Monday 16 November 2015

தக்காளி

          வேலை நிமித்தம் குடும்பத்தை பிரிந்து தனியே வசிக்கும் நான் இன்று மளிகைக் கடையில் இருந்து  துணிப்பையில் சமையலுக்கு தக்காளி வாங்கி வந்தேன். மனைவியை பிரசவத்துக்கு  ஊருக்கு அனுப்பிவிட்டு என் போலவே சமைத்துண்டு சிலநேரம் பகிர்ந்துண்டும் வாழும் பக்கத்துவீட்டு போலீஸ்காரர் சதீஷ் " அண்ணே தக்காளியாண்ணே ,ஃப்ரஷா இருக்காண்ணே" ன்னு கேட்டுக்கொண்டு  ஒரு தக்காளியை பையிலிருந்து  எடுத்து சாப்பிட்டுக் கொண்டே வீட்டுக்குள் சென்றார். இந்த செயல் என் நினைவு  அடுக்குகளில் தங்கியிருந்த தக்காளி குறித்த என் நினைவுகளை மேலெழுப்பியது..


            அம்மா சமைக்கும்  உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால் நிறைய தக்காளி உபயோகித்து செய்யப்படும் "தக்காளி பஜ்ஜி" என்ற கிரேவிதான் சாப்பாட்டுடன் இதை பிசைந்து சாப்பிட்டால் வழக்கமான அளவைவிட இருமடங்கு சாப்பாடு உள்ளே போகும்.சப்பாத்தி,பூரி-க்கும் இதை தொட்டுக்கொள்ளலாம். இதன் ஸ்பெசாலிட்டி என்னவென்றால் ஒருநாள் கடந்தவுடன் அதன் விண்டேஜ் ஏறும் அது ஏறஏற அதன் சுவை கூடும். மூன்றாம் நாள் "தக்காளி பஜ்ஜியும் பழைய சோறும்" சாப்பிட்டால் அதுதான் எனக்கு "தேவாமிர்தம்" .நான் 80-களில் பிறந்தவன் ஆதலால் அப்போதெல்லாம் ஃப்ரிட்ஜ் என்ற வஸ்து மிடில்கிளாஸ் குடும்பங்களுக்கே அவ்வளவு பழக்கமில்லை.எங்கள் குடும்பசூழ்நிலையும் வறுமைக்கோட்டை ரப்பரால் அழித்துக்கொண்டிருந்த நேரம் என்பதால்  நாங்கள் ஃப்ரிட்ஜ் பற்றி கேள்விப் பட்டிருக்கவே இல்லை.ஸ்நாக்ஸ் என்பது கடையில் கிடைக்கும் பொறி உருண்டை, கடலை மிட்டாய், ஜவ்வுமிட்டாய்தான். சிலநேரம் அம்மா பொட்டுகடலைய அம்மில அரைச்சு சக்கரை தேங்கா துருவி போட்டு தருவாங்க அது சூப்பரா இருக்கும் .விடுமுறை நாட்களில் "ஒப்புட்டு"ம்
 ( போளி ) செஞ்சு தருவாங்க .
 


             அம்மா தினத்தேவைக்கு தேவையான காய்கறிகளை அன்றன்றைக்கு வாங்கித்தான் சமைப்பாங்க அதை ஒரு ஜவுளிக்கடை மஞ்சள்பையில்தான் வாங்கிட்டு வருவாங்க. அப்போதெல்லாம் தக்காளி இவ்வளவு கடினமாக இல்லை. கொஞ்சம் அழுத்தினாலும்  உடைஞ்சு போயிடும் இல்ல கன்னிப்போயிடும். காய்வெட்டாக தக்காளியை வாங்கினால்தான் ஒரு வாரத்துக்கு தாங்கும் ( இப்பெல்லாம் கொஞ்சம் பழுத்தநிலையில் இருக்கும் தக்காளியை வாங்கி ஃப்ரிட்ஜ் இல்லாமல் வைத்திருந்தால் கூட 7 டூ 10 நாட்கள் தாங்குது "ஹைபிரிட்" ) பழுத்த தக்காளி இரண்டு மூன்று நாட்கள் தாங்கும் என நினைவு.ஸ்நாக்ஸ் வெரைட்டி என்பது குறைவாக இருந்த காரணத்தினால் அம்மா வாங்கிவரும் வெண்டைக்காய்,கேரட்,தக்காளி இதெல்லாம் பச்சையாவே சாப்பிடுவேன். அதிலும் தக்காளி மிகவும் பிடித்த ஒன்று இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையில் ஜூஸ் போன்று கடித்தும் குடித்தும் நடுப்பகுதி தவிர்த்து முழுத்தக்காளியையும் சாப்பிட்டு விடுவேன்.தக்காளி மனதுக்கும் வயிற்றுக்கும் அம்மாவை போலவே மிக நெருக்கமானது. இப்பக்கூட எப்போ "தக்காளி பஜ்ஜி" செஞ்சாலும் அம்மா நினைவு வராம சாப்பிட முடியுறதில்ல. தக்காளியை குறுக்காக வெட்டினால் ஆச்சரியமாக அது இதயத்தின் வடிவத்தை போலிருக்கிறது  அதுகூட மனதின் நெருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.


