வீட்ல அப்பா MGR ரசிகர் அம்மா
சிவாஜி ரசிகை அப்பா "ஆயிரத்தில் ஒருவன் ,வேட்டைக்காரன் ,நாடோடி மன்னன் ,அரச
கட்டளை" டைப் MGR
படங்களுக்குத்தான் கூட்டிட்டு போவார்..போயிட்டு வந்தவுடன் அந்த உற்சாகம் நமக்கும்
தொத்திக்கும் வீட்ல நானும் தம்பியும் குச்சியைவெச்சுகிட்டு கத்தி
சண்டை போடுற அளவுக்கு போய்டும்.. அம்மா பாசமலர்,பாகப்பிரிவினை,பாலும்
பழமும்,படித்தால் மட்டும் போதுமா, நவராத்திரி,திருவிளையாடல்,பார்த்தால்
பசி தீரும் டைப் சிவாஜி படங்களுக்குத்தான் கூட்டிட்டு போவாங்க அங்க அம்மா படம்
பார்த்துட்டு ஃபீல் பண்ணி அழுகுறதும் அதப்பார்த்து நான் அழுகுறதும்
நிச்சயம் நடந்துடும் ..போயிட்டு வந்தும் முகமே வாடிப்போய் சோர்வா இருக்கும். ஆக
மொத்ததில் எம் ஜி ஆர் படங்கள்ன்னா சூப்பர் ,சிவாஜிபடங்கள்ன்னா
போர்..கொஞ்சம் வளர்ந்ததும் அம்மா படத்துக்கு கூப்டா வரமாட்டேன்னு சொல்லிட்டு நாலணா
லஞ்சமா வாங்கிட்டு பசங்களோட விளையாட ஆரம்பிசிட்டேன். வளர வளர ரஜினி ரசிகனாக
இருந்து கமல் ரசிகனா மாறி கமல் படங்கள் பார்க்க ஆரம்பிக்கிறப்போதான் கமல்
வித்தியாசமா நடிக்கிறார்ன்னு புரிஞ்சு அதை சற்று உள்நோக்கி பார்க்கும்போதுதான்
கமல் மட்டுமல்ல தமிழ்சினிமாவில் நன்றாக நடிக்கும், நடிக்க முயற்சிக்கும்
எல்லோருக்கும் ரெபரன்ஸாக, குருவாக ஏகலைவனாக இருப்பது சிவாஜி எனும் சிங்கம்தான்
என்று புரிந்தது.
மேற்குறிப்பிட்ட சிவாஜி படங்களை மீண்டும்
மீண்டும் பார்க்கும்போதுதான் அதெல்லாம் கிளாசிக் என்பது புரிகிறது...சிவாஜி
என்பவர்தான் தமிழ் சினிமாவின் பிதாமகன் என்ற உண்மை அழுத்தம் திருத்தமாக
உறைக்கிறது.எம் ஜி ஆர் குறித்து அவர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன்"
புத்தகம் உட்பட பல புத்தகங்கள் படித்திருக்கிறேன்.. எம் ஜி ஆர்
குறித்து எழுத சொன்னால் பக்கம் தீரத்தீர எழுதலாம் என்றிருந்தேன் அவர் குறித்தோ
அல்லது ரஜினி குறித்தோ பதிவு எழுதலாம் என்றிருந்த வேளையில் சமீபத்தில் சிவகுமார்
அவர்கள் ஈரோடு புத்த்க விழாவில் பேசிய "தமிழ் சினிமாவில் தமிழ்" என்ற
டிவிடி யை பார்த்தேன் அவரின் ஒன்றரை மணி நேர பேச்சில் சிவாஜி குறித்த சிலாகிப்பும்
அவர் வசனங்களை பேசிக்காட்டிய நேரமுமே அதிகம்.இது அவர் அறியாமல் பேசியதல்ல தமிழ்
சினிமா குறித்து பேச ஆரம்பித்தால் அதில் சிவாஜியை தவிர்த்து பேச இயலாது என்பதே
உண்மை.இதெல்லாம் குறித்து அசை போட்டபடி பைக்கில் சென்று கொண்டிருந்த போதுதான்
திரு.சிவாஜி அவர்கள் குறித்து ஒரு பதிவு எழுதலாமே என்ற எண்ணம் எழுந்தது.அவர்
குறித்து எந்தவொரு முழு புத்தகத்தையும் இதுவரை படித்ததில்லை..சில வார இதழ்கள்,
பத்திரிக்கைகளில் படித்தது, நடிகர்களின் பேட்டிகளில் இருந்து பெற்ற தகவல்களுமே
இந்த பதிவு...இதில் ஏதேனும் தகவல் பிழைகள் இருந்தால் சிவாஜி ரசிகர்கள்
மன்னித்தருளுக...
