வார இறுதிகளில் ப்ரணவ்-வுடன் திருச்செங்கோட்டில்
இருந்து அப்பா அம்மா வை
பார்க்க ஈரோட்டுக்கு டூவீலரில் போகும்போது அவன் போரடித்து தூங்காமல்
இருக்க அவனை பாட சொல்லி
கூட பாடிக்கொண்டேபோவேன்.. பொதுவாக விஜய்
சிவகார்த்திகேயன் பிறகு அப்போது ஹிட்டாக
இருக்கும் பாடல்களை யும் அவனே பாடுவான். போனவாரம்
இப்படி போனபோது ஒரு பாடலை
பாடினான் "சரியா கேட்கல ,என்ன
சாமி பாடுற " எனக்கேட்க இன்னும் நன்றாக உரக்க
பாடினான் "கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு" என
ஆரம்பித்து அந்த பாடலின் பெரும்
பகுதி பாடிவிட்டான் தொடர்ந்து "விருவிருமாண்டி" பாடலையும் பாடினான்.இந்த படம் ராஜாவின்
கோல்டன் பீரியட் முடிந்த பின்னர்
வந்தது.ஆனாலும் இப்போதும் உயிருப்புடன்
இருக்கு. மிக ஆச்சரியத்துடன் பாடியபடி
சந்தோசமாக வண்டியோட்டினேன் ..எப்படி அவனுக்கு இந்த
பாடல் தெரிந்திருக்குமென யோசிக்க மனைவியின் தம்பி
படம் பார்க்க அவனுடன் சேர்ந்து
படம் பார்த்து ப்ரணவ் க்கு பிடிச்சிருச்சுன்னு
புரிஞ்சிகிட்டேன் விருமாண்டி வந்து 5 ஆண்டுகள் கழித்து
பிறந்தவன் ப்ரணவ் .அவனையும் இப்பட
பாடல்கள் வசீகரிக்கிறது.அந்த துள்ளல் கேட்கும்
அனைவரையும் தொற்றிக்கொள்கிறது விருமாண்டி பாடல் பற்றி பேசும்போது
ஒரு சின்ன பிளாஷ் பேக்
கமலுடன் கம்போசிங்கில் இருக்கும் இளையராஜா "கொம்புல பூவ சுத்தி" பாடலை ரிக்கார்டிங் செய்யும்போது எழுந்து உற்சாகமாக ஆடிக்கொண்டேயிருந்தார். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜா அப்படி ஆடிப்பார்த்தேன் அப்பொழுதே தெரியும் இந்த பாட்டு ஹிட்"ன்னு என்று சொன்னார் கமல்.அந்த உற்சாகம்தான் மகனையும் ஆக்கிரமித்திருக்குமென நினைக்கிறேன்..கேட்கும் எல்லோருக்கும் உற்சாகத்தை கடத்தி விடுவதுதான் ராஜ இசை ..விருவிருமாண்டி பாடலை இளையராஜா திப்பு கமல் பாடியிருப்பார்கள் வழக்கமான குரல் இல்லாமல் குரலை மாற்றி பாடி அசத்தினார்கள்.கமல் -ராஜா வை பொறுத்தவரை ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பிளாஷ்பேக் உண்டு.ஒரு படத்துக்கு ஒரு கிராமத்து மெலடி கேட்கிறார் கூடவே "ஏ தில் தீவானே" என்ற உதாரண ஹிந்தி பாட்டை சொல்கிறார் கமல் அந்த மெட்டில் இல்லாமல் அதற்கு அருகாமையில் ஒரு பாடலை "தன்னானே தானானா" என ஒரு டியுன் போட "இது எனக்குதான்" என கமல் துள்ளி குதிக்கிறார்.அதுதான் "இஞ்சி இடுப்பழகி" இது குறித்து பல இண்டர்வியுவில் கமல் ராஜா சொல்லியிருக்கிறார்கள்.ராஜா கமல் பாடல்கள் பெரும்பாலும் ஏன் ஹிட் அடிக்கிறது என்றால் ராஜாவிடம் என்ன கேட்டு பெற வேண்டும் என்பது கமலுக்கு தெரியும் இந்த காம்பினேசனின் .பெரும்பானமையான பாடல்கள் புலிப்பால் தான். ராஜா வின் இசை எல்லோரையும் போல என் தந்தையையும் என்னையும் பின் என் மகனையும் வசீகரித்து காலங்களை கடந்து பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது அது என் மகனின் பிள்ளைகளுக்கும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை ..அன்று கூட தென்றல் வந்து தீண்டும் போது நான் கேட்டபோது கேட்டவன் நாள் முழுவதும் முணு முணுத்தபடி இருந்தான் .இசை அரசன் இளையராஜா என சொல்வதும் குறைவான வார்த்தையே.
