Wednesday, 29 March 2017

ரஜினிகாந்த் - The Real Super Star

                                           


              ரஜினிகாந்த் என்ற பெயரை 70 இறுதிகளிலும் 80 களிலும் பிறந்த குழந்தைகள் மிக சாதாரணமாக உச்சரித்திருக்க மாட்டார்கள்.அதில் ஒரு ஸ்டைல் கலந்திருக்கும்.அப்போது பிறந்த குழந்தைகள் டீபால்டாக ரஜினி ஃபேன்தான்.பிறகு வளர்ந்துதான் அவரவர் ரசனைக்கு ஏற்ப கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் என மற்றவர்களின் ஃபேன் ஆவது..இது என்வரையிலும் உண்மை.நான் 7 வயதுவரை ரஜினி ஃபேன்தான்..பிறகுதான் கமல் விசிறி ஆனது...ஆனாலும் ஒவ்வொரு ரஜினி பட ரிலீசின் போதும் உள்ளே இருக்கும் ரஜினி ரசிகன் அட்டெண்டன்ஸ் போட்டுவிடுவான்.எம் ஜி ஆர் சிவாஜி நடிக்க ஆரம்பித்தபின் மிக அழகாக சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் ஹீரோக்கள் அதை மாற்றி கருப்பாக இருந்த ரஜினி என்ற இளைஞன் எல்லோரையும் தன் மேஜிக் நடிப்பால் வித்தியாச வில்லதனத்தால் வசீகரித்தான் .
                    ரஜினி ஒரு நாளில் நடிகன் ஆகிவிடவில்லை,ஆரம்பம் தொட்டே நடிகன்தான் .ரஜினி சிறுவயதில் இருந்து ஸ்டேஜ் டிராமாக்களில் நடித்துவந்தார் அங்குதான் அவரின் நடிப்புக்கான விதை ஊன்றப்பட்டது. தாயில்லா ரஜினிக்கு நண்பர்களே புகலிடம் .அதுவும் வயதுக்கு மீறிய நண்பர்கள் அவர்கள் மூலமாக கற்றதும் பெற்றதும் ஏராளம்.அண்ணன் வீட்டில் சும்மா உட்கார்ந்து சோறு சாப்பிடக்கூடாது என்பதற்காக கண்டக்டர் வேலைக்கு போனார்.ஒரு கட்டத்தில் மனம் ஒட்டாமல் வேலை செய்யபிடிக்காமல் சென்னைக்கு கிளம்பினார்.அவருக்கு நண்பனாக ஸ்பான்சராக இருந்தது அவருடைய நண்பர் ராஜ்பகதூர்தான் ,சிவாஜிராவ் சென்னைக்கு வந்தார்.


                ஃபிலிம் இண்ஸ்டியுட்டில் சேர்ந்த ரஜினிக்கு பாடம் எடுத்தவர்களில் முக்கியமானவர் சித்தலிங்கய்யா கன்னடத்தில் மிக முக்கிய இயக்குனர் நடிகர் முரளியின் தந்தை. ரஜினி மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் பாலசந்தருக்கு ரஜினியை ரெக்கமெண்ட் செய்ததும் அவர்தான் என்ற தகவலும் உண்டு.எப்போதும் ஒரு கருத்து உண்டு ரஜினிக்கு உலக சினிமா குறித்து அறிவு கிடையாது ,எதோ மேலோட்டமாக நடிக்கிறார் என.இதே குற்றசாட்டு எம் ஜி ஆர் மீதும் உண்டு.பிலிம் இண்டியுட்டில் ரஜினி பார்த்தது உலக சினிமாக்களே..ரஜினியின் நடிப்பு மேலோட்டமான நடிப்பு இல்லை எது தேவையோ அது இருக்கும். விஜய் சொன்னது போல் "ஒரே டான் கேரக்டர்தான்  பில்லா-வில் ஒரு மாதிரியும் பாட்ஷா-வில் ஒரு மாதிரியும் கபாலி-யில் ஒரு மாதிரியும் வித்தியாசம் காட்டி அவருக்கு நடிக்க தெரியும்". இது தெரியாமல் நடந்த ஆக்சிடெண்ட் அல்ல ரஜினி எப்படி காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னை தகவமைத்துக்கொண்டார் என்பதற்கு சாட்சி. ஆங்கில பாணி அதிக அலட்டல் இல்லாமல் நடித்த ரஜினியை நடிக்க தெரியவில்லை என்ற ஒரே கமெண்ட்டில் கடந்து விடுபவர்களை என்னவென்று சொல்ல.எம் ஜி ஆரும் ஆங்கில படங்களையே அதிகம் விரும்பி பார்ப்பார் அவர் கடைபிடித்ததும் ஆங்கில சினிமா பாணி நடிப்பே..ஆங்கில படங்களை எம் ஜி ஆருக்கு மொழி பெயர்த்து சொல்லும் வேலையை சிரமேற்கொண்டு செய்துவந்தவர் நடிகர் கோபாலகிருஷ்ணன்.. அய்யய்யோ எம் ஜி ஆர் தகவல்களுக்குள் போய்ட்டோம்..ரிட்டர்ன் டூ ரஜினி..