சிலர் ஒதுக்கும் விஷயம் மற்றொருவரின்
வாழ்க்கையையே மாற்றிவிடும் அது சிவாஜிக்கு முழுதும் பொருந்தும்.அண்ணா கட்சியில்
இருந்தபோதே நாடகத்தின் மூலம்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கிய எழுத்தாளராக திகழ்ந்தார்.அப்படி அவர் எழுதிய
புரட்சி நாடகம்தான் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" அதில் நடிக்க முத்லில்
ஒப்பந்தமானவர் எம் ஜி ஆர் அவர்கள் ,அப்போது அவர் காங்கிரஸ் இயக்கத்தின் மீது பற்று
கொண்டிருந்த காரணத்தாலும் ஆத்திகராக இருந்ததாலும் அந்த நாடகத்தின் சில
வசனங்களில் மாறுதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் நாடக நிர்வாகியிடம்
கேட்டுக்கொள்ள அவர் மிகுந்த தயக்கத்துடன் அண்ணாவிடம் அதை சொல்ல அவரும்
பெருந்தன்மையாக சில வசனங்களை மாற்றிகொள்ள அனுமதி கொடுத்துவிட்டார் இதற்கிடையில்
அண்ணா பற்றி அறிந்திராத எம் ஜி ஆரிடம் அவரின் அண்ணன் சக்கரபாணி அண்ணா யார் என்பதை
விளக்கி சொன்னவுடன் எம் ஜி ஆர் இவ்வளவு பெரிய திறமைசாலியின் எழுத்தை மாற்ற
சொல்லிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் நாடகத்திலிருந்து விலகிவிட்டார்.பிறகு
அந்த நாடகத்தில் ஒப்பந்தமான்வர்தான் விழுப்புரம் சின்னையா கணேசன்..அந்த
நாடகத்திற்கு தலைமை தாங்கியவர் பெரியார் ...நாடகத்தில் வி சி
கணேசனின் நடிப்பை பார்த்து வியந்து இனி இவரை "சிவாஜி கணேசன்" என்று
அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெற்றிகரமாக நடந்த
அந்த நாடகத்தை பார்த்துதான் சிவாஜியின் முதல் பட தயாரிப்பாளரான பெருமாள் முதலியார்
அவரை ஒப்பந்தம் செய்தார்.
