Tuesday 20 May 2014

த்ரிஷ்யம் - Drishyam ( Visual ) விமர்சனம்

             தென்னிந்தியாவில் கமல் , ரஜினிக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர் மோகன்லால். நிறைய கமர்சியல் படங்களில் நடித்தாலும் நடிப்பு மீட்டர் எதார்த்தை தாண்டாமல் பார்த்துக்கொள்பவர்."த்ரிஷ்யம்" ஹிட் படம் , ரீமேக்கில் கமல் நடிக்கிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு அதிகரித்தது.நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு பார்த்த த்ரிஷ்யம் படத்தின் கதை .

           "தற்போது நிறைய பொது இடங்களில் மறைவாக கேமராவை  வைத்து பெண்களை அசிங்கமாக படமெடுப்பது நடந்துவருகிறது .அதுபோல் ஒரு நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு என்ன நடக்கும் ,பெண் ,அவளது குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும்,அது போன்ற செயல்களை செய்யும் மகன்களின் பெற்றோர்களின் நிலை என்ன?, அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தால் நடவடிக்கை என்னவாக இருக்கும்"என்பதே


             கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் இருக்கும் டிபிகல் மலையாளப்பட ஊரில் கேபிள் டிவி நடத்திக்கொண்டிருக்கிறார் மோகன்லால் (ஜார்ஜ் குட்டி ).அருகில் போலீஸ் ஸ்டேசனும் டீக்கடையும் இருக்கிறது.பத்து சொச்சம் மக்களும் இருகிறார்கள்.அங்கு இருக்கும் லஞ்ச போலீஸ் சகாதேவனை தைரியமாக கிண்டலடிக்கிறார்.சினிமா பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் மோகன்லால் நடைமுறை வாழ்வில் வரும் சிக்கல்களுக்கு கூட சினிமா காட்சிகளை யோசித்து பார்த்து தீர்வு சொல்கிறார் (உதாரணத்திற்கு "மறைத்து வைக்கப்பட்ட ஒருவரது மகனை கண்டுபிடிக்க ஹேபியஸ் கார்பஸ் மனு போட சொல்வது" மாதிரி தீர்வுகளை கூட )
              கேபிளில் போடும் நல்ல சினிமா பார்க்கும் ஆவலில் சில நாட்கள்  கேபிள் டிவி ஆபீசிலேயே தங்கிக்கொள்கிறார் மோகன்லால் அவரது குடும்பம் அங்கிருந்து சற்று தள்ளி இன்னொரு மலையாள டிபிகல் பச்சை பசுமை கிராமத்தில் இருக்கிறது.செல்போன் வைத்துக்கொள்ளாத மோகன்லாலை  (டவர் பிரச்சனையாம் ) மழை பெய்யும்போது அலுவலக லேண்ட்லைன் அவுட் ஆப் ஆர்டர் ஆனால் தொடர்புகொள்ள முடியாது.5 ஏக்கர் தோட்டத்துடன் உள்ள தன் வீட்டில் மோகன்லாலுக்கு வயதுக்கு வந்த பள்ளிக்கு செல்லும் பெரிய மகளும் (அஞ்சு),இன்னொரு சிறிய மகளும் இருக்கிறார்கள் மனைவியாக மீனா (ராணி ). மோகன்லால் ஒய்வு நேரத்தில் விவசாயமும் செய்கிறார்.தாய் தந்தையின்றி வளர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட மோகன்லாலுக்கு மீனாவின் தந்தை மற்றும் குடும்பத்தார் ஆதரவாக இருக்கிறார்கள் .