இப்ப விருமாண்டி க்கு வருவோம் அன்பே சிவம் என்ற சிறந்த படத்தின் கவுரமான தோல்விக்கு பிறகு மீண்டும் கமர்சியல் ரூட் பக்கம் போகாமல் தைரியமாக ரசிகர்களை நம்பி ஆரம்பித்ததே "சண்டியர்" கமலும் பிரச்சனையும் ரெட்டை குழந்தைகள் அல்லவா ஜாதி கட்சிகள் கிளை பரப்பிய காலம் அது உடுமலையில் ஒரு பெண்ணிடம் அசிங்கமாக நடந்து அதனால் செருப்படி வாங்கியவனும் அவன் அடியாட்களும் "சண்டியர்"ன்னு பேர் வெச்சா வன்முறை அதிகமாகும் ஜாதிப்பிரச்சனை அதிகமாகும் என சொல்லி சூட்டிங் நடைபெற்ற மதுரை லொகேசனில் பிரச்சனை செய்தார்கள்.அப்போது மற்றவர்களும் அமைதி காத்தார்கள்.கமல் ,ஜெ வை சந்திக்கபோனார் யார் வந்தாலும் உட்கார்ந்தபடி வரவேற்கும் ஜெ எழுந்து வந்து கமலை வரவேற்றார் என்று தகவல்.ஜெ பேர் ,லொகெஷன் மாற்றவும் அங்கு போலீஸ் பாதுகாப்புக்கும் பரிந்துரை செய்தார் .அப்போதுதான் கமல் வாழ்வில் சிம்ரனுக்கு பிறகு கவுதமி வந்தார் அதுவே அவர் குடும்பத்தில் சில அதிர்வலை களை உண்டாக்கிய நேரம் ,பெயர் வைக்காமலேயே படத்தை கேம்பகோலா மைதானத்தில் மிகப்பெரிய கிராமத்து செட்டில் ஆரம்பித்தார். அதுதான் விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தான் செட்டை சென்னையில் உருவாக்க காரணம் என்றும் சொல்லலாம்.இது தவிர படத்தில் பைட் மாஸ்டராக அவரின் ஆஸ்தான் விக்ரம் தர்மா இல்லாமல் அவரின் அஸிஸ்டெண்ட்முருகன் என நினைவு ( தேவர் மகனில் சாந்து பொட்டு பாடலுக்கு முன் கமலிடம் அடிவாங்குபவர் ) புக் செய்தார் .பிறகு அவரை நீக்கிவிட்டு மீண்டும் விக்ரம் தர்மா வையே ஒப்பந்தம் செய்தார் ஏமாற்றி விட்டார் கமல் என பேட்டி தந்தார் அவர் இப்படி எல்லா திசைகளிலும் பிரச்சனை விருமாண்டியில்.
