Saturday, 20 September 2014

கமல்ஹாசன் என்னும் சினிமா யானை





               எப்போது பார்த்தாலும் கண் விலகாமல் ஆச்சர்யம் தரும் யானை ,ரயில்,அருவி,பெண் குழந்தை போல எனக்கு ஆச்சர்யம் தரும் இன்னொரு விஷயம் கமல். பார்வையற்றவன் யானையின் உருவத்தை சொல்ல முயற்சித்தது போல முயற்சி செய்திருக்கிறேன்
              தமிழ்சினிமா 75-ந்தில் இருந்து 80-களின் பெரும்பகுதி வரை "கரகர"கரம் மசாலாவாகவே இருந்தது.இதில் பாலச்சந்தர் பாரதிராஜா போன்றவர்கள் நல்ல படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.எம்ஜியார் சிவாஜி போன்ற சினிமா சீனியர்களின் ஓய்வுக்கு பிறகு தமிழ்சினிமாவில் மசாலா மணத்தை குறைக்க முற்பட்டதில் முதலிடம் கமலுக்கு கொடுக்கலாம்.ரஜினிக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்த முள்ளும் மலரும் மூலமாக பாலுமகேந்திராவை தமிழுக்கு கொண்டுவந்தது கமல் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.அதுவரை டாக்கியாக இருந்த சினிமாவை மூவியாக மாற்ற முயற்சித்தவர்கள் மகேந்திரன் ,பாலுமகேந்திரா.அவர்களை ஒத்த அலைவரிசையில் இருந்தவர் கமல்."கமல் மலையாள படங்களில் பிசியாக நடித்துகொண்டிருந்தபோதே தமிழ்சினிமாவின் நிறத்தை மாற்றும் எண்ணம் இருந்தது இத்தனைக்கும் அப்போது அவர் வயது 25 க்குள் இருந்தது" என எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.
             கமல் ஆரம்பகாலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக இருந்தாலும் பின்பு ஆக்சனுக்கும் மாறினார்வர்தான். நிறைய மசாலா படங்கள் மூலம் வெற்றியை சுவைத்தவர்தான். "குரு" சகலகலா வல்லவன் அதில் சிகரம் என சொல்லலாம்.தன்னுடைய 100 வது படமான 'ராஜபார்வை"யில் நடித்தபோது கமலின் வயது 25.தன்னுடைய 100 வது படம் என்பது ரிஸ்க் இல்லாமல் வெற்றிபடமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா ஹீரோக்களும் விரும்புவார்கள்.(இதில் விதிவிலக்காக ஜெயித்தவர்கள் எம் ஜி ஆர், சிவாஜி,விஜயகாந்த்-தான்,ரஜினி சத்யராஜ் பிரபு எல்லோருக்கும் 100 வது படங்கள் தோல்விப்படங்களே ). கமல் சினிமாவின் நிறத்தை மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் தெரிந்தே "ராஜபார்வை" என்ற தீயில் கையை வைத்தார்."ராஜபார்வைக்காக விருது வாங்கியபோது மட்டும்தான் கை "சில்' என்று இருந்தது" என கமல் குறிப்பிட்டார்.