                     ஃபிலிம் இன்ஸ்டியுட்டில் உலக சினிமாக்கள் அதிகம் பார்த்த ரஜினிக்கு அங்கு அதிகம் திரையிடபட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகர்தான் ரஜினியை ஈர்த்தார் அவர்தான் சிவாஜி.ரஜினியின் ஸ்டைலுக்கு மூலதனம் உத்தமபுத்திரன் வில்லன் சிவாஜிதான் என ரஜினியே குறிப்பிட்டிருக்கிறார்.. பிறகு ஸ்டைல் ஐகானாக ரஜினியை ஈர்த்தது சத்ருகன் சின்கா தான்.. சிவாஜியும் சத்ருகன் சின்காவும்தான் ரஜினியின் ஸ்டைல் ஐகான்கள்.தவிர அங்கு சிவாஜியின் படங்களை அதிகம் பார்த்த ரஜினி சிவாஜியின் ஃபேனாகத்தான் தன் படிப்பை முடித்தார்.இதுதான் பின்னாளில் ரஜினிக்கு எம் ஜி ஆரை பிடிக்காது என திரிக்கபட்டது..ரஜினி இன்னும் கூட சில விஷயங்கள் பேசும் போது எம் ஜி ஆரை பெருமையாக குறிப்பிடுவார் இயல்பாக அவர்மீது நல்லெண்ணம் இல்லாமலிருந்தால் அப்படி வராது.பிறகு பாலசந்தர் பார்வை பட்டு "சிவாஜிராவ் கெய்க்வாட்" ஆக இருந்தவர் ஒரு ஹோலி நாளில் "ரஜினி" ஆனது அனைவரும் அறிந்தது.ரஜினிக்கு நடிக்க தெரியாது என்று சொன்னால் நான் அவசரமாக மறுதலிப்பேன். கதாநாயகனாக நடித்த சமகால படங்களில் அப்படி தோணியிருக்கலாம் .ரஜினியின் நல்ல நடிப்பை பார்க்க  வேண்டு மெனில் அவரின் ஆரம்பகால படங்களே சிறந்த உதாரணம் அவர்கள், மூன்று முடிச்சு,பைரவி,காயத்ரி,புவனா ஒரு கேள்விக்குறி,தப்பு தாளங்கள், அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது என பல படங்கள்.எனக்கு பிடித்த ரஜினி படம் எதுவென்றால் முதலில் "புவனா ஒரு கேள்விக்குறி" யைத்தான் சொல்லுவேன் அந்த படத்தில் மென்மையான நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார் ரஜினி.கதாநாயகனக நடித்து வந்த சிவக்குமாருக்கு நெகடிவ் ரோல் வில்லனாக நடித்து வந்த ரஜினிக்கு பாசிடிவ் ரோல் என பிளான் செய்து எடுக்கபட்ட படம்தான் எனினும் ரஜினி அந்த கேரக்டரில் கலக்கியிருப்பார் .
                       ரஜினி முதலில் ஹீரோவாக நடித்த "பைரவி" படத்தை தாணுவே எடுத்ததுபோல் ஒரு பில்டப் ஒடிக்கொண்டிருக்கிறது..அதன் அச்சாணி கலைஞானம் ஆவார்..இது நம்ம ஆளு படத்தில் ஃப்ராடு அய்யர் கேரக்டரில் நடித்தவர்தான் திரு.கலைஞானம் அவர்கள்.நிறைய கதைகள் எழுதியும் தேவர் பட டிஸ்கசனுக்கு சென்றும் தேவரின் நல்ல அபிமானத்தையும் கொஞ்சம் பணத்தையும் சம்பாதிக்கிறார்.அவருக்கு சொந்த படமெடுக்க ஆசைவர பைரவி கதையை எழுதி தேவரிடம் சொல்ல நான் பைனான்ஸ் செய்கிறேன் நீ படமெடு என சொல்கிறார் தேவர்.கூடவே முத்துராமனையோ சிவகுமாரையோ  கதாநாயகனாக போட சொல்கிறார்.சரியென்ற கலைஞானம் குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க முடிவு செய்து அப்பொது வில்லனாக நடித்து கொண்டிருந்த ரஜினியை அதற்கு முன்பு அவர் பங்கு பெற்ற காயத்ரி படத்தின் மூலம் பெற்ற அனுபவத்தால் புக் செய்கிறார்.பிறகு அந்த படத்தில் தேவர் சொன்ன ஹீரோக்களை கலைஞானம் புக் செய்யாததால் பைனான்ஸ் தர மறுக்கிறார் தேவர்.சோர்ந்த கலைஞானம் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கதையை சொல்லி படத்துக்கு பைனான்ஸ் வாங்க முற்படுகிறார்.அப்படி சொல்லும்போது ஒரு இரவில் அவருக்கு தெரிந்த சில Distributors முன்பும் கதை சொல்கிறார். அதில் ஒருவரான "அப்துல் காதர்" கதையை கேட்டு "அண்ணே கதை பிரமாதம் இந்த படம் எனக்குதான் தரணும் அவருக்கு இப்போதே அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அவரது வில்லன் நடிப்பை மக்கள் ரசிக்கிறார்கள் அவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என நினைத்தேன் நீங்கள் நடிக்க வெச்சுட்டீங்க படம் கண்டிப்பா ஓடும்" என சொல்லி முதன்முதலில் 10000 ரூ கடனாக/அட்வான்சாக தருகிறார் படத்தை ட்ராப் செய்துவிடலாம் என்றிருந்த கலைஞானதுக்கு நம்பிக்கை பிறந்தது ( அந்த அப்துல்காதர்தான் பின்னாளில் "ராஜ்கிரண்" ஆனார் ).பின்னர் அதை கேள்விப்பட்ட பல Distributors ளும் பைனான்சியர்களும் பண உதவி செய்ய பைரவி வளர்ந்தது.அந்த படத்தை கேள்விபட்ட தாணு ரஜினியின் ரசிகர்கள் அதிகமாகி விட்டதை அறிந்து பிரம்மாண்டாமாக ரிலீஸ் செய்தார் (சென்னை உரிமம் என் நினைவு) ஸோ ரஜினியின் சம்பந்தி கஸ்தூரிராஜாவுக்கு வாழ்வளித்தது மட்டுமல்ல ரஜினிக்கும் மிக முக்கிய பிரேக்கை கொடுக்க காரணமாய் இருந்ததும் ராஜ்கிரண்தான். ஆனால் எங்கும் இதை குறிப்பிட்டு ராஜ்கிரண் பேசியதில்லை. தன்னை ஹீரோவாக போட்டு படமெடுத்த கலைஞானம் அவர்களை அருணாச்சலம் படத்தின் பார்ட்னர் ஆக்கி ஒரு பெரிய தொகையை கொடுத்தார்.அது கலைஞானம் அவர்கள் கடனில் இருந்து மீண்டுவர உதவியது.


