Friday 12 June 2015

பகவான் ரமணர் - சில நிகழ்வுகள்


              காஞ்சி பெரியவரிடம் சமய நூல்களை கற்று தேர்ந்த ஒருவர் "நான் ஞானமடைய வேண்டும் யாரை என் குருவாக ஏற்பது" எனக்கேட்டபோது
" இப்போது உங்களுக்கு ஞானமளிக்கும் அளவுக்கு சித்தியுடையவர் மூவர் உள்ளனர் ஒருவர் காட்டில் இருக்கிறார் அவர் மற்றவர்கள் கண்ணுக்கு தெரியமாட்டார் மற்றொருவர் காசியில் இருக்கிறார் அவர் யாரையும் பார்ப்பதில்லை இனி உங்களுக்கு ஞான உபதேசமளிக்கும் அளவுக்கு தகுதியுடன் இருப்பவர் ரமணர் மட்டுமே அவரை  போய் கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்" என்றாராம்.அப்படி மக்களுக்கு ஞானத்தை ,நல்லதை எடுத்துரைக்க நம் நம்மோடு இருந்த நம் கண்ணுக்கு தெரிந்த சித்தரே
 "பகவான் ரமணர்' ஆவார்.


         ரமணர் அவர்களின் கடைசி பயணம் தன் பதினாறாவது வயதில் வேங்கடராமன் என்ற பெயருடன் மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்ததே ஆகும்.பின் அவர் சமாதி ஆகும் வரை திருவண்ணாமலையை விட்டு அகலவே இல்லை.."திருக்கையிலாயம் சிவபெருமான் வாசம் செய்யும் இடம் திருவண்ணாமலையே சிவபெருமான்"தான் என்பார்.

         சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வந்துவிட்ட பகவான் ரமணர் பற்றி திருவண்ணாலை வந்து சென்று ஊர்க்காரர் ஒருவர் ரமணரை தேடிக்கொண்டிருந்த ரமணரின் அன்னை அழகம்மையிடம் ரமணர் பற்றி கூற அவர் திருவண்ணாமலைக்கு வந்து ரமணரை வீட்டுக்கு திரும்ப வந்துவிடுமாறு வற்புறுத்தினார்.அப்போது அங்கிருந்த ஒரு பென்சிலை எடுத்து ஒரு தாளில் அவர் எழுதிக்கொடுத்ததுதான்

                                       அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்
                                       ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்
                                       என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது
                                       நடப்பது என் தடை செய்யினும் நில்லாது
                                       இதுவே திண்ணம் ஆகலின்
                                       மௌனமாய் இருக்கை நன்று  !!


 
                             -என எழுதிக்கொடுத்தார் பின்னர்தான் இனியும் இவருடன் போராடுவது வீண் என அழகம்மை மீண்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
பிறகு கொஞ்சநாளில் திரும்பிவந்து துறவறம் மேற்கொண்டு பகவானுடனேயே தங்கிவிட்டார். (மேற்கண்ட ரமணரின் பதிலைத்தான் "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது" என முத்து பட பஞ்ச் டயாலாக்காக ரஜினி பேசி கைத்தட்டல் வாங்கினார்.ஏன் இமயமலைக்கு செல்கிறீர்கள் என ரஜினியிடம் கேட்டபோது இமயமலையை விட திருவண்ணாமலை பவர்ஃபுல் ஆனா அங்க யாருக்கும் என்ன தெரியாது இங்க எல்லாருக்கும் என்ன தெரியுது அதனால்தான் இமயமலைக்கு போகிறேன் என ரஜினி கூறினார்.)

       ஆரம்பத்தில் ஆசிரமம் ஏற்படாதபோது திருவண்ணாமலை தெருக்களில் கிரிவல பாதைகளில் நடந்து சென்று அங்கு அமைந்துள்ள மடங்கள், ஆசிரமங்களில் பிச்சை எடுத்தே உண்பார்.சிலர் அவர் சாப்பிட்ட இலையில் "பகவான் பிரசாதம்" என்று சொல்லிக்கொண்டு சாப்பிடுவதற்காக போட்டி போட்டனர். இதை அறிந்த ரமணர் பின்னாட்களில் கைகளிலேயே பிச்சை எடுத்து உண்டுவிட்டு சாப்பிட்ட கையை தன் உடம்பில் துடைத்துக்கொள்வார் .யாரும் பகவான் பிரசாதம் என சண்டை போட்டுக்கொள்ளமுடியாதபடி செய்துவிட்டார்.

