொன்னுட்டு அதிலிருந்து ஒரு இமேஜை உருவாக்கிகவும் தெரியும்ன்னு சொல்லிடு"ன்னுவார் சத்யராஜ் இது நேதாஜி, மகாத்மா காந்தி ,சஞ்சய் காந்தி, கன்சிராம்,ஜெயலலிதா உட்பட பல அரசியல் தலைவர்களின் மர்மமரணதுக்கும் பொருந்தும். ஆனால் அப்படி ஆணவத்தில் கொலை செய்தபின் சத்யராஜுக்கு இறுதிக்காலம் வந்துவிடும் இதுவும் இப்ப தமிழ்நாட்டில் நடக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பாவத்தின் பலனாக குடும்பத்தில் நிம்மதி இருக்காது என்பதும் படத்தில் சுஜாதா கேரக்டர் மூலம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் இதன் மூலம் பணம் பதவி வைத்திருப்பவர் எல்லாம் நிம்மதியாக வாழ்வது கிடையாது என்ற பாடமும் வெளிப்படும்.அமைதிப்படை பட வசனங்கள் கேசட்டுகளிலும் ஒரு ரவுண்ட் வந்தது.


         அமைதிப்படையிலும் அதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் வாழ்க்கை சக்கரத்தில் அஸிஸ்டெண்டாக ஆரம்பித்து அமைதிப்படை வரை அஸிஸ்டெண்டாக இருந்த சுந்தர் சி மூலமாக உள்ளத்தை அள்ளித்தா வில் செகெண்ட் இன்னிங்கஸை நடிப்பில் ஆரம்பித்தார் எனலாம்.அதுமுதல் கிட்டதட்ட 10 வருடங்களுக்கு மேல் மணிவண்ணன் இல்லாத படமே இல்லை என்ற நிலை உண்டானது.காமெடியன் வில்லன் குணச்சித்திரம் டேன்சர் !! ( மணிவண்ணன் ஆடினா அந்த படம் ஹிட்டுன்னு ஒரு செண்டிமெண்ட் இருந்துச்சு ) என பல பரிமாணங்கள்.நடிகர்களிலேயே கேரவன்-களை வாடகைக்கு விடும் பிஸினஸை முதலில் ஆரம்பித்தவர் இவர்தான் அதை பெரிய அளவில் செய்தார்.குடிப்பழக்கத்தால் குடல் கெட்டு ஆபரேசன் செய்தார் மீண்டார் தண்டுவட ஆபரேசன் செய்தவர் அதிலிருந்து மீள முடியவில்லை.சரியாக நடக்க முடியாமல் போனது.நாகராஜ சோழன் MA MLA படத்தை இயக்கினார் அது அவர் கடைசி படமென ஆசிட்டில் தோய்த்த் ஒரு பேட்டி வெளிவரும்வரை அவருக்கு தெரியாது அந்த பேட்டியால் மனதில் வலியுடனே மறைந்து போனார் மணிவண்ணன்.