கமலின்
குணா படத்தின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பால்
அந்தப்பட கதாநாயகியின் பெயரை தனக்கு வைத்துக்கொண்ட
கமலின் தீவிர ரசிகை அபிராமி
தான் ஹீரோயின் (அபிராமியின் நிஜப்பெயர் திவ்யா ) .நிலம் சார்ந்த கொலைகள்,
மனைவியை கொன்ற கயவர்களை பழிவாங்கும்
கதைதான் களம் .அதை எடுத்தவிதத்தில்
மிரட்டியிருந்தார் கமல்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு
ஆங்கிளில் கதை சொல்வது தமிழில்
ஏற்கனவே அந்த நாள் படத்தில்
வந்திருந்தாலும் தமிழில் இது இரண்டாவது
சிறப்பான முயற்சி எனலாம்.தேவர்
மகன் கமலின் திரைக்கதைக்கு மரியாதை
செய்த படமென்றால் விருமாண்டி கமலின் மேக்கிங்-க்கு
புலிப்பாய்ச்சல் கொடுத்த படம் .கமல்
டைரக்ட் செய்த மூன்றாவது படம்
.இதில்தான் தமிழ்சினிமாவின் சமகால திறமையாளர்களான பசுபதி
,சண்முகராஜன், சுஜாதா என பலர்
அடையாளம் காணப்பட்டார்கள். கதாபாத்திர தேர்வும் அப்படியே நிஜத்தில் வீட்டில் தெலுங்கு பேசும் நெப்போலியன் நாயக்கர்
கேரக்டரில் ஒப்பந்தமானார் ஆனால் அந்த கேரக்டருக்கு
முதலில் கேட்கபட்டவர் சத்யராஜ். நெப்போலியனின் மகனாக வருபவர் என்
மாமா பையன்.அவர் நன்றாக
தெலுங்கு பேசக் கூடியவர். அந்த
பாட்டி முதற்கொண்டு பெரும்பான்மையாக அதே ஜாதி சார்ந்தவர்களே
ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.ஹேராம் போல இந்தப்படமும்
லைவ் ரெக்கார்டிங்தான் .மொத்தமாக படத்தை பற்றி பார்க்காமல்
ஒரு சில பகுதிகளை மட்டும்
பார்க்கலாம்.
தமிழ்சினிமாவில் ஜல்லிக்கட்டு காட்சிகளில் சுற்றிலும் கம்பு கட்டி தடுப்பு கட்டியிருக்கும் அங்கு வரும் காளை மாடு சண்டையிட்டோ பேசியோ பாடியோஅடக்கப்படும்.ஆனால் விருமாண்டியில் உண்மையான வாடிவாசலின் தன்மையை ஜல்லிக்கட்டு களத்தை கொண்டுவந்தார், பேராசிரியர் கு ஞானசம்பந்தன் கமெண்ட்ரி ஆக அறிமுகமானார்.சீறிப்பாயும் மாடுகளும் தாவிப்பிடிக்கும் வீரர்களுமாக ஜல்லிக்கட்டை அறிந்திராத என் போன்ற மக்களுக்கு புது அனுபவம்.இந்த படத்துகாக காளையை வாங்கி வளர்த்தினார் கமல் தேவர் மகனில் சிலம்புக்கும் அன்பே சிவத்தில் தவிலுக்கும் பயிற்சி எடுத்துக்கொண்டது போல இதில் ஜல்லிகட்டுக்கும் பயிற்சி எடுத்துக்கொண்டார் .பெர்பெக்சனின் இன்னொரு பெயர் கமல் அல்லவா.ஜல்லிக்கட்டு காட்சிக்கு பிறகே கொம்புல பூவ சுத்தி பாட்டு வரும் .அத இப்ப DTS ல் கேட்டாலும் அதிரும். திருவிழாக்களில் இடம் பிடிக்கும் வாத்தியக்கருவிகளை கொண்டே அந்தப்பாடல் இசையமைக்கப்பட்டிருக்கும். விருவிருமாண்டி பாடலும் அதே ரகம்தான். இதில் கமலின் சமகால படங்களில் சிறந்த டூயட்டான "உன்ன விட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல" இடம் பிடித்தது.பாடலின் ஆரம்ப வரிகளை இளையராஜா எடுத்துக்கொடுக்க அதை மிகச்சிறந்த பாடலாக வடித்தார் கமல்."நூறு சென்மம் நமக்கு போதுமா வேற வரம் ஏதும் கேட்பமா சாகாவரம் கேப்போம் அந்த சாமிய "என்னும் வரிகளில் மனைவியின் மீதான ஒட்டு மொத்த காதலையும் சொல்லியிருப்பார் கமல்.படத்தின் ரீரிக்கார்டிங் குறித்து தனியே சொல்ல தேவையில்லை ராஜா என்ற பெயரே போதுமானது .