        பகவான் மேலே குகையில் ,ஸ்கந்தாஸ்ரமத்தில் தங்கியிருந்த காலத்திலும் சரி கீழே ரமணாச்சரமத்தில் தங்கியிருந்த காலத்திலும் சரி அவரை தேடி வரும் அடியார்கள் கொண்டுவரும் உணவை அனைவருக்கும் சரிசமமாக பங்கிட்டு கொடுத்த பிறகே  அவர்  சாப்பிடுவார் அது சாப்பாடாக இருந்தாலும் சரி ஒரு பிடி கடலையாக இருந்தாலும் சரி.சில சமயம் ஆசிரமதிற்கு யாரும் உணவை யாசகம் தராவிடில் அன்றைய பொழுதை பட்டினியாக அனைவரும் கழிப்பர்.ஆனால் கடைசிவரை ஆசிரமவாசிகள்  அனைவருக்கும் உணவை பறிமாறிவிட்டு கடைசியாகத்தான் தனக்கு உணவை பறிமாறவேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்து வந்தார்.

        ஒருமுறை ரமண பக்தரும் ஆசிரமவாசியுமான காலேஜ் லெக்சரர் ஒருவர் ஆசிரமத்தை நிர்வகித்துவந்த ரமணரின் தம்பியிடம் ஏற்பட்ட மனக்கசப்பினால் இனிமேல் ஆசிரமத்தில் சாப்பிடக்கூடாது என முடிவு செய்து ரமணரிடம் ஸ்பெஷல் கிளாஸ் என் பொய் சொல்லி விடைபெற்று வெளியே சென்று உணவருந்த நினைத்தார்.அவர் போனபோது ரமணர் சமைத்து கொண்டி ருந்தார் "நான் ஸ்பெசல் கிளாஸ் எடுக்கபோகிறேன்" என ரமணரிடம் சொன்னதும் "என்ன ஓய், இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இன்னைக்கு ஏது காலேஜ்" என்றவர் இட்லியும் ஸ்பெஷல் சாம்பாரும் வெச்சிருக்கேன் சாப்பிட்டுவிட்டு எப்படியிருக்குன்னு சொல்லு என்று தட்டில் போட்டு கொடுத்தாராம் கண்ணீர் மல்க உணவை உண்டார் பக்தர் இவ்வாறு தன்னை சார்ந்த ஒவ்வொரு உயிரையும் மிகவும் வாஞ்சையுடன் கவனிப்பவரே ரமணர்.

        ரமணரை பற்றி கேள்விப்பட்ட ஒரு ஐரோப்பிய தம்பதிகளுக்கு அவரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் வெகுநாட்களாக இருந்தது.அதற்காக அவர்கள் நீண்டநாட்கள் பணம் சேர்த்து திருவண்ணாமலை வந்தடைந்தனர். ரமணர் முன் அமர்ந்த அவர்கள் தங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டதாக கூறினார்கள்.அப்போது ரமணர் "தாங்கள் எங்கிருந்து என்னை நினைத்தாலும் என் ஆசி உங்களுக்கு கிட்டும்" என்றார் இது வழக்கமான சமாதான பேச்சுதான் என அந்த தம்பதிகள் மனதிற்குள்  நினைத்தனர்.அப்போது ரமணர் "தாங்கள் இருவரும் உங்கள் நாட்டில் கடற்கரை ஒரம் பளிங்கு கல்களின் மேல் அமைந்துள்ள  பெஞ்சுகளில் அமர்ந்தவாறு என்னை பற்றி நினைப்பீர்கள்தானே, உங்கள் நாட்டு கடற்கரை அற்புதமாக இருக்கும்" என்றார் அவர்கள் கண் கலங்கிவிட்டார்கள் பின்னே 16 வயதுக்கு பின் திருவண்ணாமலையை விட்டே வராத யோகி உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் தங்களின் ஊரைப்பற்றி சொல்கிறார் என்றால் அதிசயம் அற்புதம் அல்லவா அது அவர் அவர்களின் மேல் வைத்திருக்கும் கருணையன்றி வேறெதுவாக இருக்க முடியும்

                                                     விலங்குகளின் நண்பர்


        ஒரு கோடைக்காலத்தில் ரமணர் தம் அடியார்களுடன் கிரிவலம் சென்று கொண்டிருக்கையில் அனைவரும் மிகுந்த தாகம் அடைந்து நிழலில் நின்றனர்.
தண்ணீரும் கைவசம் இல்லை.அப்போது அந்த மரத்திற்கு வந்த குரங்கு ஒன்று அந்த நாவல்பழ மரத்தை நன்றாக குலுக்கி நிறைய நாவல் பழங்களை கீழே விழச்செய்தது அனைவரும் அதைஎடுத்து உண்டனர் தாகமும் தீர்ந்து அவர்கள் மேற்கொண்டு கிரிவலம் நடக்கும் சக்தியையும் கொடுத்தது.இத்தனைக்கும் அந்த குரங்கு பழங்களை உலுக்கி கீழே விழச்செய்துவிட்டு ஒரு பழத்தை கூட உண்ணவில்லை.ரமணாச்சரமத்திற்கு வரும் பக்தர்கள் கொண்டுவரும் உணவை சில நேரங்கள் குரங்குகள் பிடுங்கி உண்ணும் கோபம் கொண்ட சிலர் அதை அடிக்கபோக நாம்தான் குரங்கின் வசிப்பிடமான காட்டில் இருக்கிறோம் எனவே நாம் அதை துன்புறுத்தகூடாது என்றார்.நிறைய குரங்குகள் அவரிடம் தினமும் வந்து உணவு பெற்று செல்லும்.சிலசமயம் குரங்குகளுக்குள் ஏற்படும் பிரச்சனைக்களையும் அவர் தீர்த்து வைத்திருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் அவர் குறிப்பிட்ட குரங்கை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு.