அப்போது ஏ வி எம் தான் மிகப்பெரிய
தயாரிப்பு நிறுவனம் "பராசக்தி" ஏ வி எம் - பெருமாள் முதலியாரின்
கூட்டுத்தயாரிப்பு.வசனத்திற்கு அப்போது மிகவும் புகழ் பெற்றிருந்த
கருணாநிதியை ஒப்பந்தம் செய்தனர். ஒடுங்கிய கன்னமும் ஒல்லியான தேகமுமாயிருந்த
சிவாஜியை மெய்யப்ப செட்டியாருக்கு பிடிக்கவில்லை.சிவாஜியை மாற்ற சொல்லி
பெருமாள் முதலியாரை வற்புறுத்திக்கொண்டேயிருந்தார் அவரின் சிபாரிசாலும் சிவாஜியின்
நண்பரும் அந்த படத்தின் வசனகர்த்தாவுமான கருணாநிதியின் சிபாரிசாலும் சிவாஜி நீட்டிக்கப்பட்டார் .இதற்கிடையில்
சிவாஜி நினைத்ததை வாங்கி சாப்பிட சொல்லி உத்தரவு போட்ட பெருமாள் அதற்காக நிறைய
தொகையை தினமும் சிவாஜிக்கு கொடுப்பாராம். அப்படி அவர் கொஞ்சம் சதைபிடிப்பாக ஆனதும்
எடுத்ததுதான் "புகழ்பெற்ற கோர்ட் சீன் " அந்த சீனின் பிரிவியு பார்த்த
செட்டியார் "இந்த நடிகனைத்தான் நான் எதிர்பார்த்தேன்" என்று குஷியாகி
படத்தை எடுத்தவரை ரீஷூட் செய்ய சொல்லி விட்டாராம், நாம் பார்க்கும் பராசக்தி படம்
இரண்டாம் முறை எடுக்கப்பட்டது. எந்த நிறுவனத்தால்
ஒதுக்கபட நினைத்தாரோ அதே நிறுவனம் அவர் முதன்முதலில் "சக்சஸ்" என்று
வசனம் பேசி நடித்த இடத்தில் அவருக்கு சிலை வைத்திருக்கிறது.. அச்சிலை சிவாஜியை
அறிமுகப்படுத்திய நிறுவனம் பெருமைபட்டு கொள்ள சான்றாக நிற்கிறது. சிவாஜிக்கு அதற்குபிறகு எல்லாம் ஏற்றம்தான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ஒவ்வொரு வருடமும் தன்
பிறந்தநாளுக்கோ அ பொங்கலுக்கோ தவறாமல் பெருமாள் முதலியாரின் வீட்டுக்கு சென்று ஆசிர்வாதம் வாங்க
சென்றுவிடுவார். பிற்காலத்தில் அவருக்கு பொருளாதார உதவியும் செய்து தன் நன்றியை காட்டினார்.
இப்போது கூட தாடியை வைத்து நடித்துவிட்டு
வெரைட்டியாக நடிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால்
"மனோகரா"வின்
அபரிதமான வெற்றிக்கு
பிறகு எம் ஜி ஆர் ஹீரோவாகவும் சிவாஜி வில்லனாகவும் நடித்தபடம்தான்
"கூண்டுக்கிளி" சிவாஜி நடிகனுக்கு நடிப்பது மட்டுமே வேலை
என்பதில் உறுதியாக
இருந்தார்.எம் ஜி ஆர் - சிவாஜி படங்களின் முந்தைய வெற்றியே அந்த படத்துக்கு
பாதகமாக அமைய இரண்டு சூப்பர் ஸ்டார்கள் சேர்ந்து நடித்த
ஒரே படம் என்ற பெருமை
மட்டும் அந்த படத்திற்கு கிடைத்தது.அதற்கு பிறகும் அந்தநாள் ,உத்தமபுத்திரன்
போன்ற படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்தார். உத்தமபுத்திரன் படத்தில் "யாரடி
நீ மோகினி" பாடலில் ஸ்டைலாக நடந்திருப்பார்.அந்த படத்தின் வில்லன்
கேரக்டர்தான் தன்னுடைய ஸ்டைல்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்று
பிலிம் இன்ஸ்டியூட்டில் சிவாஜி படங்களையே அதிகம் பார்த்து பாடம் படித்த ரஜினி
சொன்னார்.இப்படி சிவாஜி தொடாத வெரைட்டியே கிடையாது.
