Monday, 16 November 2015

தக்காளி

          வேலை நிமித்தம் குடும்பத்தை பிரிந்து தனியே வசிக்கும் நான் இன்று மளிகைக் கடையில் இருந்து  துணிப்பையில் சமையலுக்கு தக்காளி வாங்கி வந்தேன். மனைவியை பிரசவத்துக்கு  ஊருக்கு அனுப்பிவிட்டு என் போலவே சமைத்துண்டு சிலநேரம் பகிர்ந்துண்டும் வாழும் பக்கத்துவீட்டு போலீஸ்காரர் சதீஷ் " அண்ணே தக்காளியாண்ணே ,ஃப்ரஷா இருக்காண்ணே" ன்னு கேட்டுக்கொண்டு  ஒரு தக்காளியை பையிலிருந்து  எடுத்து சாப்பிட்டுக் கொண்டே வீட்டுக்குள் சென்றார். இந்த செயல் என் நினைவு  அடுக்குகளில் தங்கியிருந்த தக்காளி குறித்த என் நினைவுகளை மேலெழுப்பியது..


            அம்மா சமைக்கும்  உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால் நிறைய தக்காளி உபயோகித்து செய்யப்படும் "தக்காளி பஜ்ஜி" என்ற கிரேவிதான் சாப்பாட்டுடன் இதை பிசைந்து சாப்பிட்டால் வழக்கமான அளவைவிட இருமடங்கு சாப்பாடு உள்ளே போகும்.சப்பாத்தி,பூரி-க்கும் இதை தொட்டுக்கொள்ளலாம். இதன் ஸ்பெசாலிட்டி என்னவென்றால் ஒருநாள் கடந்தவுடன் அதன் விண்டேஜ் ஏறும் அது ஏறஏற அதன் சுவை கூடும். மூன்றாம் நாள் "தக்காளி பஜ்ஜியும் பழைய சோறும்" சாப்பிட்டால் அதுதான் எனக்கு "தேவாமிர்தம்" .நான் 80-களில் பிறந்தவன் ஆதலால் அப்போதெல்லாம் ஃப்ரிட்ஜ் என்ற வஸ்து மிடில்கிளாஸ் குடும்பங்களுக்கே அவ்வளவு பழக்கமில்லை.எங்கள் குடும்பசூழ்நிலையும் வறுமைக்கோட்டை ரப்பரால் அழித்துக்கொண்டிருந்த நேரம் என்பதால்  நாங்கள் ஃப்ரிட்ஜ் பற்றி கேள்விப் பட்டிருக்கவே இல்லை.ஸ்நாக்ஸ் என்பது கடையில் கிடைக்கும் பொறி உருண்டை, கடலை மிட்டாய், ஜவ்வுமிட்டாய்தான். சிலநேரம் அம்மா பொட்டுகடலைய அம்மில அரைச்சு சக்கரை தேங்கா துருவி போட்டு தருவாங்க அது சூப்பரா இருக்கும் .விடுமுறை நாட்களில் "ஒப்புட்டு"ம்
 ( போளி ) செஞ்சு தருவாங்க .
 


             அம்மா தினத்தேவைக்கு தேவையான காய்கறிகளை அன்றன்றைக்கு வாங்கித்தான் சமைப்பாங்க அதை ஒரு ஜவுளிக்கடை மஞ்சள்பையில்தான் வாங்கிட்டு வருவாங்க. அப்போதெல்லாம் தக்காளி இவ்வளவு கடினமாக இல்லை. கொஞ்சம் அழுத்தினாலும்  உடைஞ்சு போயிடும் இல்ல கன்னிப்போயிடும். காய்வெட்டாக தக்காளியை வாங்கினால்தான் ஒரு வாரத்துக்கு தாங்கும் ( இப்பெல்லாம் கொஞ்சம் பழுத்தநிலையில் இருக்கும் தக்காளியை வாங்கி ஃப்ரிட்ஜ் இல்லாமல் வைத்திருந்தால் கூட 7 டூ 10 நாட்கள் தாங்குது "ஹைபிரிட்" ) பழுத்த தக்காளி இரண்டு மூன்று நாட்கள் தாங்கும் என நினைவு.ஸ்நாக்ஸ் வெரைட்டி என்பது குறைவாக இருந்த காரணத்தினால் அம்மா வாங்கிவரும் வெண்டைக்காய்,கேரட்,தக்காளி இதெல்லாம் பச்சையாவே சாப்பிடுவேன். அதிலும் தக்காளி மிகவும் பிடித்த ஒன்று இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையில் ஜூஸ் போன்று கடித்தும் குடித்தும் நடுப்பகுதி தவிர்த்து முழுத்தக்காளியையும் சாப்பிட்டு விடுவேன்.தக்காளி மனதுக்கும் வயிற்றுக்கும் அம்மாவை போலவே மிக நெருக்கமானது. இப்பக்கூட எப்போ "தக்காளி பஜ்ஜி" செஞ்சாலும் அம்மா நினைவு வராம சாப்பிட முடியுறதில்ல. தக்காளியை குறுக்காக வெட்டினால் ஆச்சரியமாக அது இதயத்தின் வடிவத்தை போலிருக்கிறது  அதுகூட மனதின் நெருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.