                  தன் பேச்சை கேட்காமல் படமெடுத்த கலைஞானம் நஷ்டப்படப் போகிறார் என நினைத்து பைரவி படத்தை முதல்நாளே பார்த்த தேவருக்கு அதிர்ச்சி தேவரின் கணிப்பை பொய்யாக்கியிருந்தார் ரஜினி.கைதட்டலால் அதிர்ந்தது தியேட்டர்...தேவர் கலைஞானம் மூலமாக ரஜினியை கூப்பிடனுப்பி அதுவரை பெறாத அதிக சம்பளத்திற்கு புக் செய்கிறார்.ஆனால் சில தினங்களில் தேவர் இறந்துவிட ரஜினி தேவர் பிலிம்ஸ்க்கு நடித்து கொடுத்த படம்தான் அன்னை ஓர் ஆலயம்.ரஜினி தேவர் மீது வைத்திருந்த மரியாதை தான்  அதற்குபிறகும் நிறைய தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்க வைத்தது. தேவர்பிலிம்ஸ் நஷ்டப்பட்ட பிறகு தேவர் பிலிம்ஸ் கடைசியாக எடுத்த படம் தர்மத்தின் தலைவன் .அதில் சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்து தன் நன்றியை காண்பித்தார்.பிறகு தன் மகள் சவுந்தர்யா திருமணைத்தின் போதும் தேவரின் மகளுக்கு நிறைய பொருளதவி செய்தார்.ரஜினி தயாரிப்பாளர்கள் மீது வைத்திருந்த மதிப்பை அறிய ஆர் எம் வீரப்பனிடம் ரஜினி பேசியதை சுரேஷ் கிருஷ்ணா எழுதிய பாட்ஷாவும் நானும் புத்தகத்தில் காணலாம்.கமல் தன் படத்தில் ரசிகர்களின் ரசனையை முன்னோக்கி கொண்டு செல்வார் ,ரஜினி  தன் ரசிகர்களின் அப்போதைய பல்ஸை / ட்ரெண்டை  சரியாக கணித்து அதற்கேற்ப  படமெடுப்பார் ."பாட்ஷா"வும் அவர்தான் "கபாலி"யும் அவர்தான் .சந்திரமுகியை அடக்கிய வேட்டையனும் அவர்தான் .