              கேபிள் டிவி அலுவலகத்துக்கு எதிரில் புதிய போலீஸ் ஸ்டேசன் கட்ட ஆரம்பிக்கிறார்கள்.அப்போது மோகன்லாலின் நண்பரான ஸ்டேசன் கட்டிட கான்ட்ராக்டரை லஞ்ச போலீஸ் சகாதேவன் மிரட்ட மோகன்லால் எதிர்த்து குரல்கொடுக்க போலீசுக்கும் லாலுக்கும்  முட்டல் ஆரம்பிக்கிறது . லாலேட்டனின் பெரிய மகள் அனைத்து பள்ளிகளும் பங்கேற்கும் ஒரு விழாவில் பங்கேற்க செல்கிறாள்.விழா முடிந்து திரும்பிவரும் அடுத்த நாளே ஒருவன் பெண்களை வளைத்து வளைத்து வீடியோ ,போட்டோ எடுத்ததை மீனா ,லாலேட்டனிடம் சொல்கிறாள் அவன் ஒரு போலீஸ்'ஐ ஜியின் மகன் (வருண் ) என்றும் சொல்கிறாள் ,மீனா மகளை கண்டிக்கிறார் .
             அன்று மோகன்லாலின் இரண்டு மகள்களும் கடைக்கு  சென்று திரும்ப வரும்போது பெண்களை வீடியோ எடுத்த வருணை சந்திக்கிறாள் அஞ்சு .அவன் மோகன்லாலின் பெரிய மகள் குளிக்கும் வீடியோவை அவளுக்கு தெரியாமல் எடுத்து வைத்து அதை அவன் நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டுகிறான்.அதை நெட்டில் போட்டு பரப்பாமல் இருக்க ஒரு இரவு அவளுடன்  கழிக்கவேண்டும் என்கிறான்.,இரவு வருகிறேன் என சொல்லி செல்கிறான்.
             இரவு அடைமழையில் அந்த பெண்ணை அடைய வருண் வருகிறான். அவனிடம் பேசி பிரச்சனையை தீர்க்க முயல்கிறார் மீனா. அவன் மீனாவையே கேட்க, கோபமுற்ற மூத்த மகள் அவன் தலையில் இரும்பு ராடால் அடிக்க செத்துப்போகிறான் வருண், அவள் குளிக்கும் வீடியோ இருக்கும் அவனுடைய செல்போனையும் அடித்து உடைத்து விடுகிறாள் அஞ்சு .இருவரும் சேர்ந்து அவனை தோட்டத்திலேயே புதைத்து விடுகின்றனர் .காலையில் வீட்டுக்கு வரும் மோகன்லால் நடந்த சம்பவம் தெரிந்து குழப்பத்துடன் நிற்க "இடைவேளை"
            மோகன்லால் அவர்களை ஆறுதல் படுத்திவிட்டு ,தன் சினிமா மூளையை பயன்படுத்தி யோசிக்கிறார்.வருணின் சிம்மை எடுத்துக் கொள்கிறார்.வருணின் சிம்கார்டுக்கு புதிய போன் வாங்கி அதை ஆன் செய்யும் போது வருணின் தாயான கீதா பிரபாகர்.ஐ.ஜி வருணின்  செல்போனுக்கு call  செய்கிறார் . மோகன்லால் call-ஐ அட்டெண்ட் செய்தாரா, சினிமா மூளையை பயன்படுத்தி தப்பித்தாரா ,தடயங்களை அழித்தாரா என்பதும்  திரைக்கதை ட்விஸ்ட்கள் ...


                  மோகன்லால் விரோத ஏட்டு சகாதேவன் மோகன்லாலை அந்த கேஸில் சிக்கவைக்க பார்க்கிறார் .வருணின் அம்மா ஐ ஜி விசாரணையை ஆரம்பிக்க சூடுபிடிக்கிறது ஆட்டம் . ஐ.ஜி யாக வரும் "ஆஷா சரத்" கலக்கியிருக்கிறார், கிட்டத்தட்ட மோகன்லாலுக்கு இணையான கேரக்டர் என்றும் சொல்லலாம் .கோபமும்,வன்மமும் , மகனை காணாத ஏக்கமுமாக விசாரணை செய்யும் வித்தியாசமான தாய் புதுசு (தமிழில் குயிலி,ரம்யா கிருஷ்ணன்,ராதிகா நடிக்கலாம்) ...லால் வீட்டுக்கு போலீஸ் ஜீப் வரும் போது நம்மையும்  பதைபதைக்க வைக்கிறார் இயக்குனர் .
                 மோகன்லால் சிக்கினாரா ?!! லால் குடும்பம் என்னவானது , மோகன்லாலின் குழந்தைகளின் எதிர்காலம் என்னவானது என்பதே மீதி படத்தின் சுவாரசியம் மிகுந்த  திரைக்கதையமைப்பு.மோகன்லால் & குடும்பம் சிக்கிக்கொள்ளக்கூடாது என நினைக்கவைக்கும் , இறந்த வருணின் பெற்றோர் மீதும் பரிதாபத்தை வரவைக்கும் திரைக்கதை மூலம் ஜீத்து ஜோசப் ஜெயித்துவிட்டார்.
                படம் முழுவதுமே கூட 100 பேருக்கு மேல் வரவே இல்லை ,டிபிகல் மலையாளப்படம்.ஆகா ஓஹோ படமும் இல்லை ,கொஞ்சம் வித்தியாசமான படம் அவ்வளவே .ஆனால்  மோகன்லால் அசாத்தியமான உடல் மொழியின் மூலம் மொத்த படத்தையும் தூக்கிச்செல்கிறார் , மொத்ததுல

                                      "கலக்கீட்டீங்க மோகன்லால் சார் "

          ஆனால் இதன் ரீமேக்கில் கமல் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதை அப்படியே கமலை வைத்து எடுக்கமுடியாது.அப்படி எடுத்தால் நன்றாக இருக்குமா?! மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என பல கேள்விகள் (என்னோட சாய்ஸ் சரத்,விஜயகாந்த்,சத்யராஜ் ) கமல்  "மகாநதி"யில் வந்த கமலாக மீண்டும் வருவார் என எதிர்பார்க்கிறேன்.

(மலையாளப்படத்தை இங்க்லீஷ் சப் டைட்டிலுடன் பார்த்ததால் விமர்சனத்தில் சில தவறுகள்வந்திருக்கும்.அதை குறிப்பிடவும் சரி செய்து கொள்கிறேன்  )

No comments:

Post a Comment