            பருப்பு தண்ணிய வடிச்சு அதுகூட மிளகு ,வரமிளகாய் ,சீரகம், பூண்டு தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு அம்மா ரசம் வெச்சா அந்த வாசம் வீட்டையே தூக்கும்.அதுக்கு மட்டும் ஒரு ரவுண்ட் எச்சா ( அதிகமா ) சாப்பிடுவேன் என் மாமியார் வீட்டில் ஒரு தக்காளியை வைத்து ஒரு குண்டா ரசம் வைப்பார்கள் ரசத்தில் தக்காளி இருப்பதே தெரியாது.ரசத்துல தக்காளிய ஆள்வெச்சு தேடணும்.நாங்கூட"என்னம்மா ரசத்துல தக்காளி கருவேப்பிலய   கயித்த கட்டி இறக்கிட்டு கொஞ்சநேரத்துல வெளில எடுத்து வெச்சிருவீங்களா "ன்னு கேட்பேன்.இவர்களால் எப்படி தக்காளியை இவ்வளவு குறைவாக பயன்படுத்தி சமைக்க முடிகிறது என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.தக்காளி என்பது நம் குடும்பத்துடன் கலந்துவிட்ட ஒன்று.தக்காளியில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. அந்த விவரங்கள் இணைப்பு  

http://tamil.boldsky.com/health/food/2011/medicinal-uses-tomato-aid0091.html
http://www.maalaimalar.com/2011/01/04112520/tomato-used.html 

          ஆனாலும் பாகற்காய் போல் நம் நாக்குக்கு மிகவும் கஷ்டம் கொடுக்காமல் நம் உணவுக்கு சுவையையும்,சத்தையும் கொடுக்கிறது. நாட்டு தக்காளி போன்று பெங்களூர் தக்காளி உணவில் அவ்வளவு சுவை சேர்ப்பதில்லை அதிகம் இனிப்பாக இருப்பதினால் வெறும் வாயில் உண்ண சுவையாக இருக்குமளவுக்கு உணவில் சேர்த்தால் அது சுவை தருவதில்லை என்பது என் கருத்து.தக்காளி என்னை மிகவும் பாதித்தது கசாப் மரணத்தின் போதுதான். காங்கிரஸ் அரசாங்கம் தங்கள் ஆட்சிமுடிகிற தருவாயில் பாகிஸ்தானின் அம்பான மும்பை தாக்குதல் குற்றவாளி "அஜ்மல் கசாப்" ஐ தூக்கில் போட்டது.கசாப்பை தூக்கில் போடுவதை ரகசியமாக வைத்திருந்து தூக்கில் போட்டு அவனை புதைத்த இடத்தை கூட இன்றுவரை கூட ரகசியமாக வைத்திருக்கிறார்கள் ( !!! ).  


              கசாப்பை தூக்கில் போட்டதும் கசாப்பின் கடைசி நிமிடங்கள் குறித்த தகவல்கள் நாளிதழ்கள் , வார இதழ்கள் என எல்லாவற்றிலும் காணக் கிடைத்து. அதில் சிறைத்துறை அதிகாரிகள் கசாப்பிடம் உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டதற்கு "தக்காளி பழம் வேண்டும்" என்றானாம் . அதிகாரிகள் ஒரு கூடை நிறைய தக்காளிப்பழத்தை அவனுக்கு கொண்டுவந்து கொடுத்துள்ளனர்.அவனும் அதிலிருந்து சில தக்காளிப் பழங்களை சாப்பிட்டு விட்டு தூக்குமேடைக்கு சென்றிருக்கிறான் .இதை வெறும் ஆசையாக , ஒரு நிகழ்வாக என்னால் கடந்துபோக முடியவில்லை.ஒருவனின் கடைசி ஆசை என்னவென்று  கேட்கும்போது அவன் சாப்பாட்டு  பிரியனாக இருந்திருந்தால் விலையுயர்ந்த ஆப்பிள்,மாதுளை,முந்திரி,பாதாம் இல்லை விலையுர்ந்த வேறு எதாவது உணவுப்பொருட்களை கேட்டிருப்பான்.
                 கசாப்  கேட்டதோ "தக்காளி" ,தக்காளி அவனுக்கு மிகவும் பிடித்த உணவாக எப்படி ஆகியிருக்கும் அதன் சுவையினாலா??!!  இல்லை அவனுடைய அம்மா அதை வைத்து சுவையான உணவை சமைத்து கொடுத்ததாலா ??!!  என்போல் அவனும் அவனுடைய அம்மா தக்காளியை வாங்கிக்கொண்டு வரும்போது எடுத்து ஆசையாய் தின்றிருப்பானோ ??!! கடைசியாக தன்  அம்மா கையால் சாப்பிடும் உணர்வை பெற தக்காளியை கேட்டுவாங்கி சாப்பிட்டிருப்பானோ??!! போன்ற கேள்விகள்  இதுவரை என் மனதுக்குள் தொக்கிக்கொண்டு  நிற்கிறது...