                                      
                                        ரஜினியும் நானும் ஒரு இரவுப்பறவை என சாரு நிவேதிதா ( குமுதத்தில் வெளிவந்த தொடர் என நினைவு ) குறிப்பிட்டிருந்தார்.நான் தூக்கம் இல்லாமல் ஒவ்வொரு பாராக செல்லும் போது அப்போதுதான் ரஜினி சென்றார் என சொல்வார்கள்..பல நேரங்களில் அவரை ஒரே நாளில் வெவ்வேறு  பார்களில் பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஒரு ஸ்கூட்டர் ஒரு சொந்த வீடு இருந்தால் போதும் என்ற லட்சியதுடன் சினிமாவில் நுழைந்த ரஜினிக்கு திடீர் புகழ் அளவுக்கதிகமான பணம் நிறைய குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் கொடுக்க மனம் மாறிப்போனார் மீண்டார். காதல் தோல்வி வேறு..கமல் யாரை காதலித்தார் என அதிக மக்களால் நம்பப்படுகிறதோ அவரைத்தான் ரஜினி காதலித்தார் அந்த மயிலும் ரஜினியைத்தான் காதலித்தது.ரஜினி பெண் கேட்டு வீட்டுக்கு போக பெண் கொடுக்கலாம் என முடிவு செய்தபோது கரண்ட் கட் ஆக பெண் தர மறுத்து விட்டார் பெண்ணின் அம்மா.அன்று கரண்ட் கட் ஆனது ரஜினியின் நல்லதுக்கு தான் என்பது அதன் பிறகு 30 ஆண்டுகளை கடந்து பார்க்கும் போதுதான் தெரிகிறது.திருமணதிற்கு பிறகும் ஆன்மீகத்தில் கொண்ட நாட்டம் காரணமாக குடும்பத்தை பிரிந்து துறவு வாழ்க்கையை  மேற்கொள்கிறார். அப்போது சின்ன பெண்ணாக இருந்த ஐஸ்வர்யா மாமனார் விட்டில் பராமரிக்கபடுகிறார். இந்த பிரிவால் நான் இழந்த ஐஸ்வர்யா-தான் எனக்கு ஸ்பெஷல் அவரின் குழந்தை பருவத்தை மிஸ் செய்துவிட்டேன் என சமீபத்தில் பேட்டியில் வருத்தப்பட்டார். மனைவி லதா ,பாலச்சந்தர் , கமல் முயற்சியால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார் ரஜினி.பெர்சனல் வாழ்க்கையை பொருத்தவரை ரஜினிக்கு கமலும் ,கமலுக்கு ரஜினியும் பெர்சனல் அட்வைசர்கள்.நடிப்பதில் ஒரு பிரேக் விட்டு மீண்டும் நடிக்க வந்த ரஜினிக்கு ஹிட் கொடுத்து மீண்டும் பிரேக் கொடுத்த படம்தான் ஊர்க்காவலன் மனோபாலா இயக்கம்.எம் ஜி ஆரின் ( வீரப்பன் ) சத்யா மூவிஸ் தயாரிப்பு.இது எம் ஜி ஆர் க்கு ரஜினியை பிடிக்காது என்பவர்களின் கவனத்துக்கு. ரஜினியின் கம்பேக்கான ஊர்க்காவலன் படத்தில்தான் தன் ஹேர்ஸ்டைலை மாற்றினார். அதேபோல் ரஜினி ரியல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த முதல் படம் "வள்ளி". இப்போதிருக்கும் ஹேர்ஸ்டைல் விக் வைத்து நடித்த முதல்படம் "வீரா".