இதில் கமலுக்கு பாட்டியாக வரும் எஸ் என் லட்சுமி யின் வயிற்றில் உற்சாக மிகுதியில் ஊதி விளையாடுவார் கமல்.நான் படத்தில் பார்த்தபோது இப்படில்லாம் செய்வார்களா exaggerate என நினைத்தேன்." எம் ஜி ஆர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன்" புத்தகத்தில் படித்தது எம் ஜி ஆர் உற்சாகமாக இருக்கும் போது தன் தாயிடம் இதேபோல் விளையாடுவார் அப்படி ஒரு நாள் விளையாடாமல் இருக்க எதோ பிரச்சனை என அறிந்து எம் ஜி ஆர் க்கு ஆறுதல் சொல்கிறார் அவரின் அம்மா சத்யபாமா. எவ்வளவு அழகாக எம் ஜி ஆர் வாழ்வின் நிகழ்ச்சியை கமல் இதில் சேர்த்திருக்கிறார் பாருங்கள்.படத்தில் அதிகமாக போனது அபிராமியுடனான காதல் காட்சிகள் மட்டுமே ஆனாலும் பின்னால் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த காட்சிகளும் நெருக்கங்களும் தேவைப்பட்டது எனலாம் .இந்த படம் குறித்து பசுபதி சொன்னார் இதில் நான் வில்லன் இல்லை வில்லங்கதனமான ஆள் என்று கண்களில் நடிப்பும் குரூரமும் ஒரு சேர கொப்பளிக்கும் அந்த வில்லங்கம் யப்பா கமல் படங்களில் வில்லன்களுக்கு கைதட்டல் கிடைக்கும் அப்படி காக்கிசட்டை சத்யராஜ் தேவர் மகன் நாசர் வரிசையில் விருமாண்டி பசுபதியும் இணைந்தார் .கமல் கொல்ல வரும்போது மகனை கேடயமாக பயன்படுத்தி தப்பிக்கும் பசுபதியை அவரது மகனே "விருமாண்டி அப்பனை விடாத அவனை கொல்லு " என கத்தியபோது தியேட்டர்கள் அதிர்ந்தன.
நல்லம்ம
நாயக்கர் நெப்போலியனிடம் அடைக்கலம் தேடி கமல் வந்தபின் அங்கேயும் தேடி வரும் பேய்க்காமனிடம் இருந்து தப்பிக்க ஒரு டெம்போ வின் அடியில் தப்பித்து போவார் சும்மா போவது போல கூட அதை எடுத்திருக்கலாம் டெம்போ வெளியே போகும் போது கமலின் முதுகுப்பகுதி அங்கிருக்கும் ஸ்பீட் பிரேக்கரில் பட்டு அடிபடும் இதெல்லாம் பெர்பெக்சனின் சிறு உதாரணங்கள் . விருமாண்டி
க்கு முன் துப்பாக்கியோ ரைபிளோ எதில் சுட்டாலும் உடலில் ஒருபாகத்தில் ரத்தம் வரும் விருமாண்டியில் நெப்போலியன் உபயோகிக்கும் போது தோட்டாவில் உள்ள பால்ட்ரஸ் தெறித்து பரவுவது பதிவு செய்யப்பட்டிருக்கும்.நெப்போலியனை சுட்டபிறகு அந்த புல்லட் ஓட்டைகளின் வழியே வரும் ஒளி வன்முறையை காட்சிப் படுத்துதலின் சிறந்த உதாரணம். இரண்டு விரலில் அருவாளை வீசுவதும் OAK சுந்தரை
மிரட்ட நெற்றியில் கோடுகிழிப்பதுமாக வன்முறையும் மேக்கப் லெவலும் செமையா இருக்கும் .அதேபோல் நிராயுதபாணியாக வரும் கமல் மாட்டை ஆயுதமாக பயன்படுத்தி உள்ளே நுழையும் காட்சி கிராமத்து கதையில் பைட் சீன் எப்படி வைக்கலாம் என்பதற்கு உதாரணம் .