Tuesday 16 June 2015

கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்


கமல் சார் வணக்கம் ,

                                  மீடியா என்னும் அசுரனின் வளர்ச்சியை பல வருடங்களுக்கு முன்பே கண்டுகொண்ட நடிப்பின் அசுரன் நீங்கள் எனவே இந்த கடிதம் உங்களை வந்துசேரும் என நம்புகிறேன்,வந்து சேராமலும் போகலாம்...இந்த பதிவை படிக்கும் உங்களின் ரசிகர்கள் பாதியிலேயே இந்த பதிவை படிப்பதை நிறுத்தலாம்...ஆனாலும் நான் நினைத்ததை பதிவு செய்ய நினைக்கிறேன்..

                               ஈரோடு பாரதி தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக இரண்டடி அகலமுள்ள டிக்கெட் கவுன்டரில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மூச்சு முட்ட காத்திருந்து வேர்வையில் நனைந்து கசங்கிய ஆடையுடன் அந்த படத்தை பார்த்தபோதும் தங்களின் மீதான ஆச்சரியம் குறையவில்லை


                                 ஈரோடு ஆனூர் தியேட்டரில் பெண்களைப்போல் கண்ணீர் சிந்தியபடி "மகாநதி" படத்தை பார்த்தபோதும் தங்களின் மீதான ஆச்சரியம் குறையவில்லை.



                                    சென்ற மாதம் தொலைதூர பயணம் சென்று வருகையில் இளையராஜா ஹிட்ஸில் இடம்பெற்ற "உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்" "அபூர்வ சகோதரர்கள்" பாடலை சிலாகித்து பிறகு சொன்னேன் இதேவயதில் ( 30 + ) கமல் "அபூர்வ சகோதரர்கள்" படத்தை முழுவதுமாக எழுதி படத்தை வெற்றியடைய வைத்துவிட்டார்.நானோ ரசித்து கொண்டிருக்கிறேன் என்று ... அதென்னவோ உங்களை சிலாகிப்பதில் பெருமை எனக்கு ..

           ஒரு பேட்டியில் சொன்னீர்கள் "சிவாஜி எனும் சிங்கத்துக்கு தமிழ் திரையுலகினர் வெறும் தயிர்சாதம் மட்டுமே கொடுத்து வந்தார்கள்
அதனாலேயே எனக்கான உணவை (கதையை) நானே சமைத்துக் கொள்கிறேன்" என்று.அந்த சமையல் ஆரம்பகாலத்தில் இருந்து நன்றாகவே இருந்து வந்தது. முதலில் "தேவர் மகன்" தமிழின் தலைசிறந்த 10 படங்களின் பெயர் சொன்னால் அதை தவிர்த்து சொல்லமுடியாது.படத்தின் பெயர் ஜாதி சார்ந்து இருந்தாலும் படம் இரு சகோதரர்களின் ஈகோ யுத்தம், படிப்பறிவு , வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல போன்ற விஷயங்களையே தூக்கிபிடித்தது. இப்போது சமையல் எங்களுக்கு சற்று சலித்துவிட்டது.. தங்களின் சமையலை தாங்களே செய்யுங்கள் அதில் தவறில்லை அதில் சமீபமாக ஒரு நோய்த்தன்மை வந்துள்ளதாக எண்ணுகிறேன்

ஆளவந்தான் -த்ரோட் கேன்சர்
தசாவதாரம் - அவ்தார் சிங் - கேன்சர்
மன்மதன் அம்பு - கேன்சர்
உத்தம வில்லன் - ப்ரைன் டியுமர்


               இதில் "உத்தமவில்லன்" கதை வசூல்ராஜா-வில் கேன்சர் வந்த ஜாகீர் உசேன் வசனத்தில் அடங்கியிருக்கிறது." அம்மாவ மெக்காவுக்கு அனுப்பனும்,
தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும் ,சொந்த வீடு வாங்கணும் இதெல்லாம் முடியுமா"ன்னு வரும்.கேன்சர் பாதிப்புடைய கேரக்டர் சமீப காலங்களில் நீங்கள் அதிகம் சொன்னதால் எங்களுக்கு மிகவும் போரடிக்கிறது அதுதான் பிரச்சனை.நீங்கள் உங்கள் படத்தில் பாலச்சந்தரை வைத்து கிண்டலடித்து கொண்டால் மட்டும் அது நியாயம் என்றாகாது.உத்தமவில்லனின் ஒரே ஆறுதல் பாலச்சந்தர் இருக்கையில் உங்களை அவரே அமரவைப்பார்.நீங்கள் தொழுத இரு சிகரங்களின் நாற்காலியிலும் நீங்கள் அமர்ந்துவிட்டீர்கள்.ஒன்று நடிப்பின் சிகரம் மற்றொன்று இயக்குனர் சிகரம்.அந்த படத்தில் உத்தமனின் பகுதிக்கு கிரேசி மோகனின் பங்கிருந்திருந்தால் இவ்வளவு தொய்வு ஏற்பட்டிருக்காது என்பது என் கருத்து.