        ஒருமுறை அவர் மலைக்கு சென்றபோது அவரது இடதுகால் தெரியாமல் அங்கிருந்த குளவி கூட்டின் மீது பட்டுவிட குளவிக்கூட்டம் கோபம் கொண்டு வெளியே வந்து அவரை கொட்டியது.கூட்டை இடித்தது இந்த கால்தானே அதற்கான தண்டனையை இது அனுபவிக்கட்டும் என்று  இடதுகாலை குளவிகளுக்கு காட்டியபடி அசையாமல் குளவிகள் கொட்டி முடிக்கும்வரை அதே இடத்தில் நின்றாராம்.


        பகவான் அமர்ந்திருக்கும் அறைக்குள் அணில்கள் அநாயசமாக வந்து விளையாடும் அப்போது அவர் ஜன்னல் ஒரம் டப்பாவில் வைத்திருக்கும் முந்திரிப்பருப்புகளை அவற்றிற்கு சாப்பிட கொடுப்பார்.அன்று முந்திரிபருப்பு தீர்ந்துவிட டப்பாவில் வேர்க்கடலையை நிரப்பி வைத்திருந்தார்.அன்று அணில்கள் வர பகவான் வேர்க்கடலையை கொடுக்க முந்திரிப்பருப்பின் ருசி கண்ட அணில்கள் வேர்க்கடலையை சாப்பிட மறுத்து ரமணரின் மேனியில் படுக்கையில் என ஏறி இறங்கி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தன.பகவான் தன் உதவியாளரிடம் உக்கிராயண அறை (ஸ்டோர் ரூம் ) யில் இருக்கும் முந்திரிபருப்பை எடுத்துகொண்டுவரச்சொன்னார்.அவரும் ஒரு கைப்பிடி அளவு முந்திரி பருப்பை எடுத்துகொண்டுவந்தார்.இவ்வளவுதான் இருந்ததா என ரமணர் கேட்க இல்லை இரவு பாயாசத்திற்கு எடுத்துவைத்துக்கொண்டு இவ்வளவுதான்  கொடுத்தார்கள் என்றதும் "ஏன் பாயாசத்துக்கு முந்திரிப்பருப்பு இல்லேன்ன இவாளுக்கு இறங்காதா" என கோபப்பட்டவர் "என்ன பண்றது இந்த குழந்தைகளோ முந்திரிப்பருப்பை தவிர வேறெதையும் தொடமாட்டேன் என்கிறதுகள்" என தழுதழுத்திருக்கிறார் அதற்குள் ஸ்டோர் ரூமிலிருந்த அனைத்து முந்திரிபருப்புகளும் ரமணரின் அறைக்கு வந்து சேர்ந்தது. அணில்களும் பகவான் கையால் முந்திரிப்பருப்புகளை சாப்பிட்டுவிட்டு கிளம்பின.அப்போது மாலை மெட்ராஸ் ல் இருந்து வந்த பக்தர் ஒருவர் இரண்டு வீசை முந்திரிபருப்புகள் வாங்கி வந்திருப்பதாகவும் அதுவும் அணில்களுக்கு கொடுப்பதற்காக மட்டும் வாங்கி வந்திருக்கிறேன் ஆசிரம விருந்துக்கு அல்ல என்றாராம். இதைக்கேட்ட பகவான் உதவியாளரிடம் "பார்த்தாயா குழந்தைகள் தங்களுக்கு வேண்டியதை தானே சம்பாதிச்சு கொண்டுட்டா ,இனி அவா உங்களிடம் பல்லை காட்ட தேவையில்லை ,இந்த முந்திரிபருப்பு அவாளுடைய சம்பாத்தியம் இதை பத்திரமா டப்பாவில் இங்கேயே வை " என்றாராம்.பசி என்றபோது மனிதனாலும்
விலங்கானாலும் ரமணருக்கு ஒன்றுதான்.இன்றும் ஆசிரமத்தில் அங்கிருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவளித்த பின்னரே ஆசிரமவாசிகளுக்கும் பக்தர்களுக்கும் உண்வளிக்கப்படுகிறது.