                 ஒரே மாதிரி படங்களில் இணைந்தும் தனித்தனியாகவும் நடித்துகொண்டிருந்தனர் ரஜினியும் கமலும் ( ப்ரியா ,குப்பத்து ராஜா என மாஸ் ஹிட்டடித்த வந்த பின்பும் கூட  கமலுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி ) 80 களுக்கு பிறகு கமலுக்கு ஒரே மாதிரி படங்களில் நடிப்பது போரடிக்க 81 ல் தன் நூறாவது படத்தில் சிவாஜி பாணியை தேர்ந்தெடுத்து "ராஜபார்வை"யில் நடித்தார் கமல்.ரஜினி அப்போது தேர்ந்தெடுத்தது எம் ஜி ஆர் பாணியில் ஆக்சன் + செண்டிமெண்ட் படங்கள்.சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் ரஜினி தேர்ந்தெடுத்தது சிங்கப்பாதை ..கமர்சியல் பாதை.அது ரஜினிக்கு மிகவும் கைகொடுத்தது.சூப்பர் ஸ்டார் பட்டமும் ரஜினிக்கு பொருந்தியது. கம்ர்சியல் ராஜா என்ற பட்டத்தை எளிமையாக பெறவும் இல்லை ,அதை எளிதாக தக்க வைத்துக்கொள்ளவும் இல்லை.மதிய வேளைகளில் பைட் சீன் எடுத்தால் சாப்பாடு சாப்பிட மாட்டார்.நல்லா சாப்பிட்டுவிட்டு நடித்தால் அங்கு காசு கொடுத்து சினிமா பார்க்க வரும் ரசிகனுக்கு நியாயம் செய்யும் வகையில் சுறுசுறுப்பாக நடிக்க முடியாது, அவனுக்கு நான் மத்தியானம் நடிக்கிறது தெரியாது என சொல்லி வெறும் ரசத்தை மட்டும் குடித்துவிட்டு நடிக்க போவாராம். அந்த அர்ப்பணிப்புதான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
                ரஜினி கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு படங்களில் குறுக்கீடு செய்யமாட்டார் அதே போல் ஒவ்வொரு படம் முடிந்து பூசணிக்காய் உடைத்ததும் அந்த சூட்டிங் ஸ்பாட்டிலேயே மீசையை மழித்துவிடுவார். பிறகு அந்த படத்தில் நடிக்க மாட்டேன் அனைத்தும் இயக்குனர் பொறுப்பு என்பது அதிலுள்ள தகவல். அப்படி மீசையை எடுத்தும் சில பேட்ச் ஒர்க்குகளுக்காக நடித்த படங்கள் சிவாஜி ( தெலுங்கு, ஹிந்தி பதிப்பு பர்ஸ்ட் நைட் ட்ரீம் சாங் சீன்களுக்காக ) குசேலன் -பசுபதி தோளில் கைபோட்டு  செல்லும் சீன். ரஜினி இசையமைப்பாளர் விஷயத்தில் கமல் போல கடுமை காட்டியதும் இல்லை கம்போசிங்கிலும் உட்கார்பவரும் இல்லை.ஆனால் பாடல் பிடிக்கவில்லை யெனில் ரிஜெக்ட் செய்துவிடுவார். 80 களுக்கு பிறகு கமல் படங்களுக்கு பெரும்பாலும் ராஜா இசையமைத்திருப்பார் ( தேவர் பிலிம்ஸ்,பாலாஜி தயாரிப்பு என சில விதிவிலக்குகள் உண்டு ). ரஜினி இயக்குனர் விரும்பும் இசையமைப்பாளர்களுடன் ஒர்க் செய்வார்.எஸ் பி பாலசுப்ரமணியம் ,விஜய் ஆனந்த் ,அம்சலேகா ,என பலர் ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தி ருக்கிறார்கள்.ஒரு சின்ன உதாரணம் வாசு இயக்கத்தில் நடித்த படத்தில் பாடல் படமாக்கபட்டபோது பாடலை கேட்ட ரஜினி முதல் நாள் நடிக்காமல் சென்றுவிடுகிறார் யாருக்கும் காரணம் சொல்லவில்லை..இரண்டாம் நாள் கேட்டுவிட்டு பாடல் ரொம்ப ஸ்லோவாக இருக்கிறது.ரசிகர்களுக்கு பிடிக்காது என்றார். வாசுவுக்கோ நல்ல பாடலை விட மனசில்லை..பாடலுக்கு இசையமைத்த இளையராஜா விடமே பிரச்சனையை கொண்டு செல்ல ,ராஜா ரஜினியை வர சொல்கிறார் "இந்த பாட்டு கண்டிப்பா ஹிட் ஆகும் தைரியமா நடி ரஜினி ,நான் கியாரண்டி" என்கிறார்.."நீங்க சொன்னா சரி சாமி" என நடித்து கொடுக்கிறார்.அந்த பாடல்தான் மன்னன் படத்தில் இடம் பெற்ற "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடல்.எம் ஜி ஆர் காலத்திலிருந்து எத்தனையோ அம்மா பாடல்கள் இருந்தாலும் இதுதான் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அம்மா பாடலின் உச்சம் என்றும் சொல்லலாம்.இது ரசிகனுக்காக ரஜினி யோசிக்கிறார் என்பதற்கும்,பிடிக்கவில்லையெனில் ரிஜெக்ட் செய்வார் என்பதற்குமான உதாரணங்கள்.இதேபோல் பாட்ஷா வில் ரிஜெக்ட் செய்த சம்பவம் குறித்து சுரேஷ் கிருஷ்ணா எழுதியிருக்கிறார்.