மல்டிஸ்டாரர் என்பது தற்போது பெரிய
நடிகர்களின் படத்தில் அமைவது பெரிய விஷயம் ஏன் வில்லன்களுக்கு நடிக்க அதிக ஸ்கோப்
இருந்தால் கூட அதை
குறைக்க சொல்கிறார்கள்
தற்கால ஹீரோக்கள் .ஆனால் சிவாஜியுடன் சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்லை எனலாம்
அக்கால மூன்று சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஜெமினி
கணேசனில் தொடங்கி முத்துராமன் எஸ் எஸ் ராஜேந்திரன் ஜெய்சங்கர் ஏவிஎம் ராஜன் கமல்
ரஜினி பிரபு சத்யராஜ் கார்த்திக் விஜய் வரை நடித்துவிட்டார். அவரை பொருத்த வரை யார்
வேணும்னாலும் நடிச்சுகுங்க நான் ஸ்கோர் பண்ணிக்கொள்வேன் என நடிப்பார். உதாரணமாக
சரஸ்வதி சபதம் படத்தில் ஜெமினி,முத்துராமன் ,சாவித்திரி,கே ஆர் விஜயா என நடிப்பில்
ஸ்கோர் செய்யும் பலர் இருந்தும் அவர்களின் கேரக்டர் என்னவென நாம் யோசிப்போம் ஆனால்
ஊமையாக இருந்து பேசும் "வித்யாபதி"யை நாம் யாரும் மறக்க முடியாது. பேச்சு
வந்து அம்மா அப்பா என்று ஆரம்பித்து அவர் பேசும் வசனங்கள் இன்றும் மறக்க
முடியாதவையே.கந்தன் கருணை படமும் அப்படியே முருகனாக சிவக்குமார் நடிக்க வீரபாகு
வாக நடித்து மொத்த பெயரையும் தட்டிக்கொண்டு போயிருப்பார் சிவாஜி. படத்தில் 5
நிமிடமே வந்தாலும் அவரின் கேரக்டரை அப்படியே பதிய வைத்து விட்டுப்போவார்
சிவாஜி.ஸ்கீரின் ஸ்பேஸ் எனப்படும் தன்னுடன் நடிக்கும் நடிகர் பேர் வாங்கும் போது
அதைதடுக்காமல் இருப்பதும்
சிவாஜிக்கு சாதாரணம்.இதற்கு கமல் சொன்ன உதாரணம் "பாகப்பிரிவினை படத்தில் ஒரு
கை ஊனமானவராக நடிக்கும் சிவாஜி ஒரு கையில் சாமி
கும்பிடுவதை பார்த்து எம் ஆர் ராதா "என்னடா சாமியை கும்புடுறியா இல்ல சலாம்
போடுறியா" என்று கேட்பார் அதற்கு எந்த கவுண்டும் கொடுக்காமல்
அடக்கி
வாசித்திருப்பார் சிவாஜி".இதுபோல் நிறைய உதாரணங்கள் உண்டு.
சிவாஜி கணேசன் தன் சிறந்த நடிப்பால்
வீர்பாண்டிய கட்ட பொம்மன் ,வ உ சி ,அப்பர்,ராஜராஜசோழன் போன்ற வரலாற்று புருஷர்களை
திரையில் அவர்களின் பெருமை
குலையாமல் உலவ விட்டு அவர்களுக்கு நியாயம் செய்தார் அவர்கள் இப்படித்தான்
இருந்திருப்பார்கள் என நம்மை உருவகம் கொள்ள செய்தார். திருவிளையாடல் சிவபெருமான்
கேரக்டரில் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு நடை, ஒரு குரல் மாடுலேசன் குரல் என
கலக்கியிருப்பார்.அதுவும் மீனவனாக வரும் சிவாஜியின் நடை கிளாசிக். மிருதங்க
சக்கரவர்த்தியில் ஒரு பாடலில் கர்னாடக பாடலின் முடிவில் திரையில் வரும் பாடலுக்கு
சரியான நேரத்தில் மிருதங்கம் வாசித்திருப்பார்.இதை ரீரிக்கார்டிங்கில் பார்த்த
ராஜா "எப்படிண்ணே கரெக்டா டைமிங்கில் வாசிச்சீங்க" எனக்கேட்க "போடா
இது கூட தெரியாமலா நடிக்க வந்தேன்"னு கிண்டலாக பதில் சொன்னாராம். அப்படி பெர்பெக்சன் என்பது அவருக்கு இயல்பாக
மாறிவிட்ட ஒன்று.இதேபோல் தில்லான மோகனாம்பாள் சண்முகசுந்தரத்தை மறக்க முடியுமா?