         பகவானின் சித்து விளையாட்டுகள் நிறைய உண்டு அவற்றை அவர் கூறிக்கொள்ள மாட்டார் .ஒரு சில நேரங்களில்தான் தெரிய வரும்.அவற்றில் ஒன்று ஆசிரம பக்தர் ஒருவரின் மகன் திருவண்ணாமலை கோவில் குளத்தில் தவறி விழுந்து உள்ளே போய்விட்டான் .மயக்கத்தில் இருந்த அவனை ஒரு கை வெளியே எடுத்து போட்டது போல் உணர்ந்தான் மயக்கம் தெளிந்து கேட்டபோது அங்கிருந்தவர் ஒரு பெரியவர்தான் உன்னை வெளியே இழுத்து போட்டார் என்றிருக்கிறார். சிறுவன் தன் தாய் தந்தையிடம் கூட கூறவில்லை.மாலை ரமணாஸ்ரமத்திற்கு சென்றபோது அச்சிறுவனை நோக்கி "சிவகங்கையின் ஆழம் எவ்வளவு இருந்தது" எனக்கூறி சிரித்தாராம்.காலை முதல் மாலை வரை அங்கேயே அமர்ந்திருந்த பகவான்.

         ஒருமுறை ரமணர் மலையிலிருந்து கீழே ஆசிரமத்திற்கு திரும்பிகொண்டிருந்த நேரம் ஒரு குடியானவன் அவரை சந்தித்து தாங்கள் எனக்கு எதாவது மந்திரம் சொல்லிக்கொடுங்கள் நான் தவறாமல் சொல்கிறேன் என்றானாம்.அவனை சில விநாடிகள் உற்றுநோக்கிய பகவான் "சிவாய நம" என்ற மந்திரத்தைச்சொல் என்றாராம்.அவனும் "சிவாய நம" என்றுகூறி விடைபெற்று சென்றானாம்.இதில் அதிசயம் என்னவெனில் கேட்டவர்கள் அனைவருக்கும் ரமணர் மந்திர உபதேசம் கொடுத்ததில்லை. அவரின் தொண்டர்களிலேயே சிலருக்குதான் அருளியிருக்கிறார். அவருக்கு பாகுபாடு ஏது!!

        

          பகவான் ரமணர் எப்போதும் படுத்துறங்கியதில்லை அவர் தரிசனம் கொடுக்கும் ஹாலில்தான் இரவு நேரத்திலும் இருப்பார்..தலையணைகளை அடுக்கி சாய்ந்தது போல் அமர்ந்திருப்பார்..அதே நிலையிலேயே ஒருமணி நேரமோ இரண்டுமணி நேரமோ கண்ணை மூடி அமர்ந்திருப்பார்.மூன்று மணிக்கெல்லாம் குளித்து விட்டு தரிசன ஹாலுக்கோ அல்லது சமையலைறைக்கோ சென்றுவிடுவார்.இன்றும்  நீங்கள் ரமணாஸ்ரமத்திற்கு சென்று கண்மூடி தியானத்தில் அமர்ந்தால் அவருடைய சாந்நித்தியத்தை உணரலாம்.அவரை உணர வழிமுறைகள் தேவையில்லை சரணடைதல் மட்டுமே போதுமானது.




                                       ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய !!

                                       ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய !!
                                   
                                       ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய !!

      

6 comments:

  1. சிறப்புகளை அறிந்தேன்... நன்றிகள்...

    ReplyDelete
  2. நன்றி சார்!!! எப்படி சார் நான் பதிவு போட்டவுடன் வந்து கமெண்ட் போடுகிறீர்கள் தானாக முன்வந்து முதல் கருத்துகள் பதியும் தங்களுக்கு என் நன்றிகள் :)))))

    ReplyDelete
  3. எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் திகட்டாது. மிக நல்ல முறையில் அலுப்பு தட்டாமல் எழுத்து வடிவத்தில் கொடுத்துள்ளீர்கள். திருவண்ணாமலை வந்து சேர்ந்ததிலிருந்து கடைசி காலம் வரை வெளியூர் எங்கும் சென்றதில்ல. ஆனாலும் உலகெங்கும் பக்தர்கள். என்ன ஒரு சிறப்பு !
    உமக்கு என்றென்றும் ஸ்ரீ ரமணரின் ஆசி உண்டு. இதை படிப்பவர்களுக்கும் அந்த ஆசி கிட்டும் உமக்கும் புண்ணியம் .
    வாழ்த்துகள் பாராட்டுகள் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் !!! நிறைய எழுத நினைத்தேன் ,பிரசங்கம் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் பொதுவான சில நிகழ்வுகளை மட்டுமே எழுதினேன் ..தங்களின் மேன்மையான கருத்துக்கு நன்றிகள் :))

      Delete
  4. நன்றி ஐயா.

    ReplyDelete