             ரஜினி அந்த அளவுக்கு ஆக்சன் ஹீரோவோ அந்த அளவுக்கு காமெடியிலும் இறங்கி கலக்குவார்.உதாரணமாக அண்ணாமலை படத்தில் தொடை தட்டி சவால் விடும் வசனம் எவ்வளவு ரீச்சோ அதே அளவுக்கு ரீச் ஆனது "கடவுளே கடவுளே" இன்னும் தமிழ் சினிமாவில் அந்த வசனத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ( சமீபத்தில் அரண்மனை 1 படத்தில் ) .தம்பிக்கு எந்த ஊரு ,உழைப்பாளி, பணக்காரன் சந்திரமுகி, வீரா,தம்பி  என பல படங்கள் ரஜினியின் ஆக்சன்+காமெடி நடிப்பின் சிறந்த உதாரணங்களில் சில என்றும் சொல்லலாம்.ஹீரோவின் பெயரில் படமெடுத்த ரஜினி பாபா வின் தோல்விக்கு பிறகு சந்திரமுகி என பெண் பெயரில் ஹாரர் காமெடி படம் எடுத்து ஹிட் கொடுக்கிறார்.தமிழில் ஹாரர் காமெடி படத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது சந்திரமுகி தான்.சந்திரமுகி கன்னட ரீமேக் என்றாலும் "லகலக" ரஜினியின் ஐடியாதான் கன்னடத்தில் இது கிடையாது.அந்த லகலக எனகுரல் கொடுத்தவர் குரலை எங்கேயோ கேட்டு அதை பயன்படுத்திக்கொள்ள ஐடியா கொடுத்ததும் ரஜினிதான்.எனக்கு அந்த படத்தில் பிடித்த கேரக்டர் "வேட்டையன்"தான்.