நிஜத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர் போலவே பெர்பெக்சன்
காட்டியிருப்பார்.கழுத்துபுடைக்க அவர் நாதஸ்வரம் வாசிக்கும் காட்சியை இப்போது
பார்த்தாலும் பெர்பெக்சனுக்கு சிவாஜியை ஏன் உதாரணமாக சொல்கிறோம் எனப்புரியும்.
அவரின் 100 வது படமான நவராத்திரியில் 9 கேரக்டரில் நடித்திருப்பார். மிகப்பெரிய
வெற்றிபடமான அதன் இன்ஸ்பிரேஷன்தான் கமலை தசாவதாரம் எடுக்க வைத்தது.அடுத்தவருக்கான
இலக்கை ஒடி அடையும் தூரத்தில் வைத்த பெருமை சிவாஜிக்கு மட்டுமே உண்டு.இப்படி
வெரைட்டி கேரக்டரில் நடித்தவருக்கு பெரியாராக நடிக்க வேண்டும் என்பதே ஆசையாக
இருந்தது. அது அவரின் உடல்நிலை மற்றும் விதியால் தீராத ஆசையாகவே போய்விட்டது.
இப்போதெல்லாம் படம் ஆரம்பித்து
ஹீரோவின் ஈகோ பிரச்சனையால் நின்ற படங்களை லிஸ்ட்டே போடலாம் ஆனால் நாம் இப்போதும்
நாம் கொண்டாடும் கர்ணன்
படம் எடுத்தபோது சிவாஜியும் அந்த படத்தின் இயக்குனர் பி ஆர் பந்துலுவும்
பேசிக்கொள்ளவே இல்லை என்பதே நம்பமுடியாத உண்மை.சிவாஜியின் கால்ஷீட்டை
பார்த்துக்கொள்ளும் அவரின் தம்பி ஷண்முகத்திடம் சொல்லி டேட்ஸ் வாங்கிவிட்டு வேறொரு
பட சூட்டிங்கில் இருந்த சிவாஜியிடம் கதை சொல்ல சென்று சிவாஜி அமர்ந்திருந்த
திசைக்கு பின்பக்கமாக அமர்ந்து காற்றை நோக்கி " அடுத்த படம் எடுக்கிறேன்,
கர்ணன்னு பேரு எனச்சொல்லி பிறகு கதையைச்சொல்லி மேக்கப் எப்படி இருக்க வேண்டுமென்று
சொல்லிவிட்டு வந்த இயக்குனருக்கு சிவாஜி நடித்துகொடுத்த படம்தான் "கர்ணன்"
இப்போது அப்படி ஒரு நிகழ்வு சாத்தியமே இல்லை.சிவாஜி படங்கள் என்றால் மேக்கப் மிக
முக்கிய இடம் பிடிக்கும்..ஒவ்வொரு படத்தின் கெட்டப்பை வைத்தே அது என்ன படம் என்று
நம்மால் சொல்லிவிட முடியும் ஒரு சில படங்களைத்தவிர. கதாநாயகனை கருப்பாக காட்டுவதே
அரிது என்று இருந்த காலத்தில்தான் பாவ மன்னிப்பு, தெய்வ மகன் போன்ற படங்களில்
முகத்தை அகோரமாக்கி நடித்து அதிலும் புதிய மைல்கல்லை வைத்தார் அது கமல்ஹாசனை குணா
, அன்பே சிவம் எடுக்கும் அளவுக்கு இட்டு சென்றது.80 களில் மிக பிசியாக இருந்த கமல்
சிவாஜியை சந்திக்க போக "என்னடா எல்லா படத்திலேயும் ஒரே கெட்டப்ல நடிக்கிறே ,
எந்த படத்துக்கும் வித்தியாசம் தெரியலயே,வித்தியாசமா நடி" என கமலுக்கு
அட்வைஸ் சொன்ன பிறகே நமக்கு கெட்டப் மாற்றி நடிக்கும் கமல் கிடைத்தார் சிவாஜிக்கு
பிறகு கெட்டப்பை வைத்து படத்தின் பெயரை சொல்லிவிட முடியுமென்றால் அது கமலுக்கு
மட்டுமே பொருந்தும்.