அடுத்து ஜெயில் கலவரம் காட்சி ஆயுதம் என தனியாக இல்லாமல் அங்கே நிஜமாக கிடைக்கும் ஆயுதங்களையே உபயோகப்படுத்தியிருப்பார் உதாரணமாக பசுபதிக்கு வார்டன் கொடுப்பது அரிசி மூட்டையை குத்தி அதன் தரம் பார்க்கும் இரும்பு..பசுபதி ஓடி வரும்போது பைப் ராடுடனும் மறுகையில் பக்கெட்டுடன் வருவார் அதுதான் அவர்களுக்கு ஆயுதம் ஜெயில் வேலி கம்பிகளை எடுத்து வேல் போல் வீசுவது உடைந்த டாய்லட் டை மரத்தில் வைத்து வீசுவது என நிஜ கலவரம் போலவே படமாக்கபட்டிருக்கும். கமலிடம் நாசர் துப்பாக்கியை கொடுக்கும் போது "எனக்கு இதல்லாம் தெரியாதுய்யா" என்பார் நாசர் "இதெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கறதுதான் நல்லது" என்பார் கலவரத்திலும் அன்பை பரப்பும் வார்த்தைகள் - வசனம் கமல்ஹாசன் .அடுப்பை உபயோகித்து ஜெயில் கேட்டை உடைத்து வரும் சண்டை காட்சிகள் தமிழ் சினிமாவின் டாப் 10ல் வரும் .கிளைமேக்ஸ்ல் நிராயுதபாணி கமலை பசுபதி கொல்வது போல வர டக்குன்னு விரலை எடுத்து தொண்டை குழியில் ஓட்டை போடுவார் அதீத வன்முறையின் உதாரணம் இது பேட்ரியாட் கிளைமேக்ஸ் சாயல் இருந்தாலும் மெல்கிப்ஸன் கத்தியில்தான் கொல்வார் கமல் விரலில் .
ஒட்டுமொத்த படமும் ரத்தத்தில் குளித்த பின் இதயத்தை தொடும் "மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேக்குறவன் பெரியமனுஷன்" என்ற ஆயுள் முழுமைக்கும் பொருந்தும் வசனம் மீண்டும் வரும் .இதை எல்லார் மனதிலும் எழுதி வைத்துக்கொண்டால் நாட்டில் பகை ,கொலை என்பதே இருக்காது ,ஏன் டைவர்ஸ் கூட குறையும் மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து படம் முடிவடையும்.இந்த படத்தின் மேக்கிங்தான் பின்னாளில் நான் பருத்திவீரன் எடுக்க காரணம் என்றார் அமீர் .ஒரு இயக்குனராக கமல் தன் இருப்பை மீண்டும் நிரூபித்த படம் விருமாண்டி. விருமாண்டி தமிழ் சினிமாவின் மேக்கிங்கு ஒரு மைல்கல் என்றால் மிகையில்லை..கமலை பொறுத்தவரை அவரின் பயணத்தில் இது மற்றுமொரு படிக்கட்டே ஆனால் தங்க படிக்கட்டு.