              ஆன்மீகம் என்பது தள்ளி நின்று பார்க்கையில் கடவுளை தொழச்சொல்லும்...மிக அருகில் சென்று பார்க்கையில் நம்மையே தொழச்சொல்லும், நமக்குள்ளிருக்கும்  கடவுளை தொழச்சொல்லும்.ரஜினி ஆன்மீகத்தில் இருந்தாலும் அவரின் முதல் குருவான ராகவேந்திரரில் இருந்து ஆரம்பித்து ராமகிருஷ்ண பரமஹம்சர்,ரமணர்,பாபா என அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்கிறார்.அப்போது பரமஹம்சர் எழுதிய "ஒரு யோகியின் சுயசரிதை" படிக்க அதில் இருந்து கிடைக்கும் உந்து சக்தியால் ஆரம்பித்ததே
"பாபா" அதில் ரஜினி பட்டத்தை தேடி வரச்செய்யும் மேஜிக் செக்கிங் சீன்  பரமஹம்ச யோகானந்தரின் அனுபவங்களே அது ,யோகானந்தர் அவர் அக்கா முன்பாக சக்தியை நிரூபித்து காட்டுவதற்காக செய்த விளையாட்டாகும். பாபா பட ஆரம்பத்தில் யோகிகள் வந்து குழந்தை குறித்து சொல்வது நிஜமாக யோகானந்தரின் தாய்க்கு நடந்த அனுபவம்தான் . பாபா தன்னுடைய கடைசி படம் என அறிவித்து படத்தை ஆரம்பித்தார் அதனாலும் அந்த படத்தில் கடவுள் குறித்த விஷயங்கள் ராமநாராயணன் படங்கள் போல் கிராபிக்ஸ்,  மாரியம்மன் போன்ற விஷயங்கள் இல்லாமல் "தெய்வம் மனுஷ ரூபேனா" கான்செப்டில் எடுக்கபட்டதாலும் படம் மக்களை ஈர்க்கவில்லை. போதாக்குறைக்கு ரஹ்மான் செமையாக ஒபி அடித்திருந்தார்.