            அபூர்வ சகோதரர்கள், குணா ,தேவர்மகன், மகாநதி ,மகளிர் மட்டும் போன்ற படங்கள் அழுத்தமான கதைகளை கொண்டிருந்தபோதும் வெற்றியை சுவைத்தது. அதுவும் உங்கள் எழுத்துகள்தான். ஒவ்வொரு கதைக்குமான வித்தியாசம் வெற்றியை சுவைக்கிற ஆர்வம் தற்போது தங்களுக்கு தேவையில்லை என நினைக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் ஆளவந்தான்-க்கு பிறகு தோல்வி படம் என்றால் மன்மதன் அம்பு தான். மற்றபடி தங்களின் பேனா நிறைய வெற்றிகளையே பெற்றிருக்கிறது. சமீபகாலத்தில் உங்கள் படங்களின் கதை திரைக்கதை வசனம் நடனம் இயக்கம் பாடல்கள் என அனைத்து துறைகளிலும் தங்களின் பெயர் இடம் பெறுகிறது. இது புதிய திறமையாளர்களின் புதுமையான பங்களிப்பை தங்களின் படங்கள் மறுக்கிறது என்பதும் என் கருத்து.சரியாக சொன்னால் தங்களை விட புதுமையை புகுத்தியவர்கள் / புகுத்துபவர்கள் இந்திய சினிமாவில் யாருமில்லை.அது அதிமேதாவித் தனமானது வெகுஜன புதுமை புகுத்திகளுக்கும் இந்த நேரத்தில் தாங்கள் வாய்ப்பளிக்கலாம். உதாரணமாக மிஷ்கின், நலன் , கார்த்திக் சுப்புராஜ் ,அல்போன்ஸ் போன்றவர்களுக்கு.


                     முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தை ஏன் ரீமேக் செய்கிறீர்கள் எனக்கேட்டபோது நீங்கள் சொன்னீர்கள்
            "எனக்கு பொதுவாக ரீமேக் படங்கள் செய்வதில் உடன்பாடு கிடையாது.இந்த படத்திற்கு 45 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டார்கள் தவிர நல்ல சம்பளமும் கொடுத்தார்கள் அதனால் ஒத்துக்கொண்டேன்" என்று..எனக்கு தெரிந்து "சத்யா" வுக்கு பிறகு ரீமேக் செய்து நீங்கள் நடித்த படம் குருதிப்புனல். பிறகு"வசூல்ராஜா"தான் அது நீங்கள்தான் வசூல்ராஜா என மீண்டும் நிரூபித்தது.அதே கூட்டணி மீண்டும் இணையாதது ரசிகர்களுக்கு வருத்தம்.அதற்கு பிறகு நீங்கள் ரீமேக் செய்து நடித்தபடம் "உன்னைப்போல்  ஒருவன்" அதில் எனக்கு சிறிதும் ஒப்புதல் இல்லை அது நீங்கள் செய்ய வேண்டிய கேரக்டர் கிடையாது.அந்த கேரக்டரில் தங்களின் சமகால நடிகர்கள் சத்யராஜ் விஜயகாந்த் சரத்குமார் போன்ற யாரேனும் நடித்திருந்து நீங்கள் கமிஷனர் வேடத்தில் நடித்திருந்தாலோ அல்லது படத்தை தயாரித்திருந்தாலோ அந்த படத்தின் ரிசல்ட் வேறு மாதிரி இருந்திருக்கும். தற்போது வெளிவரப்போகும் .


      "பாபநாசம்"  எனும் ரீமேக் படத்துக்கான காரணம் இதுவரை  விளங்கவில்லை நல்ல கதை என்பதை தாண்டி அந்த படத்தில் எதுவுமில்லை அதுவும் மேக்கப் என்பதற்கு முழு அர்த்தம் அளிக்கும் நீங்கள் ஒட்டுமீசை சகிதம் நடித்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . மோகன்லாலே திரிசியத்தில் வந்து போயிருப்பார் அந்த போலீஸ் ஸ்டேசன் சீன் மற்றும் சிலசீன்களைதவிர்த்து பார்த்தால் உங்களுக்கு பெரிய வேலையில்லை உங்களுக்காக திரைக்கதையில் மாற்றம் ஏதும் செய்திருக்கிறாரா எனத்தெரியவில்லை.இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் தேவர் மகனுக்கு பிறகு ரீமேக் செய்யவில்லை


        "குருதிப்புனல்" மட்டுமே ரீமேக் அதற்கான நியாயம் அதில் தெரிந்தது. அந்த கேரக்டரை உங்களைத் தவிர யாரும் செய்திருக்கமுடியாது.அப்படி இருந்த நீங்கள் நான் மேற்சொன்ன இரண்டு படங்களை ரீமேக் செய்ததன் காரணம் புரியவில்லை.நீங்கள் முன்பு செய்தது போல் ஒரு ஆக்சன் படம் ஒரு காமெடி படம் ஒரு மசாலா படம் என்ற பார்முலாவையாவது கடைபிடித்தால் நன்றாக இருக்கும் .