"தமிழ் சினிமாவில்
தமிழ்" நிகழ்ச்சியில் சிவக்குமார் அவர்கள் சொன்னது ,சிவாஜி அவர்கள்
"தாதே சாகிப் பால்கே" விருது வாங்கியிருந்த சமயம் அவரை சந்திக்க
செல்கிறார் ,சிவாஜி அவர்கள் குஷியாக இருந்தால் அவரை சந்திக்க செல்பவர்களை ஜாதியை
சொல்லித்தான் அழைப்பார்,என்னை "வாயா
கவுண்டா" என்றழைப்பார்" அதுவே வாங்க உட்காருங்க என்றழைத்தால் மூட்
சரியில்லை என்று அர்த்தம். ,அன்று நான் மாலை வாங்க்கிகொண்டு அவருக்கு வாழ்த்துசொல்ல அவர்
வீட்டுக்கு போயிருந்த போது 'வாங்க, உட்காருங்க" என்றார்.தோல் வலிக்குது மாலை
போட வேண்டாமென்று சொல்லவும் மூட் சரியில்லை எனப்புரிந்து கொண்டு அவரின் காலுக்கு
அருகில் தரையில் உட்கார்ந்து கொண்டேன்,"நானெல்லாம் சிவாஜி ரசிகன்"
என்றேன்,அதற்கு அவர் "உங்காளு நல்லா நடிப்பானா" என்று கேட்க
சிவக்குமார் சிவாஜியின் வணங்காமுடி படத்தின் நீளமான வசனத்தை பேசிக்காண்பிக்கிறார்.அதை
கேட்டுவிட்டு நல்லா இருக்கு ,இது எந்த படத்துல வருது ,என்றாராம் அதற்கு
சிவக்குமார் நீங்க நடித்த வணங்காமுடி
படம்தான் எனச்சொல்ல "எனக்கு நியாபகமே இல்லயேடா,அது சரி இதெல்லாம் நீ ஏன்
மனப்பாடம்
பண்ணி
வெச்சிருக்க" எனக்கேட்க "அய்யா நீ சமைச்சவன் உனக்கு அதோட ருசி
தெரியாது நாங்க அத சாப்டவங்க எங்ககளுக்குத்தான் அதோட ருசி தெரியும்"
என்றிருக்கிறார்.இப்படி
சிவாஜி சமைத்ததே அதிகம் சாப்பிட்டு பார்த்தது மிகமிக குறைவு.இங்கிலீஷ் படங்களை
விரும்பி பார்க்கும் அவருக்கு அந்த படங்களின்
வசனங்களை மொழி
பெயர்த்து சொல்பவரே திரு.கோபாலகிருஷ்ணன்.மர்லன் பிராண்டோ போன்ற ஹாலிவுட்
ஜாம்பவான்கள் சிவாஜியின் பெருமையறிந்து அவரை
வந்து
சந்தித்திருக்கிறார்கள்
சிலர் சிவாஜி பற்றிப்பேசும்போது
ஒவர் ஆக்டிங் என்று கடந்துவிடுகிறார்கள். கமலிடம் இது குறித்து கேட்டபோது
"சிவாஜி ஒவர் ஆக்டிங் செய்தார் என்பதை ஏற்றுக்கொள்ள
முடியாது,அக்கால மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு நடித்தார்" என்று வேண்டுமானால்
சொல்லலாம் என்றார் , யோசித்து பாருங்கள் ஜாக்சன் துரையிடம்
பேசும் போது மணிரத்னம் படம் மாதிரி பேசியிருந்தால் அந்த கட்டபொம்மன் கேரக்டர்
இவ்வளவு ரீச் ஆகியிருக்குமா இல்லை 2016 ல் கூட "ஜாக்சன்
துரை" என வில்லனின் பெயரில் படமெடுத்திருக்க முடியுமா?? உதாரணமாக திரிசூலம்
படத்தில் போனில் பேசும் சீன்