          கமலும் சகலகலா வல்லவன் தூங்காதே தம்பி தூங்காதே மூலம் உச்சபட்ச வெற்றியை சுவைத்தார் .ஆனால் அதில் சிக்கிக்கொள்ளாமல் எழுத்தாளரை சினிமாவுக்கு கொண்டுவரவேண்டும் ஆவலில் சுஜாதாவுடன் இணைந்து எடுத்த படம்தான் "விக்ரம்".எனக்கு தெரிந்து கம்ப்யூட்டர் முதன்முதலில் காமிக்கபட்டது விக்ரமில்தான். ஏவுகனையை அதன் ஆபத்தை தமிழர்கள் அறிய செய்த படம்."ப்ளூ மேட்" டெக்னாலிஜியில் உருவான முதல் தமிழ்ப்படம் (க்ளைமேக்ஸ்) ராஜஸ்தானுக்கு தமிழர்கள் சுற்றுலா சென்றுவந்தது போல் அழகாக படம்பிடிக்கபட்ட படம் .சத்யராஜ் வில்லனாக நடித்த கடைசி படம் என பல விஷயங்கள் இதில் உண்டு.இயக்குனர் ராஜசேகர் இடையில் மாவீரனை இயக்க போய்விட சந்தானபாரதியும் கமலும் செய்த பேட்ச் ஒர்க் படத்துக்கு செட்டாகவில்லை விக்ரம் தோல்விப்படமாக அமைந்தது.அதுவரை  நடித்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் அதில் போட்டிருந்தார் கமல் என்ற தகவலும் உண்டு.மன்னாதி மன்னன் தோல்வி அடைந்த்திருந்தால் என்னவாகியிருக்குமோ அது கமலுக்கு நடந்தது எனத்தகவல் .ஆனாலும் வித்தியாசமான முயற்சிகளை விடவில்லை.

           தொடர்ந்து பிசியாக நடிக்க வேண்டிய சூழல், இல்லையென்றால் "பேர் சொல்லும் பிள்ளை"யும், மங்கம்மா சபதமும் வந்திருக்காது.கமலின் பேனா கமர்சியல் வெற்றி பெற்றது "அபூர்வ சகோதர்களில்தான். மூன்று வேடங்கள் மூன்று பாடி லாங்குவேஜகள் என கமல் தன்னை வருத்தி ரசிகனை குதூகலப்படுத்திய படம் கிரேசி மோகன் கமலுக்கு "பக்கா"பலம் ஆனார்.அப்பு கேரக்டருக்கு கமல் பட்ட சிரமங்கள் ஏராளம் அதில் பின்புறமாக கால்களை கட்டிக்கொண்டு நடித்ததும் ஒன்று.அதில் அப்பு கேரக்டரை சற்று மனநிலை பாதித்தவனாக காட்டியிருந்தாலும் கூட (வில்லன் படம் மாதிரி ) இந்த படம் வெற்றி பெற்றிருக்கும்.ஏனெனில் திரைக்கதை அவ்வளவு நன்றாக இருந்தது,இப்படி மெனகெட்டிருக்க தேவையில்லை.ஆனால் ரசிகனுக்கு புதிய விஷயத்தை கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக கமல் அவ்வளவு மெனகெட்டார் என்பதுதான் நிதர்சனம்.கமல் அபூர்வ சகோதர்கள் வரையிலும், ரஜினி பாட்ஷா வரையிலும் ரசிகர்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டில் உட்காரவைத்துவிடுவார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள் என்பது தகவல்.சிவாஜியையே ஒதுக்கியவர்கள் அல்லவா தமிழர்கள்.


            கமல் 90 க்கு  பிறகு தன் பாதையை மாற்ற எடுத்த முதல்முயற்சிதான் "குணா".. குணா மனநிலை பாதிக்கபட்டவன்,அவனது தாய் தப்பான தொழில் செய்பவள் இதற்குமுன் எந்த பெரிய ஹீரோவும் தன்னுடைய பின்புலத்தை இவ்வளவு மோசமாக அமைத்துகொண்டதில்லை.கமல் -இளையராஜா-சந்தானபாரதி என்ற கூட்டணி வெற்றிதராமல் போனாலும் தமிழுக்கு மற்றொரு வாசல் திறந்த படம் குணா.கமல் பேனா பிடித்த படங்களின் திரைக்கதையில் ஒரு ஒழுங்கு இருக்கும்.அதில் இரண்டாம்படம்தான் குணா.இவ்வளவு மெனக்கெடல் ஒரு படத்துக்கு வேண்டுமா என ரசிகனை பேசவைத்தது. அதுவரை வெறும் பைத்தியம் என்ற உச்சரித்த தமிழ்சினிமா "மனநிலை பாதிக்கப்பட்டவன்" என்ற சொல்லை உபயோகிக்க காரணமாயிருந்தது குணாதான்.அது செல்வராகவன் காதல்கொண்டேன் செய்யுமளவுக்கு வந்து நின்றது.கமல் குணா-வாகவே மாறி உலவினார், ஒரு அறைக்குள்ளேயே கமல் சுற்றி சுற்றி வசனம் பேசும்போது தமிழ்சினிமாவும் சுற்றியது .அதுவரை இருந்த ஸ்டேண்டிங் காமிராக்களுக்கு விடுதலை.குணா குகைக்கு (முன்பு டெவில்ஸ் கிச்சன் ) போகும் வழி மிகவும் ஆபத்தானது.ஒவ்வொருவராக பாலத்தில் சென்று அந்த இடத்தை அடைவார்களாம்.கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கமல் அதில் சென்று நடித்தார்.ஆனாலும் அது அப்படியொரு இடத்தில் படமாக்கபட்டது ரசிகனுக்கு தெரியாது.கடைசி ரசிகனுக்கும் நியாயம் செய்யவே அப்படி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து சிரமத்துடன் நடித்தார். அதனால்தான் ராஜாவின் "கண்மனி அன்போடு காதலன்"க்கு நியாயம் செய்ய முடிந்தது.இதுதான் எல்லா ராஜா ரசிகனின் ப்ளே லிஸ்ட்டிலும் கண்மனி இடம் பிடிக்ககாரணம்.
              கமலின் பேனாவுக்கு வைரைக்கல் வைத்த படமென்றால் தேவர்மகன்-தான்.அன்னை இல்லத்து ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு அரிதாரம் பூசியதற்கு அதுவரை அவர் பெறாத சம்பளத்தை கொடுத்தார் கமல்.(படையப்பாவில் ரஜினி அதை முறியடித்தார்.)பொதுவாக கமல் ரஜினி நடிக்கும் படங்களில்தான் மற்ற நடிகர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கும் என்ற தகவலும் உண்டு.குருதிப்புனலில் இயக்குனர் விஸ்வநாத்துக்கு சம்பளம் 85 லட்சதுக்கு மேல் கொடுத்தார் என்பது தகவல்.கமல் தன்னை சிறந்த தயாரிப்பாளராகவும் நிலைநிறுத்திக்கொண்டவர்.தேவர் மகன் மூலம் "ஃபங்க்" ஸ்டைலை அறிமுகம் செய்து வைத்தார்.அனைத்து நாயகர்களின் ரசிகர்களும் கூட பேதமின்றி "ஃபங்க்" வைத்துக்கொண்டார்கள்.பொதுவாக கமல் ஸ்டைல் செய்யமாட்டார் செய்தால் அது வெகுநாளைக்கு இருக்கும் உதாரணம் "சத்யா" பட ரிங் இப்ப வர்ற காலேஜ் பசங்ககிட்ட கூட டிரெண்ட்..


              தமிழ்சினிமாவின் சிறந்த பத்து படங்களை சொன்னால் அதில் தேவர் மகனை சேர்க்காமல் முடிக்கமுடியாது.தேவர்மகனில் சிவாஜி இருக்கும் காட்சிகளில் கமல் அடக்கியே வாசித்தார்.சிவாஜி என்ற பிதாமகனை வேறொரு கோணத்தில் காட்டி ரசிக்கவைத்தார்.தேவர்மகனின் வசனங்கள் இன்றும் பாடமாக படிக்கவேண்டியவை தமிழ்சினிமாவின் சிறந்தவசனங்களை உள்ளடக்கிய படங்களில் ஒன்று.திரைக்கதை என்ற இலக்கணத்துக்கு சரியான உதாரணம்.தெற்கில் இருக்கும் ஜாதி வெறியை பெரியவர் சின்னவர் என்ற பேதத்தை சொத்து பிரச்சனையை அந்த பகுதி மக்களின் வெள்ளந்திதனத்தை கண்ணாடிபோல் காட்டியது திரைக்கதை,சங்கிலி முருகன் அதற்கு உதவினார். சிவாஜியின் "இன்னைக்கு  நான் விதை போடுறேன்" வசனம் மனிதவாழ்வில் பாடமாக படிக்கவேண்டிய ஒன்று."போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா" என்று சொல்லி தமிழர்களை விழிக்கசெய்தார்.தலைவாசல் விஜய், வடிவேல் போன்ற திறமையாளர்களை அடையாளம் காட்டினார்.எனக்கு பிடித்த கமலின் "எவர் கிரீன் மூவி" என்றால் அது "தேவர்மகன்"தான்.


              தேவர் மகனுக்கு பிறகு கமல் மீதான மரியாதை கூடிய படம் "மகாநதி".கிருஷ்ணசாமியாக கமல் வாழ்ந்தார்.பெண்களுக்கு எதிராக அக்கிரமங்களை அநீதிகளை வெளிச்சமிட்டு காட்டிய படம்."சோனாகாஞ்சி" என்ற வார்த்தையை கடைசி தாய்மாருக்கும் கொண்டுபோய் சேர்த்தார்.ஒரு தவறான தொழில் செய்யும் பெண்ணின் காலில் விழுந்து அழுது தன்னுடைய நட்ச்சத்திர அந்தஸ்த்தை உடைத்து "தான் ஒரு நடிகன் மட்டுமே" என்று கமல் ஊருக்கு உணர்த்தினார் சகமனிதனின் கோபம் என்ன செய்யும் என காட்டினார் .எனக்கு தெரிந்து பெண்களோடு சேர்ந்து ஆண்களும் கண்ணீர் சிந்தியபடி பார்த்தபடம் "மகாநதி" தான்.அதில் முதன்முதலில் "ஆவிட்" எனும் கம்ப்யூட்டர் எடிட்டிங்கை தமிழ்சினிமாவுக்கு அறிமுகம் செய்தார்.புதுமையை தமிழ்சினிமாவில் புகுத்திகொண்டேயிருக்க வேண்டும் என விரும்பினார்.இந்த யானையை பற்றி எழுதும்போது அன்பே சிவம் ஹேராம் இரண்டையும் எழுதாமல் இருக்க முடியாது.ஆனால் அதை தொட்டால் இந்த கட்டுரைக்குள் அடக்க முடியாது.அதற்கென ஒரு பதிவு எழுதனும்..


                சில படங்கள் காலங்கள் கடந்தபோதும் பார்க்குறப்ப எல்லாம் அப்டியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்.சில படங்கள் சில காலம் கழித்து கொண்டாடப்படும் ஆனால் வந்த புதிதில் வரவேற்பை பெறாமல் போயிருக்கும்.இதில் விக்ரம்,மைக்கேல் மதன காமராஜன், பம்மல் கே சம்பந்தம் ,பஞ்ச தந்திரம்,தில்லு முல்லு அன்பே சிவம் போல பல படங்கள் உண்டு.அதில் ஒன்றுதான் "ஆளவந்தான்".மனப்பிறழ்வை மிக வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்த படம்.அதில் வரும் நந்துவின் கவிதைகள் வீரியம் மிக்கவை (உபயம் வைரமுத்து ).நந்து வந்தவுடன் படத்தின் நிறம் மாறும்..வேகம் வேகம்...பாடல் இசைக்கு சங்கர் எசான் லாய்,பின்ணனி இசைக்கு மகேஷ் என கமலின் புதிய படை தங்கள் பங்கை சரியாக செய்தார்கள். கமல் வில்லனுக்கென எந்த காம்பரமைஸும் செய்துகொள்ளாமல் நந்துவுக்கு தோன்றுவதயே திரைக்கதையாக அமைத்தார். இடைவேளைக்கு பிறகான படத்தின் வேகம் சமீபத்தில் கூட எந்த படத்திலும் பார்த்த நியாபகம் இல்லை.
           2000 தீபாவளிக்கு வந்த தெனாலிக்கு கொடுத்த வரவேற்பை 2001 தீபாவளிக்கு வந்த ஆளவந்தானுக்கு மக்கள் ஏன் கொடுக்கவில்லை என்று இன்றும் தெரியவில்லை. பெண்கள் பலருக்கு கமல் நிர்வாணமாக அமர்ந்திருந்த,படுத்திருந்த போஸ்டரே படத்துக்கு செல்ல தேவையில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.அந்த சமயத்தில் கமல் பெர்சனல் வாழ்வில் வந்த பிரச்சனைகளும் படத்தின் மைலேஜை குறைத்தது, கமலஹாசன் உடைகள் "சாய்" என டைட்டிலில் வந்தது.கலைப்புலி தாணுவே போதுமான விளம்பரம் கொடுத்ததாக தெரியவில்லை.தாணு கமலை விமர்சித்து அவரே தியேட்டர்களில் எடிட்டும் செய்தார்."பெண்ணை கட்டி கொடுத்தாச்சு இனி நல்லபடியா பார்த்துக்குறதும் கொடுமைபடுத்துறதும் அவங்க கையில இருக்கு"என கமல் பேட்டிகளில் வருத்தப்பட்டார்.கமல் மீதான் கோபத்தை கமல்-சரிகா விவாகரத்துக்கு பிறகு புன்னகை பூவே படத்தில் சரிகாவை ஒரு பாடலுக்கு ஆட வைத்து தாணு காட்டிக்கொண்டார்.கமல் செய்த ஒரே தவறு ஆளவந்தானை 2001-ல் ரிலீஸ் செய்ததுதான்.2015 ல் எடுத்து ரிலீஸ் செய்திருந்தால் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும்.இதற்கு லார்ட் ஆப் த ரிங்க்ஸ் தயாரிப்பாளர் "பேரி ஆஸ்பர்னின் பாராட்டே உதாரணம்.


           கமலுக்கும் ராஜாவுக்குமான நட்பு மிக ஆச்சர்யம் அளிக்ககூடிய ஒன்று.2005 க்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை ஆனாலும் அவர்களின் நட்பு அப்படியே இருக்கிறது .ராஜாவின் லண்டன் இசை விழாவில் ஒரு பாடகனாக கலந்து கொண்டு பாடினார்.ராஜாவுக்கும் கமல் கொஞ்சம் ஸ்பெசல்தான் ஏனெனெனில் ராஜாவின் பாடல்களுக்கு அதிகபட்ச நியாயம்செய்து படமாக்கியதில் கமலுக்கு மட்டுமே முதலிடம்.இஞ்சி இடுப்பழகி உருவான விதத்தை கமல் சொல்ல கேளுங்கள். 
இஞ்சி இடுப்பழகி



            கமல் ஹாலிவுட் படங்களை காப்பியடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.நல்ல விஷயங்களை மக்கள் அறிந்திராத விஷயங்களை நெருக்கமாக கொண்டுவர உதவிபுரிகிறார் என்றே சொல்ல வேண்டும்.அவ்வை சண்முகி "என் மீசையானாலும் மனைவி"தான்னு கிரேசி மோகன் பலமுறை சொல்லியும் இது மிஸஸ் டவுட் பயர்-தான் என்று சொல்கிறார்கள்.அப்படியே பார்த்தாலும் ஆண்-பெண் புரிந்துகொள்ளலை சேர்ந்து வாழவேண்டிய அவசியத்தை மிக நகைச்சுவையாக சொன்னதில் அவ்வை சண்முகி ஆங்கில படத்தை விட நன்றாகவே இருந்தது.கமல் நல்ல இந்தியப்படங்களையும் விட்டதில்லை. மராட்டி "துரோக்கால்"தான் குருதிப்புனல் ஆனது.சத்யா கூட ரீமேக்தான். 
அது இப்ப "பாபநாசம்" வரை தொடர்கிறது.
                   இந்த யானையின் பிடித்த முகங்களில் ஒன்று ரசிகன் முகம் .சிவாஜி நாகேஷ் அவ்வை சண்முகம் எம் ஆர் ராதா பாலச்சந்தர் என அவர் ரசிக்கும் விஷயங்களும் அதை இப்போது சொல்லும்போதும் காட்டும் ஆர்வமும் ரசிக்க தகுந்த ஆச்சரியப்படக்கூடிய ஒன்று. சமீபத்தில் சுகாசினி ஒரு நிகழ்ச்ச்சியில் கமலிடம் "வீரபாண்டிய கட்டபொம்மன் ,கப்பலோட்டிய தமிழன் படங்களை ரீமேக் செய்து நடிக்க சொன்னால் எந்த படத்தில் நடிப்பீர்கள்" என கேட்டதற்கு கமலின் பதில் "எந்த கேரக்டரில்ன்னு சொல்லவே இல்லையே" என்றவர் வேண்டுமானால் கப்பலோட்டிய தமிழன் படத்தில் சுப்ரமணிய சிவாவாக நடிக்கலாம் ஏன்னா அதுல என் ஆசான் சண்முகம் அண்ணாச்சி நடித்திருந்தார் "என பதில் சொன்னார். அவர் சிவாஜிக்கும் அவர் இடத்துக்கும் கொடுக்கும் மரியாதை பிரமிக்க தகுந்த ஒன்று.இத்தனைக்கும் சிவாஜி கடைசிவரை கமலை தன் வாரிசாக அறிவிக்கவே தயங்கினார் என்பதே உண்மை.சிவாஜி தன் நடிப்புலக சக்கரவர்த்தி எனும் நாற்காலியை யாரிடமும் பங்கு போட்டுக்கொள்ள விரும்பவில்லை தேவர்மகன் நாற்காலி உட்பட.

                 "நாகேஷ்" இன்றுவரை கமல் எந்தவொரு தொலைக்காட்சி பேட்டியிலும் நாகேஷை குறிப்பிடாமல் பேசிப்பார்த்த நியாபகம் இல்லை. நாகேஷ் குறித்து சொல்லும்போதெல்லாம் 200% எனர்ஜியாக சொல்லுவார்,இன்னும் கூட கண்கள் விரிய விரிய நாகேஷ் பாலச்சந்தர் நட்பை விவரிப்பார்.கமலின் தற்போதைய உயரத்துக்கு இந்த அளவுக்கு சக நடிகனை ரசிப்பதை வெளியில் காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.ஆனாலும் ரசிப்பதில் குறை வைப்பவரல்ல கமல்.கமல் தன் படங்களில் நாகேஷை தொடர்ந்து பயன்படுத்தி அன்பை காட்டினார்.அவ்வை சண்முகி ஜோசப் ,அபூர்வ சகோதர்கள் வில்லன், பஞ்ச தந்திரம் "மாமனார்" நம்மவர் புரபசர், மகளிர் மட்டும் பிணம்,வசூல் ராஜா வாத்தியார் அப்பா என கமல் நாகேஷுக்கு கொடுத்த வைரைட்டிகள் அதிகம்.தசாவதாரத்தில் கமல் நாகேஷுக்கு கொடுத்தது கவுரவ "செண்ட் ஆப்" "ஐ அம் ஹானர்டு"டா என நாகேஷ் கமலை பார்த்து சொன்னார்.தன் விருப்ப நடிகரின் கடைசிப்படம் தன் படமாக மாறிப்போனதில் கமல் நிச்சயம் சந்தோசப்பட்டிருக்கமாட்டார்.


                 கமலுக்கு கடவுள் பக்தி இல்லை ஆனால் குரு பக்தி நிறைய உண்டு.பாலச்சந்தரின் மீது கமல்ஹாசனின் மரியாதை வியக்கதக்க ஒன்று இந்த விசயத்தில் கமல்-ரஜினி இருவரும் நேர்க்கோட்டில் இருப்பார்கள்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கமல் சொன்னார் "பாலச்சந்தர் காரில் வந்துகொண்டிருந்தபோது இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கிறது ரோட்டுல போறவனையா என பாலச்சந்தரிடம் ஒருவர் கேட்க அவர் ரோட்டுல போற அவன்தான் நடிக்க போறான் என்று பாலச்சந்தர் சொன்ன
இடத்தில் நடந்துசென்று கொண்டிருந்தது நான்,நல்லவேளை அந்த பக்கம் நான் நடந்து போனேன்" என குறிப்பிட்டார். கமல் பாலச்சந்தரின் இயக்கத்தில் கடைசியாக நடித்தபடம் உன்னால் முடியும் தம்பி என்றாலும் கூட பார்த்தாலே பரவசம் படத்தில்கூட ஒரு சீன் வந்து தன் குரு பக்தியை காட்டினார்.உத்தமவில்லனில் பாலச்சந்தரை நடிக்கவைத்து இப்போதும் குருபக்தியை காட்டிக்கொண்டிருக்கிறார் கமல் தி கிரேட்.


                கமல்-ரஜினி நட்பும் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றுதான்.ரஜினி 80 க்கு பிறகு துறவறம் மேற்கொள்ள முயற்சித்தபோது அவரை மீண்டும் லௌகீக வாழ்க்கைக்கு அழைத்துவர முயற்சித்ததில் பெரும்பங்கு கமலுக்கு உண்டு.கமல்-சிம்ரன் பிரச்சனையில் ரஜினி தலையிட்டு தீர்த்துவைத்தார் என்ற தகவலும் உண்டு. ரஜினி "தெனாலி" என தலைப்பு வைக்க படையப்பாவுக்கு ஒரு இடைவேளை மட்டுமே விடவேண்டும் என கமல் முடிவு செய்ய என இருவரது நட்பும் மிக ஆச்சரியமிக்க ஒன்று.
               
               கமல்ஹாசன் படங்கள் என்றாலே "லிப் கிஸ்" என எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் சினிமா விமர்சகர்கள்.உண்மையில் அதுபோல அமைந்தது சில படங்களே அதுவும் காட்சிக்கு தேவைப்பட்டிருக்கும் ஹேராம்,மகாநதி,குருதிப்புனல்,புன்னகை மன்னன் என சில படங்களில் மட்டுமே வரும் .இப்போது யோசித்தால் அடுத்துவரும் காட்சிக்கு தேவையானதாகவே இருக்கும்.தேவர்மகனுக்கு பிறகு கமலின் படங்களில் சமூகப்பொறுப்பு அதிகமாகவே இருந்தது.திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லாத கமல் இதுவரை அதற்கு முரணான படங்களில் நடித்ததில்லை.மும்பை எக்ஸ்பிரஸ்ல் வரும் மனீஷாவின் கேரக்டர் உதாரணம்.அவ்வளவு தவறான குணங்களுடைய பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு மனிதர்கள் அனைவரும் குறையுடையவர்கள்தான் ,நாம்தான் அனுசரித்து நல்வழிப்படுத்தி வாழவேண்டும் என சொல்லாமல் சொன்னார்.கிளைமேக்ஸில் எங்க போறோம் என்பதற்கு "நேர் வழியில" என பதில் சொன்னார்.தொடர்ந்து வேட்டையாடு விளையாடு-வில் ஜோதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொள்வார் இதில் கமல் முரண்பட்டிருந்தால் கௌதம் மேனன் மாட்டேன் என சொல்லியிருக்கமாட்டார்.ஆண் பெண் மறுமணத்துக்கான் அழகான கவிதை அது. 
             புத்தங்களை படிக்கவேண்டும் என வலியுறுத்துபவர். "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி "நிகழ்ச்சியில் ஜெயமோகனின் "அறம்" புத்தகத்தை பிரகாஷ்ராஜுக்கு பரிசாக தந்ததனால் "அறம்" அனைவரும் அதிகளவில் படிக்கும் புத்தகம் ஆனது.நீ.வெ ஒரு கோடியில் கிடைத்த பரிசுத்தொகை 50 லட்சத்தைக்கூட "பெற்றால்தான் பிள்ளையா" அறக்கட்டளைக்கு கொடுத்து தன் சமூகப்பொறுப்பை காட்டினார்.அவருடைய நற்பணி இயக்கங்கள் செய்துவரும் நற்பணிகள் ஏராளம்.பாபநாசம் படப்பிடிப்பில் கூட அந்த பகுதி சமூக ஆர்வலர்களை தேடிப்போய் சந்திக்கிறார். தற்போதைய தமிழ்சினிமாவில் 1965-க்கும் 2015-க்கும் இடையிலான தமிழ்சினிமாவின் அப்டேட்டட் அறிவுப்பாலமாக இருப்பது கமல் மட்டுமே. சில குறைகள், விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்சினிமாவின் உண்மையான கதாநாயகன் கமல் மட்டுமே.யெஸ் தி ரியல் "ஆளவந்தான்"
   
 

11 comments:

  1. அருமையான பதிவு. படித்துக் கொண்டே வரும்போது K.B. கமல் நாகேஷ் படத்தைப் பார்த்தவுடன் சட்டென்று என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.

    நான் நேற்று ஒரு ட்வீட் போட்டேன்.https://twitter.com/amas32/status/513701883894984706
    உங்கள் இதயம் கமலிடம் உள்ளது. அதனால் தான் இவ்வளவு அருமையாக ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்கள்.

    வாழ்த்துகள் :-)

    amas32

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !! கிட்டத்தட்ட அது உண்மைதான் மேடம் :))) உங்க கணிப்பு சரியே சின்ன வயசுல இருந்த ஈர்ப்பு இப்பவும் குறையல :)))

      Delete
  2. How come he can copy other person's intellectual until and unless give them a credit. Will you be calm if some one copy your writings and made some changes and publish under her/his name.

    ReplyDelete
  3. Apart from this thing he is a gem of indian cinema.

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு தெனாலி. இன்னும் இவரை பற்றி கூறிக்கொண்டே போகலாம்.
    நல்ல ரசிகர். முதற்கண் இடைவிடாமல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் எண்ணம். வாழ்வார் பல்லாண்டு சாதிப்பார் இன்னும் பல.

    அவரின் படைப்புகள் பெரும்பாலும் வெகுஜன மக்களிடையே விலகியே இருந்து வந்ததிலும், ஒரு குறிப்பிட்ட ஸ்டாண்டர்ட் பீபிள்களுக்கு மட்டுமே என்பதிலும், குடும்ப வாழ்க்கை நன்கு அமையாததிலும் என்போன்றோருக்கு வருத்தமே.

    நன்றி தெனாலி. வளர்க உங்கள் பணி

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார்!!! அவருடைய படங்கள் வெகுஜனங்களை சென்று சேரவில்லை என்ற உங்களின் வருத்தம் சரியே... அவரை பற்றி தினம் எழுதினாலும் தீராது என்பதே உண்மை :))))))

      Delete
  5. கலைஞானியை பற்றிய ஆழமான அலசல்!!!

    ஆனா
    //கமலுக்கு கடவுள் பக்தி இல்லை ஆனால் குரு பக்தி நிறைய உண்டு.பாலச்சந்தரின் மீது கமல்ஹாசனின் மரியாதை வியக்கதக்க ஒன்று இந்த விசயத்தில் கமல்-ரஜினி இருவரும் நேர்க்கோட்டில் இருப்பார்கள்.//

    இதில் கொஞ்சம் முரண்பாடு இருக்கு...

    கேபியின் மகன் சமீபத்தில் இறந்த போது கமல் மட்டுமே சென்றார் ( 3 படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது )...ஆனால் ரஜினியோ சூட்டிங் பிசி என்று கூறி செல்ல வில்லை...ஆனால் அவரால் "ஐ" பட ஆடியோ ரிலீஸுக்கு மட்டும் செல்ல முடிகிறது...ரஜினிக்கு குருபக்தி இல்லை என்பதை அவரே காட்டிவிட்டார்

    ReplyDelete
  6. Excellent read !! Its overwhelming to come across such articles doing total justice to Kamal's excellence. As his ardent fan for decades, many thanks to you :)

    ReplyDelete