                 வெற்றி என்பது உங்களுக்கு தேவையில்லாததாக இருக்கலாம் தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பதும் பொழுதுபோக்கிற்கு அப்பாற்பட்ட படங்களை எடுப்பதும் தங்களின் தற்போதைய லட்சியமாக இருக்கலாம். ஆனால் உங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது நல்ல வெற்றி.விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடின்போதே எங்களின் எங்களின் ஆர்வமும் நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கிற அன்பையும் நீங்கள் கண்டிருப்பீர்கள்.தங்களின் படம் முடிந்து வருபவர்கள் "என்னய்யா படம் இப்படி  இருக்கு" என்று சொன்னால்  நாங்கள் மனதளவில் மிகசோர்வடைகிறோம் .வசூல்ராஜா-வில்
 "உள்ளத்தில் காயங்கள் உண்டு அதை நான் மறைக்கிறேன்  ஊருக்கு            ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்
                என்று பாடுவீர்கள்.உண்மையில் அது தாங்கள் காயப்பட்டிருந்த நேரம் என்பதை  நாங்களும் அறிவோம். அதே பாடலில்
          "சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா, தேன் தான் அது நான் தான்" 
                                 என்றும் பாடியிருப்பீர்கள்.அதுபோன்ற சூழ்நிலையிலேயே எங்கள் மனதை சந்தோசப்படுத்திய நீங்கள் தற்போது தங்களின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியிருகின்ற இந்த தருணத்தில் எங்களுக்கு அதைவிட சிறந்த காமெடி படத்தை எங்களுக்கு தந்திருக்க வேண்டாமா ?!!


             இன்றும் தொலைதூர பயணங்களின் போதும் மனது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் நேரங்களின் போதும் என்னை மீட்டெடுக்க உதவுவது அவ்வை சண்முகி, தெனாலி ,அபூர்வ சகோதரர்கள் படங்கள்தான் .தாங்கள் "தேன் துளி" என்று ரசிகர்களுக்கும்  மற்றவர்களுக்கும் நிரூபிக்கவேண்டிய நேரமிது. தெனாலி ,பஞ்ச தந்திரம், வசூல்ராஜா போல் கமல்"ஹாஸ்ய" ஹிட்டை "கிரேசி" மோகன் காம்பினேசனில் எதிர்பார்க்கிறோம்.நீங்கள் அதை விரைவில் எங்களுக்கு தருவீர்கள் எனவும் நம்புகிறோம்.நீங்கள் தேன் துளி என மீண்டும்  நிரூபியுங்கள் நாங்கள் காத்திருக்கிறோம் அந்த வெற்றியை கொண்டாடுவதற்கு!என்னுடைய விருப்பம் ஒன்றுதான் எனக்கு அன்பேசிவம் -மும்  வேண்டும் பஞ்சதந்திரம் -மும்  வேண்டும் மன்மதன் அம்பு மட்டும் வேண்டாம். ஒன்றைவிடுத்து மற்றொன்றை மட்டும் கேட்கவில்லை நான்  "சகலகலா வல்லவன்" சகலத்தையும் தொட்டு எப்போதும் போல்
ஜெயிக்க வேண்டும்  "வசூல் ராஜா"-வாக !!


Friday 12 June 2015

பகவான் ரமணர் - சில நிகழ்வுகள்


              காஞ்சி பெரியவரிடம் சமய நூல்களை கற்று தேர்ந்த ஒருவர் "நான் ஞானமடைய வேண்டும் யாரை என் குருவாக ஏற்பது" எனக்கேட்டபோது
" இப்போது உங்களுக்கு ஞானமளிக்கும் அளவுக்கு சித்தியுடையவர் மூவர் உள்ளனர் ஒருவர் காட்டில் இருக்கிறார் அவர் மற்றவர்கள் கண்ணுக்கு தெரியமாட்டார் மற்றொருவர் காசியில் இருக்கிறார் அவர் யாரையும் பார்ப்பதில்லை இனி உங்களுக்கு ஞான உபதேசமளிக்கும் அளவுக்கு தகுதியுடன் இருப்பவர் ரமணர் மட்டுமே அவரை  போய் கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்" என்றாராம்.அப்படி மக்களுக்கு ஞானத்தை ,நல்லதை எடுத்துரைக்க நம் நம்மோடு இருந்த நம் கண்ணுக்கு தெரிந்த சித்தரே
 "பகவான் ரமணர்' ஆவார்.


         ரமணர் அவர்களின் கடைசி பயணம் தன் பதினாறாவது வயதில் வேங்கடராமன் என்ற பெயருடன் மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்ததே ஆகும்.பின் அவர் சமாதி ஆகும் வரை திருவண்ணாமலையை விட்டு அகலவே இல்லை.."திருக்கையிலாயம் சிவபெருமான் வாசம் செய்யும் இடம் திருவண்ணாமலையே சிவபெருமான்"தான் என்பார்.

         சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வந்துவிட்ட பகவான் ரமணர் பற்றி திருவண்ணாலை வந்து சென்று ஊர்க்காரர் ஒருவர் ரமணரை தேடிக்கொண்டிருந்த ரமணரின் அன்னை அழகம்மையிடம் ரமணர் பற்றி கூற அவர் திருவண்ணாமலைக்கு வந்து ரமணரை வீட்டுக்கு திரும்ப வந்துவிடுமாறு வற்புறுத்தினார்.அப்போது அங்கிருந்த ஒரு பென்சிலை எடுத்து ஒரு தாளில் அவர் எழுதிக்கொடுத்ததுதான்

                                       அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்
                                       ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்
                                       என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது
                                       நடப்பது என் தடை செய்யினும் நில்லாது
                                       இதுவே திண்ணம் ஆகலின்
                                       மௌனமாய் இருக்கை நன்று  !!