அப்போதெல்லாம் STD பேச வேண்டுமெனில் கால் புக் செய்து ட்ராங்கால்தான் பேசமுடியும் ,அந்த சீனில் சிவாஜியை விட்டு பிரிந்துபோன கே ஆர் விஜயா 25 வருடம் கழித்து டெலிபோனில் பேசுவார் அப்போது ட்ராங்கால் என்றதும் சாதாரணமாக பேசுபவர் சத்தமாக பேச ஆரம்பிப்பார் ( அப்படி பேசினால்தான் எதிர்முனையில் இருப்பவருக்கு சரியாக கேட்கும் அந்த சமயத்தில் டெலிபோன் டிபார்ட்மென்டில் ஒருவரும் அந்த பேச்சை கேட்டுக்கொண்டிருப்பார் ) உரையாடல் நடுவே உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி பேசுவார் திடீரென "எக்ஸ்டென்ஷன் பிளீஸ்" (ட்ராங்காலை நீட்டிக்க ) என்று சொல்லிவிட்டு பேசுவார்..அந்தக்கால ஆடியன்ஸுக்கு இப்படி ஒரு நடைமுறை இருப்பது தெரியாமல் கூட இருந்திருக்கலாம் .ஆனாலும் அவர்களுக்கு நியாயம் செய்யும் வகையில் அவர் நடித்திருப்பது தெய்வ லெவல் .இது ஸ்பாட்டில் அவரே பேசியது என்பது கூடுதல் தகவல். அந்த சீனை இப்போது பார்க்கும் சிவாஜியை அறியாத தலைமுறையினருக்கு அது ஓவர் ஆக்டிங்காகவே தோன்றும்.
சிவாஜி என்பவர் பணத்தின் மதிப்பை அறியாமல் வெறும் நடிகராக மட்டுமே இருந்தார் என்பதற்கு சரியான உதாரணமாக பாண்டு குறிப்பிட்ட நிகழ்ச்சியை சொல்லலாம் " சிவாஜியின் திருமணநாள் அன்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க திரையுலக பிரபலங்கள் பலர் வருவதுண்டு குறிப்பாக ரஜினியும் வருவாராம் .இது பல வருடங்களாக நடந்து வந்த நிகழ்வு , அப்படி காலில் விழுபவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து புத்தம் புதிய 5 ரூபாய் நோட்டை கொடுப்பார் , அன்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பாண்டுவின் மகனுக்கும் 5 ரூபாய் கொடுத்திருக்கிறார் ,சின்னப்பையன் தானே அடுத்து அவன் பிரபு காலில் விழுந்து ஆசி பெற அவர் 100 ரூபாய் கொடுத்திருக்கிறார் .உடனே அவன் சிவாஜியிடம் வந்து என்ன தாத்தா நீங்க 5 ரூபாதான் கொடுத்திருக்கீங்க மாமா 100 ரூபா கொடுக்குறாரே எனக்கேட்க சற்று அதிர்ச்சியானவர் சுதாரித்து கொண்டு "எங்க அப்பா ஏழை அதனால 5 ரூபா கொடுத்தேன் அவங்கப்பா பணக்காரர் அதனால அவர் 100 ரூபா கொடுத்தார் எனச்சொல்லி சமாளித்திருக்கிறார்.உண்மையில் சிவாஜி அவர்களுக்கு பணத்தின் தெரியாது என்பதே உண்மை .அவரின் கால்ஷீட்,சம்பளத்தை அவரின் தம்பி சண்முகம் பார்த்துக்கொண்டார் அவருக்கு பிறகு ராம்குமார் ..MGR அளவுக்கு தானதர்மம் செய்தவர் இல்லை ஆயினும் போர்க்காலத்தின்போது காலை நிகழ்ச்சி நடத்தி அந்த வருவாயை அரசுக்கு கொடுத்ததும் ,ராணுவ வீரர்களை இந்திய எல்லைக்கே போய் கலை
நிகழ்ச்சி நடத்தி மகிழ்வித்ததும் சிவாஜியின் நல் உள்ளத்துக்கு சான்று .நடிகர் சங்கம் அவர் தலைமையில்தான் உருவானது.