             அண்ணாமலையில் அரசியல் பேச ஆரம்பித்தார்.95ல் முத்து-வில் நான் பாட்டுக்கு என் வழியில போய்கிட்டிருக்கேன் இடைஞ்சல் செஞ்சா கஷ்டம் உங்களுக்குத்தான் என ஜெ வையும் ,2003 ல் அய்யா உங்கள நம்பி ஆட்சிய கொடுத்தேன் ஆனா நீங்க வாக்கை காப்பாத்தல என கலைஞருக்கும் பன்ச் வைத்தார். பிறகு இரு தலைவர்களுக்கும் பொதுவானவராக அடையாளம் காட்டிக்கொண்டார்.யார் ஆட்சியில் நடிக்கிறாரோ அந்த கட்சி டிவிக்கு தான் நடிக்கும் படத்தின் ரைட்சை கொடுத்துவிடுவார்.இரு கட்சி தலைவர்கள் அழைத்தாலும் செல்வார் .
                ஆன்மீகத்தில் பலபடிகளை கடந்துவிட்டார் ரஜினி.90 களுக்கு பிறகு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் .அவர் பூஜையறையில் இருக்கும் போது ஒலித்தகுரல்தான் "அண்ணாமலை" என்றது முதலில் தலைப்பு பிறகுதான் கதை பாட்ஷாவுக்கும், படையப்பாவுக்கும் இதுதான் நடந்தது. ஆன்மீக தேடல் ஒரு பக்கம் இருந்தாலும் மக்களுக்கு உதவுவதில் குறை வைக்கவில்லை.இன்டர்நெட் கலாச்சாரங்கள் அதிகம் இல்லாத 90களிலேயே
மருத்துவ உதவி கேட்டு தகுந்த ஆதாரங்கள் வைத்து அவர் முகவரிக்கு அனுப்பினால் நிச்சயம் உதவி  கிடைக்கும் .எனக்கு தெரிந்த உறவினரின் மகன்களின் மேஜர் ஆபரேஷன்களுக்கு பெரும்தொகை கொடுத்து உதவினார்
( விஜயகாந்தும் உதவினார் ) அன்றே அன்பே சிவமென நம்பினார் செய்தார். இன்றும் அவர் மக்களுக்கு உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார் அதை விளம்பரபடுத்தி கொள்வதில்லை. இத்தனை செய்த பின்னும் ரஜினியை நோக்கி "ஏன் பிரியாணி போடவில்லை" என கேட்கிறோம் அந்த பணம் ரஜினிக்கு பிரச்சனையில்லை .அதற்காக வந்து எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது ரஜினியையே சேரும் என அவர் நினைக்கிறார் .அவர் பார்ப்பது பாவ புண்ணிய கணக்கு , பணக்கணக்கல்ல .
                      
                 


          உச்சகட்ட புகழையும் பணத்தையும் அனுபவித்து விட்ட ரஜினி சாரின்  விருப்பம் "சிவாஜிராவ் கெய்க்வாட்" ஆக இருக்கவேண்டும் என்பதே நம் விருப்பம் "ரஜினிகாந்த்"  சிவாஜி ராவ் கெய்க்வாட் ஆக மாறிவிடக்கூடாது என்பதே. இருவருக்கும் நடுவில் கடவுள் என்ன முடிவு செய்து வைத்திருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.இன்றும் மாறு வேடத்தில் பல இடங்களுக்கு சாதாரணணாக செல்கிறார் ,"ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ரஜினியை பார்த்தேன் மாறுவேடத்தில் வந்திருந்தார்" என தெரிந்தவர் ஒருவர் சொன்ன போது அதை கண்டிப்பாக மறுக்க முடியவில்லை ஏனெனில் ஈரோட்டில் உள்ள ராகவேந்திரரின் கோவிலுக்கு ரஜினி வந்து சென்ற தகவல் ஏற்கனவே உண்டு .மாறுவேடத்தில் ரோட்டில் செல்வது ,சிறிய கடையாய் இருந்தாலும் டேஸ்ட்டாக இருக்கும் கடையில் சாப்பிடுவதும்  , மக்களுடன் மக்களாக சினிமா பார்ப்பதும் ரஜினிக்கு மிக பிடித்தமான மனதிற்கு நெருக்கமான விஷயங்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் , ஹிட் படம் கொடுத்து வசூல் மழை பொழிய வைப்பதில்  என ரஜினி இப்போதும் சூப்பர் ஸ்டார்தான் .தமிழ் சினிமாவின் நிரந்தர "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் மட்டுமே வேறு யாருக்கும் அந்த பட்டத்தை போட்டுக்கொள்ள தகுதி கிடையாது.


Reference

விகடன் ,வார இதழ்கள் , ரஜினி குறித்து வெளிவந்த புத்தகங்கள் , கேள்விப்பட்ட தகவல்கள்