 
                             -என எழுதிக்கொடுத்தார் பின்னர்தான் இனியும் இவருடன் போராடுவது வீண் என அழகம்மை மீண்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
பிறகு கொஞ்சநாளில் திரும்பிவந்து துறவறம் மேற்கொண்டு பகவானுடனேயே தங்கிவிட்டார். (மேற்கண்ட ரமணரின் பதிலைத்தான் "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது" என முத்து பட பஞ்ச் டயாலாக்காக ரஜினி பேசி கைத்தட்டல் வாங்கினார்.ஏன் இமயமலைக்கு செல்கிறீர்கள் என ரஜினியிடம் கேட்டபோது இமயமலையை விட திருவண்ணாமலை பவர்ஃபுல் ஆனா அங்க யாருக்கும் என்ன தெரியாது இங்க எல்லாருக்கும் என்ன தெரியுது அதனால்தான் இமயமலைக்கு போகிறேன் என ரஜினி கூறினார்.)

       ஆரம்பத்தில் ஆசிரமம் ஏற்படாதபோது திருவண்ணாமலை தெருக்களில் கிரிவல பாதைகளில் நடந்து சென்று அங்கு அமைந்துள்ள மடங்கள், ஆசிரமங்களில் பிச்சை எடுத்தே உண்பார்.சிலர் அவர் சாப்பிட்ட இலையில் "பகவான் பிரசாதம்" என்று சொல்லிக்கொண்டு சாப்பிடுவதற்காக போட்டி போட்டனர். இதை அறிந்த ரமணர் பின்னாட்களில் கைகளிலேயே பிச்சை எடுத்து உண்டுவிட்டு சாப்பிட்ட கையை தன் உடம்பில் துடைத்துக்கொள்வார் .யாரும் பகவான் பிரசாதம் என சண்டை போட்டுக்கொள்ளமுடியாதபடி செய்துவிட்டார்.

        பகவான் மேலே குகையில் ,ஸ்கந்தாஸ்ரமத்தில் தங்கியிருந்த காலத்திலும் சரி கீழே ரமணாச்சரமத்தில் தங்கியிருந்த காலத்திலும் சரி அவரை தேடி வரும் அடியார்கள் கொண்டுவரும் உணவை அனைவருக்கும் சரிசமமாக பங்கிட்டு கொடுத்த பிறகே  அவர்  சாப்பிடுவார் அது சாப்பாடாக இருந்தாலும் சரி ஒரு பிடி கடலையாக இருந்தாலும் சரி.சில சமயம் ஆசிரமதிற்கு யாரும் உணவை யாசகம் தராவிடில் அன்றைய பொழுதை பட்டினியாக அனைவரும் கழிப்பர்.ஆனால் கடைசிவரை ஆசிரமவாசிகள்  அனைவருக்கும் உணவை பறிமாறிவிட்டு கடைசியாகத்தான் தனக்கு உணவை பறிமாறவேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்து வந்தார்.

        ஒருமுறை ரமண பக்தரும் ஆசிரமவாசியுமான காலேஜ் லெக்சரர் ஒருவர் ஆசிரமத்தை நிர்வகித்துவந்த ரமணரின் தம்பியிடம் ஏற்பட்ட மனக்கசப்பினால் இனிமேல் ஆசிரமத்தில் சாப்பிடக்கூடாது என முடிவு செய்து ரமணரிடம் ஸ்பெஷல் கிளாஸ் என் பொய் சொல்லி விடைபெற்று வெளியே சென்று உணவருந்த நினைத்தார்.அவர் போனபோது ரமணர் சமைத்து கொண்டி ருந்தார் "நான் ஸ்பெசல் கிளாஸ் எடுக்கபோகிறேன்" என ரமணரிடம் சொன்னதும் "என்ன ஓய், இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இன்னைக்கு ஏது காலேஜ்" என்றவர் இட்லியும் ஸ்பெஷல் சாம்பாரும் வெச்சிருக்கேன் சாப்பிட்டுவிட்டு எப்படியிருக்குன்னு சொல்லு என்று தட்டில் போட்டு கொடுத்தாராம் கண்ணீர் மல்க உணவை உண்டார் பக்தர் இவ்வாறு தன்னை சார்ந்த ஒவ்வொரு உயிரையும் மிகவும் வாஞ்சையுடன் கவனிப்பவரே ரமணர்.