செகண்ட் இன்னிங்க்ஸை முதல் மரியாதையில் தொடங்கியவர் மிக யதார்த்தமாக நடித்திருக்க படத்தின் வெற்றியை வாழ்த்தி அவரின் நடிப்பை சிலாகித்தவரிடம் "உசுர கொடுத்த நடிச்சப்பெல்லாம் கம்முன்னு இருந்துட்டு சும்மா வந்துட்டு போனதுக்கு வாழ்த்து சொல்ல வந்திருக்கான் பார்" என கடிந்து கொண்டார் .ஸ்பாட்டிலேயே நடிப்பை குறைத்து நடிக்க சொன்ன பாரதிராஜாவிடம் "சும்மா வந்து நின்னா போதும்"ன்னு சொல்லு என அதிருப்தி காட்டினார் .பிறகு எல்லா அடுத்த செட் நடிகர்கள் கூடவும் நடித்தபிறகு உடல்நிலை காரணமாக சற்று ஓய்வெடுத்துக்கொண்டார் .அக்காலகட்டத்தில் ஒரு பிரபு பட சூட்டிங்கிற்கு சென்றவர் அருகிலிருந்தவரிடம் உங்க சிவாஜி இந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு வேடிக்கை பார்க்க மட்டுமே வந்திருக்கிறேன்னு மனமுடைந்து அழுதிருக்கிறார்,அவருக்கு நடிப்பு என்பது சுவாசம் போன்றது அது இல்லையெனில் திணறிப்போய்விடுவார்,மேலும் உடல் நிலையும் ஒத்துழைக்கவில்லை ,அவரை பலவகையில் சமாதானப்படுத்தி ஒத்துகொள்ளவைத்து கமல் நடிக்கவைத்த படம்தான் "தேவர்மகன்" அந்த கேரக்டர் கமல் சிவாஜியிடம் கற்ற வித்தைக்கு கமல் செய்த "குரு மரியாதை" அது எவ்வளவு பெருமை வாய்ந்த கேரக்டர் எனில் இப்போது தேவர் மகனை ரீமேக் செய்தாலும் கமல் கேரக்டரில் நடிக்க கூட ஆள் கிடைத்துவிடும் .ஆனாலும் சிவாஜியின் கேரக்டரை அந்த கம்பீரத்தை யாராலும் திரையில் கொண்டுவர முடியாது .ஏன் கமலே நினைத்தாலும் அதை செய்ய முடியாது ..அப்படி அந்த கேரக்டரை சமைத்தவரே அவரலல்லவா !!! பிறகும் படையப்பா உட்பட சில படங்களில் நடித்தார் .அவர் கடைசியாக கதை கேட்டது பாலாவிடம் ,நந்தா படத்தின் ராஜ்கிரண் கேரக்டரில் முதலில் நடிக்க ஒத்துக்கொண்டவர் நடிகர் திலகம்தான். ஆனால் அவரின் உடல்நிலை ஓத்துக்கொள்ளாததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.அதுவே கடைசி, அவரின் இறுதி ஊர்வலத்துக்கு தமிழ் சினிமா உலகமே திரண்டு வந்து தன் பிதாமகனுக்கு மரியாதை செய்தது.
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு , நடிப்புக்கு
,மேக்கப்புக்கு, வெரைட்டிக்கு முப்பாட்டன் "திரு.சிவாஜி கணேசன்"தான் ..அவர்தான் தமிழ் சினிமாவின் "தி லெஜெண்ட்"
சில நாள், வார இதழ்களின் தகவல்கள்
அற்புதமான கட்டுரை. சிவாஜி ஒரு சகாப்தம். அவர் ஓர் என்சைக்ளோபீடியா. அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள அநேக விஷயங்கள் உள்ளன. நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.
ReplyDeleteamas32
Madam Thanks For Your Valuable comment :))
Delete