            பருப்பு தண்ணிய வடிச்சு அதுகூட மிளகு ,வரமிளகாய் ,சீரகம், பூண்டு தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு அம்மா ரசம் வெச்சா அந்த வாசம் வீட்டையே தூக்கும்.அதுக்கு மட்டும் ஒரு ரவுண்ட் எச்சா ( அதிகமா ) சாப்பிடுவேன் என் மாமியார் வீட்டில் ஒரு தக்காளியை வைத்து ஒரு குண்டா ரசம் வைப்பார்கள் ரசத்தில் தக்காளி இருப்பதே தெரியாது.ரசத்துல தக்காளிய ஆள்வெச்சு தேடணும்.நாங்கூட"என்னம்மா ரசத்துல தக்காளி கருவேப்பிலய   கயித்த கட்டி இறக்கிட்டு கொஞ்சநேரத்துல வெளில எடுத்து வெச்சிருவீங்களா "ன்னு கேட்பேன்.இவர்களால் எப்படி தக்காளியை இவ்வளவு குறைவாக பயன்படுத்தி சமைக்க முடிகிறது என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.தக்காளி என்பது நம் குடும்பத்துடன் கலந்துவிட்ட ஒன்று.தக்காளியில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. அந்த விவரங்கள் இணைப்பு  

http://tamil.boldsky.com/health/food/2011/medicinal-uses-tomato-aid0091.html
http://www.maalaimalar.com/2011/01/04112520/tomato-used.html 

          ஆனாலும் பாகற்காய் போல் நம் நாக்குக்கு மிகவும் கஷ்டம் கொடுக்காமல் நம் உணவுக்கு சுவையையும்,சத்தையும் கொடுக்கிறது. நாட்டு தக்காளி போன்று பெங்களூர் தக்காளி உணவில் அவ்வளவு சுவை சேர்ப்பதில்லை அதிகம் இனிப்பாக இருப்பதினால் வெறும் வாயில் உண்ண சுவையாக இருக்குமளவுக்கு உணவில் சேர்த்தால் அது சுவை தருவதில்லை என்பது என் கருத்து.தக்காளி என்னை மிகவும் பாதித்தது கசாப் மரணத்தின் போதுதான். காங்கிரஸ் அரசாங்கம் தங்கள் ஆட்சிமுடிகிற தருவாயில் பாகிஸ்தானின் அம்பான மும்பை தாக்குதல் குற்றவாளி "அஜ்மல் கசாப்" ஐ தூக்கில் போட்டது.கசாப்பை தூக்கில் போடுவதை ரகசியமாக வைத்திருந்து தூக்கில் போட்டு அவனை புதைத்த இடத்தை கூட இன்றுவரை கூட ரகசியமாக வைத்திருக்கிறார்கள் ( !!! ).  


              கசாப்பை தூக்கில் போட்டதும் கசாப்பின் கடைசி நிமிடங்கள் குறித்த தகவல்கள் நாளிதழ்கள் , வார இதழ்கள் என எல்லாவற்றிலும் காணக் கிடைத்து. அதில் சிறைத்துறை அதிகாரிகள் கசாப்பிடம் உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டதற்கு "தக்காளி பழம் வேண்டும்" என்றானாம் . அதிகாரிகள் ஒரு கூடை நிறைய தக்காளிப்பழத்தை அவனுக்கு கொண்டுவந்து கொடுத்துள்ளனர்.அவனும் அதிலிருந்து சில தக்காளிப் பழங்களை சாப்பிட்டு விட்டு தூக்குமேடைக்கு சென்றிருக்கிறான் .இதை வெறும் ஆசையாக , ஒரு நிகழ்வாக என்னால் கடந்துபோக முடியவில்லை.ஒருவனின் கடைசி ஆசை என்னவென்று  கேட்கும்போது அவன் சாப்பாட்டு  பிரியனாக இருந்திருந்தால் விலையுயர்ந்த ஆப்பிள்,மாதுளை,முந்திரி,பாதாம் இல்லை விலையுர்ந்த வேறு எதாவது உணவுப்பொருட்களை கேட்டிருப்பான்.
                 கசாப்  கேட்டதோ "தக்காளி" ,தக்காளி அவனுக்கு மிகவும் பிடித்த உணவாக எப்படி ஆகியிருக்கும் அதன் சுவையினாலா??!!  இல்லை அவனுடைய அம்மா அதை வைத்து சுவையான உணவை சமைத்து கொடுத்ததாலா ??!!  என்போல் அவனும் அவனுடைய அம்மா தக்காளியை வாங்கிக்கொண்டு வரும்போது எடுத்து ஆசையாய் தின்றிருப்பானோ ??!! கடைசியாக தன்  அம்மா கையால் சாப்பிடும் உணர்வை பெற தக்காளியை கேட்டுவாங்கி சாப்பிட்டிருப்பானோ??!! போன்ற கேள்விகள்  இதுவரை என் மனதுக்குள் தொக்கிக்கொண்டு  நிற்கிறது...

1 comment: