Tuesday, 29 October 2013

வலி

        வலி  உடலில் காயம்படும் போதும் உறவில் காயம்படும் போதும் உண்டாகிறது ... விபத்தினால் ஏற்படுவது தாங்கி கொள்ளமுடியாத வலி. ஏதாவது உடல் குறைபாட்டினால் செய்கிற ஒவ்வொரு செயலிலும் வலி ஏற்படுகின்ற மனிதர்களை சந்தித்திருக்கிறேன். உதாரணத்துக்கு நான் 
பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது ஒருவர் பழைய "சன்னி" வண்டியை ரொம்ப நேரமாக கிக் செய்துகொண்டிருந்தார் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை .அப்பத்தான் கவனிச்சேன் ஒரே கால் மட்டும்தான் ஓரளவுக்கு நல்லா இருக்கு ,அந்த கால் பெருவிரலில் மட்டுமே வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.அந்த பெருவிரல் வழக்கத்திற்கு மாறாக மிக பெரியதாய் அவருக்கு இருந்தது.. பிறகு நான் வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்தேன். .அப்போது வந்த ஆச்சர்யம் "நம்மால செருப்பு போடாத வெறும் காலில் கூட வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியலையே ,இவரு எப்படி வலியை தாங்கிட்டு பெருவிரலில் மட்டும் ஸ்டார்ட் செய்கிறார்,அந்த மனஉறுதி எங்கேயிருந்து வந்திருக்கும் " இப்படி வலிகள் குறித்த கேள்வி சமீபத்தில் மனதில் உழன்று கொண்டிருந்தது அதையும், சமீபத்தில் என்னை பாதித்த வலிகள் குறித்த தகவல்கள் ,அனுபவங்களையும்  பதிவு செய்திருக்கிறேன்....

வலிகளின் மீதான என் முதல் ஆச்சர்யம்
        பகவான் ரமணர் குறித்ததாகும்...பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவருக்கு வந்திருந்த கேன்சர் கட்டியை நீக்கும் ஆபரேசனுக்கு ஒத்துக்கொண்டார்...இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த ஆபரேசனுக்கு அவருக்கு மயக்க மருந்துகள் எதுவும் கொடுக்கபடவே இல்லை..அவர் ஆபரேசனை புன்முருவலுடன் கவனித்துக்கொண்டிருந்தார்.
பிறகு அவரிடம் இதுபற்றி கேட்டபோது "இந்த உடல் வேறு... நான் வேறு... வலி வேறு..வலியை கவனித்தேன் காணாமல் போய்விட்டது" என்றாராம்.


வலிகளின் மீதான என் இரண்டாவது ஆச்சர்யம்
         விகடனில் வந்த மதனின் கேள்வி பதில்களில் வலிகள் குறித்த கேள்விக்கு மதன் சொன்ன பதில் " வலி இருப்பதால் தான் உங்கள் உடலில் சிறு காயம்பட்டால் கூட அந்த இடத்தை கவனித்து மேலதிக பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம்.இல்லையெனில் நம் கையை ஒருவர் வெட்டிவிட்டு போனால் கூட கவனிக்காமல் விட்டு அதிக ரத்தப்போக்கினால் மரணமடைந்து விடுவோம்...எனவே வலி என்பது "வரம்" என்று முடித்திருந்தார்.  


வலிகளின் மீதான என் மூன்றாவது ஆச்சர்யம்
           ஜெயமோகனின் "அறம்".அதில் வரும் யானை டாக்டரில் செடிகளின் ஒவ்வாமையால் வலி ஏற்பட்ட DFO ஆஃபீசரிடம் டாக்டர் சொல்லுவதாய் வரும் "ஒண்ணுபண்ணுவோமா? சொறியாமல் இருக்க முயற்சிபண்ணுங்க. அரிக்கும், அந்த அரிப்பை கூர்ந்து கவனியுங்க. என்ன நடக்குதுன்னு பாத்துண்ட்டே இருங்க " ...


            ஒரு கட்டத்தில் ஆஃபீசர் சொல்வார் "ஆமா, பசுவுவுக்கு பிரசவம் ஆறதை பாத்திருக்கேன். கண்ணைமட்டும் உருட்டிக்கிட்டு தலைய தாழ்த்தி நின்னுட்டிருக்கும்…’ யானை டாக்டர்- ‘ஆமா அவங்களுக்கு தெரியும், அதுவும் வாழ்க்கைதான்னு….மனுஷன்தான் அலறிடுறான். மருந்து எங்க மாத்திர எங்கன்னு பறக்கிறான். கைக்கு அகப்பட்டதை தின்னு அடுத்த நோயை வரவழைச்சிடறான்…மேன் இஸ் எ பாத்தடிக் பீயிங்...." என்பார்.


            அறத்திலேயே "பெருவலி" யில் தண்டுவட கேன்சரினால் பாதிக்கப்பட்ட கோமல் சுவாமினாதனிடம் ஜெயமோகன் கேட்பதாய் வரும்  ‘வலிக்கலையா சார்?’ ‘ஜெயமோகன், இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டுது. எப்ப பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ராத்திரியிலே திடீர்னு முழிச்சுண்டு படுத்தி எடுத்திரும். ஆனா இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேலே ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம், என்ன?’ என்பார் கோமல்


          ஜெயமோகன் சொல்வார் "வலி எப்டி இருக்கு?’ என்றேன். ’முந்தாநாள் ஞாநி வந்திருந்தார். இதையேதான் கேட்டார். அந்த கதவை திறந்து இடுக்கிலே கட்டைவிரலை வை. அப்டியே கதவை இறுக்கமூடி அழுத்தமா புடிச்சுக்கோ. அப்டியே நாளெல்லாம் வச்சுக்கோ. அப்டி இருக்குன்னேன்"-கோமல்...இந்த வலி குறித்து படிக்கையில் நம் விரலும் கதவிடுக்கில் மாட்டிய உணர்வை பெற்றிருக்கும் ,,,

 
            சென்ற கோடையில் வீட்டுக்கு நொங்கு வாங்க சென்றிருந்தேன் எனக்காக நொங்கு சீவிக்கொண்டிருந்தார்   வேகமாக சீவும்போது அருவாள் அவருடைய பெருவிரலின் சதையை வெட்டி ருசி பார்த்துவிட்டு கீழிறங்கியது..ரத்தம் .....அவர் உடனே நொங்கு சீவும்போது வரும் நீரை துடைப்பதற்கு வைத்திருந்த துணியை கிழித்து விரலை சுற்றி கட்டிக்கொண்டார் ..அவரின் மனைவியிடம் லேசான பதற்றம் ..நான் "ஏங்க டாக்டர் கிட்ட போகலையா"ன்னேன் ..."இந்த நொங்க இன்னைக்கி வித்து காசாக்கினாத்தான் நம்ம பொழப்பு ஓடும் இத அப்புறம் பார்த்துக்கலாம் சார்" என்றார் ..எனக்கும் வலித்தது .....


          வலியை தீர்மானிப்பது எதுவென தெரியவில்லை பணமா.... மனமா ...
உடலா ...என பட்டியலிட எனக்கு தெரியவில்லை .பெருவலியை சுமந்து கொண்டும், அதை கடந்துசென்றும் ஏராளமானோர் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.நாம் இங்கு "லேசான காய்ச்சலுக்கே " லீவ் எடுத்துக்கொண்டு போய் டாக்டரை பார்த்துவிட்டு வருகிறோம்.அதை விட்டுத்தான் பார்ப்போமே என்று நினைப்பதில்லை ...வலியை தாங்கவும்  பழகிக்கொள்ளவேண்டும்...பிறகு சாதாரண விஷயத்துக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கையாவது குறையும் நம்மைவிட வலிகளை தாங்கிக்கொண்டு பிழைப்பவர்கள் நினைத்து நமக்கு ஏற்படுகிற பிரச்சனைகளை,வலிகளை எளிதில் கடந்துபோகிற மனோதிடம் பிறக்கும். இந்த  உலகை இயக்குபவர்கள் பெரும் வலிகளை  சுமந்து கடந்தவர்களே .....அவர்களின்றி அமையாது உலகு .......
         

6 comments:

  1. வலி பற்றிய உங்கள் பகிர்வு நன்று! வலியில்லா வாழ்க்கை இந்தப் பூமியில் பிறந்த யாரொருவருக்கும் கிடையாது. விகிதாச்சாரங்கள் மாறும். வலியைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் ஆளாளுக்கு மாறும். பேப்பர் கட் கூட ஒருவருக்கு வலிக்கும், காலின் மேல் ஸ்கூட்டரின் டயர் ஏறிச் சென்றாலும் அடுத்த வேலையைப் பார்க்க செல்பவர்களும் உண்டு.

    கறை நல்லது என்பது சோப்பு விளம்பரத்துக்குப் பொருந்தும், அது போல வாழ்வில் வலி வருவது மற்றவரின் துன்பத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

    என் தந்தை வாழ்க்கையில் பல வருடங்களை வலியோடு கழித்தவர், அவரும் ரமண மகரிஷியைப் போல் உடலில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளக் கற்றுக் கொண்டார். அது எளிதன்று.

    உடல் வலியோடு மன வலியும் மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். எது அதிகக் கொடுமையானது என்று தெரியாது. ஆனால் அதை எல்லாம் தாண்டி வாழ்கையை வாழ முயற்சிக்கும்போது நாம் வாழ்க்கையை வென்றவர்கள் ஆகிறோம்.

    amas32

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு விரிவாக விமர்சனம் செய்ததற்கு நன்றி ..உங்கள் தந்தையும் அவ்வளவு மனவலிமை கொண்டிருந்தார் என்பது அவர் அவ்வளவு நல்ல வாழ்வு வாழ்ந்திருக்கிறார் என்று காட்டுகிறது. தங்களின் அனுபவத்தையும் கருத்துகளையும் இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!!

      Delete
  2. அருமையான பதிவு ... வலிகள்தான் நம்மை வலிமையானவர்களாக மாற்றுகின்றது என்பதுதான் எத்தனை உண்மை!
    வாழ்த்துகள்:) -@shanthhi

    ReplyDelete
  3. நன்றிகள் ...எனக்கு காய்ச்சல் என்றால் விட்டு பார்ப்பேன் ..ஆனால் மகனுக்கு என்றால் அன்றே மருத்துவரிடம் சென்று விடுகிறேன் ...பார்க்கிறேன் ..என் மகனே அவனை கவனித்து கொள்கிற வயது வந்த பின்னர் வலிகளை தாங்கிகொள்ள சொல்வேன்..விட்டுபார்ப்பேன்

    ReplyDelete