        ரமணரை பற்றி கேள்விப்பட்ட ஒரு ஐரோப்பிய தம்பதிகளுக்கு அவரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் வெகுநாட்களாக இருந்தது.அதற்காக அவர்கள் நீண்டநாட்கள் பணம் சேர்த்து திருவண்ணாமலை வந்தடைந்தனர். ரமணர் முன் அமர்ந்த அவர்கள் தங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டதாக கூறினார்கள்.அப்போது ரமணர் "தாங்கள் எங்கிருந்து என்னை நினைத்தாலும் என் ஆசி உங்களுக்கு கிட்டும்" என்றார் இது வழக்கமான சமாதான பேச்சுதான் என அந்த தம்பதிகள் மனதிற்குள்  நினைத்தனர்.அப்போது ரமணர் "தாங்கள் இருவரும் உங்கள் நாட்டில் கடற்கரை ஒரம் பளிங்கு கல்களின் மேல் அமைந்துள்ள  பெஞ்சுகளில் அமர்ந்தவாறு என்னை பற்றி நினைப்பீர்கள்தானே, உங்கள் நாட்டு கடற்கரை அற்புதமாக இருக்கும்" என்றார் அவர்கள் கண் கலங்கிவிட்டார்கள் பின்னே 16 வயதுக்கு பின் திருவண்ணாமலையை விட்டே வராத யோகி உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் தங்களின் ஊரைப்பற்றி சொல்கிறார் என்றால் அதிசயம் அற்புதம் அல்லவா அது அவர் அவர்களின் மேல் வைத்திருக்கும் கருணையன்றி வேறெதுவாக இருக்க முடியும்

                                                     விலங்குகளின் நண்பர்


        ஒரு கோடைக்காலத்தில் ரமணர் தம் அடியார்களுடன் கிரிவலம் சென்று கொண்டிருக்கையில் அனைவரும் மிகுந்த தாகம் அடைந்து நிழலில் நின்றனர்.
தண்ணீரும் கைவசம் இல்லை.அப்போது அந்த மரத்திற்கு வந்த குரங்கு ஒன்று அந்த நாவல்பழ மரத்தை நன்றாக குலுக்கி நிறைய நாவல் பழங்களை கீழே விழச்செய்தது அனைவரும் அதைஎடுத்து உண்டனர் தாகமும் தீர்ந்து அவர்கள் மேற்கொண்டு கிரிவலம் நடக்கும் சக்தியையும் கொடுத்தது.இத்தனைக்கும் அந்த குரங்கு பழங்களை உலுக்கி கீழே விழச்செய்துவிட்டு ஒரு பழத்தை கூட உண்ணவில்லை.ரமணாச்சரமத்திற்கு வரும் பக்தர்கள் கொண்டுவரும் உணவை சில நேரங்கள் குரங்குகள் பிடுங்கி உண்ணும் கோபம் கொண்ட சிலர் அதை அடிக்கபோக நாம்தான் குரங்கின் வசிப்பிடமான காட்டில் இருக்கிறோம் எனவே நாம் அதை துன்புறுத்தகூடாது என்றார்.நிறைய குரங்குகள் அவரிடம் தினமும் வந்து உணவு பெற்று செல்லும்.சிலசமயம் குரங்குகளுக்குள் ஏற்படும் பிரச்சனைக்களையும் அவர் தீர்த்து வைத்திருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் அவர் குறிப்பிட்ட குரங்கை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு.

        ஒருமுறை அவர் மலைக்கு சென்றபோது அவரது இடதுகால் தெரியாமல் அங்கிருந்த குளவி கூட்டின் மீது பட்டுவிட குளவிக்கூட்டம் கோபம் கொண்டு வெளியே வந்து அவரை கொட்டியது.கூட்டை இடித்தது இந்த கால்தானே அதற்கான தண்டனையை இது அனுபவிக்கட்டும் என்று  இடதுகாலை குளவிகளுக்கு காட்டியபடி அசையாமல் குளவிகள் கொட்டி முடிக்கும்வரை அதே இடத்தில் நின்றாராம்.


        பகவான் அமர்ந்திருக்கும் அறைக்குள் அணில்கள் அநாயசமாக வந்து விளையாடும் அப்போது அவர் ஜன்னல் ஒரம் டப்பாவில் வைத்திருக்கும் முந்திரிப்பருப்புகளை அவற்றிற்கு சாப்பிட கொடுப்பார்.அன்று முந்திரிபருப்பு தீர்ந்துவிட டப்பாவில் வேர்க்கடலையை நிரப்பி வைத்திருந்தார்.அன்று அணில்கள் வர பகவான் வேர்க்கடலையை கொடுக்க முந்திரிப்பருப்பின் ருசி கண்ட அணில்கள் வேர்க்கடலையை சாப்பிட மறுத்து ரமணரின் மேனியில் படுக்கையில் என ஏறி இறங்கி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தன.பகவான் தன் உதவியாளரிடம் உக்கிராயண அறை (ஸ்டோர் ரூம் ) யில் இருக்கும் முந்திரிபருப்பை எடுத்துகொண்டுவரச்சொன்னார்.அவரும் ஒரு கைப்பிடி அளவு முந்திரி பருப்பை எடுத்துகொண்டுவந்தார்.இவ்வளவுதான் இருந்ததா என ரமணர் கேட்க இல்லை இரவு பாயாசத்திற்கு எடுத்துவைத்துக்கொண்டு இவ்வளவுதான்  கொடுத்தார்கள் என்றதும் "ஏன் பாயாசத்துக்கு முந்திரிப்பருப்பு இல்லேன்ன இவாளுக்கு இறங்காதா" என கோபப்பட்டவர் "என்ன பண்றது இந்த குழந்தைகளோ முந்திரிப்பருப்பை தவிர வேறெதையும் தொடமாட்டேன் என்கிறதுகள்" என தழுதழுத்திருக்கிறார் அதற்குள் ஸ்டோர் ரூமிலிருந்த அனைத்து முந்திரிபருப்புகளும் ரமணரின் அறைக்கு வந்து சேர்ந்தது. அணில்களும் பகவான் கையால் முந்திரிப்பருப்புகளை சாப்பிட்டுவிட்டு கிளம்பின.அப்போது மாலை மெட்ராஸ் ல் இருந்து வந்த பக்தர் ஒருவர் இரண்டு வீசை முந்திரிபருப்புகள் வாங்கி வந்திருப்பதாகவும் அதுவும் அணில்களுக்கு கொடுப்பதற்காக மட்டும் வாங்கி வந்திருக்கிறேன் ஆசிரம விருந்துக்கு அல்ல என்றாராம். இதைக்கேட்ட பகவான் உதவியாளரிடம் "பார்த்தாயா குழந்தைகள் தங்களுக்கு வேண்டியதை தானே சம்பாதிச்சு கொண்டுட்டா ,இனி அவா உங்களிடம் பல்லை காட்ட தேவையில்லை ,இந்த முந்திரிபருப்பு அவாளுடைய சம்பாத்தியம் இதை பத்திரமா டப்பாவில் இங்கேயே வை " என்றாராம்.பசி என்றபோது மனிதனாலும்
விலங்கானாலும் ரமணருக்கு ஒன்றுதான்.இன்றும் ஆசிரமத்தில் அங்கிருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவளித்த பின்னரே ஆசிரமவாசிகளுக்கும் பக்தர்களுக்கும் உண்வளிக்கப்படுகிறது.



         பகவானின் சித்து விளையாட்டுகள் நிறைய உண்டு அவற்றை அவர் கூறிக்கொள்ள மாட்டார் .ஒரு சில நேரங்களில்தான் தெரிய வரும்.அவற்றில் ஒன்று ஆசிரம பக்தர் ஒருவரின் மகன் திருவண்ணாமலை கோவில் குளத்தில் தவறி விழுந்து உள்ளே போய்விட்டான் .மயக்கத்தில் இருந்த அவனை ஒரு கை வெளியே எடுத்து போட்டது போல் உணர்ந்தான் மயக்கம் தெளிந்து கேட்டபோது அங்கிருந்தவர் ஒரு பெரியவர்தான் உன்னை வெளியே இழுத்து போட்டார் என்றிருக்கிறார். சிறுவன் தன் தாய் தந்தையிடம் கூட கூறவில்லை.மாலை ரமணாஸ்ரமத்திற்கு சென்றபோது அச்சிறுவனை நோக்கி "சிவகங்கையின் ஆழம் எவ்வளவு இருந்தது" எனக்கூறி சிரித்தாராம்.காலை முதல் மாலை வரை அங்கேயே அமர்ந்திருந்த பகவான்.

         ஒருமுறை ரமணர் மலையிலிருந்து கீழே ஆசிரமத்திற்கு திரும்பிகொண்டிருந்த நேரம் ஒரு குடியானவன் அவரை சந்தித்து தாங்கள் எனக்கு எதாவது மந்திரம் சொல்லிக்கொடுங்கள் நான் தவறாமல் சொல்கிறேன் என்றானாம்.அவனை சில விநாடிகள் உற்றுநோக்கிய பகவான் "சிவாய நம" என்ற மந்திரத்தைச்சொல் என்றாராம்.அவனும் "சிவாய நம" என்றுகூறி விடைபெற்று சென்றானாம்.இதில் அதிசயம் என்னவெனில் கேட்டவர்கள் அனைவருக்கும் ரமணர் மந்திர உபதேசம் கொடுத்ததில்லை. அவரின் தொண்டர்களிலேயே சிலருக்குதான் அருளியிருக்கிறார். அவருக்கு பாகுபாடு ஏது!!

        

          பகவான் ரமணர் எப்போதும் படுத்துறங்கியதில்லை அவர் தரிசனம் கொடுக்கும் ஹாலில்தான் இரவு நேரத்திலும் இருப்பார்..தலையணைகளை அடுக்கி சாய்ந்தது போல் அமர்ந்திருப்பார்..அதே நிலையிலேயே ஒருமணி நேரமோ இரண்டுமணி நேரமோ கண்ணை மூடி அமர்ந்திருப்பார்.மூன்று மணிக்கெல்லாம் குளித்து விட்டு தரிசன ஹாலுக்கோ அல்லது சமையலைறைக்கோ சென்றுவிடுவார்.இன்றும்  நீங்கள் ரமணாஸ்ரமத்திற்கு சென்று கண்மூடி தியானத்தில் அமர்ந்தால் அவருடைய சாந்நித்தியத்தை உணரலாம்.அவரை உணர வழிமுறைகள் தேவையில்லை சரணடைதல் மட்டுமே போதுமானது.




                                       ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய !!

                                       ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய !!
                                   
                                       ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய !!