Friday, 28 March 2014

லவ்வர்ஸ் ( பாதி உண்மை )

                 என் பேரு ரகுநாதன்.நான் இப்ப வந்திருக்கிறது வெள்ளியங்கிரி மலையடிவாரத்துல இருக்கிற தியான மையத்துக்கு.கொஞ்சம் மனசு சரியில்லாதப்ப எல்லாம் இப்படி வருவேன்...எப்போ மனசு சரியில்லாம போகும்ன்னா வீட்டுல மனைவி நான் செஞ்ச தப்பை கண்டுபிடிச்சு சண்டை போடுறப்ப எல்லாம்..நேத்து நான் ஆஃபீஸ் மீட்டிங்குன்னு சொல்லிட்டு ஃப்ரெண்ட் வீட்டுல தண்ணியடிசிட்டு மல்லாந்துட்டேன்..அத அவ கண்டுபிடிக்க ,இப்ப நான் இங்க வந்தாச்சு .. எனக்கு திருமணத்தின் மீதான வெறுப்பு அதிகரித்துவிட்டது.
                                   தியானம் செய்து முடித்தவுடன் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன்...அங்கு ஒரு ஜோடி எனக்கு அருகில் இருந்த டேபிளில் வந்தமர்ந்தார்கள்..அவர்களை தியான மையத்திலேயே கவனித்தேன்.அருகருகே  அமைதியாகஅமர்ந்திருந்தனர் .வயது இருவருக்கும் 20 களை கடந்து 25 க்குள் ஊசாலாடிக்கொண்டிருந்தது. அவர்களின் சாப்பிட ஆர்டர் செய்தபோதுதான் கவனித்தேன்..இருவரும் வெவ்வேறு வகை உணவில் ஒரு பிளேட் மட்டுமே ஆர்டர் செய்து, அதை ஷேர் செய்து சாப்பிட்டார்கள்..ஒருவரின் ரசனையை மற்றவர் புரிந்துகொண்ட ஜோடியாக தெரிந்தது.புதுக்கல்யாண ஜோடி என்பது என் அனுமானம். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட ஆரம்பித்தபோது அந்த ஜோடி மீது எனக்கு மரியாதை வந்துவிட்டது..பின்ன விட்டுகொடுத்து ,அடுத்தவரின் ரசனையை புரிந்துகொண்டு வாழும் ஜோடி அல்லவா ..அவர்கள் பேசிக்கொள்வதை கேட்கும் ஆவல் வந்தது..


                     நான் முலாம்பழ ஜூஸ் குடிக்கும்போது ,
அவர்களின் சம்பாஷனையை கேட்க , தப்புன்னு தெரிஞ்சும்  என் காதை அவர்களைசுற்றி அனுப்பினேன்..
"நாம கல்யாணதுக்கு அப்புறமும் இப்படியே இருப்போமா" அவன்
"ம்"அவள்,
"அட இன்னும் கல்யாணம் ஆகல போல, லவ்வர்ஸ்" என் காது,
"ok, "உன்னோட" கல்யாணத்துக்கு அப்புறமும் என்னை மறந்துடாத ,
எப்பவும் இப்டியே இருப்போம்" அவன்,
"பார்க்கலாம்"அவள்
ஷாக்காகி "த்தூ" என துப்பிவிட்டு என் காது என்னிடமே வந்தது.
        நான் 180 டிகிரியில் கழுத்தை திருப்பி அவர்களை முறைக்க ஐஸ்கிரீமை அப்படியே வைத்துவிட்டு எஸ்ஸானார்கள் நவீன காதலர்கள்."இனிமே பொண்டாட்டி திட்டினாலும் வீட்டவிட்டு வெளியே வரக்கூடாது.அங்கயே இருந்து அஹிம்சா முறைல நல்லபேர் வாங்கிடனும், வெளில வந்தா புத்திதான் கெட்டுபோகும்" என நினைத்தவாறே நான் பில் செட்டில் செய்ய எழுந்தேன்.

Thursday, 13 March 2014

என் வீட்டு பல்லியும், ஏழுமலையானும்

                                                             

              எல்லோரையும் போல எனக்கும் பல்லின்னா அலர்ஜி.வீட்டுல எந்த மூலையில் பார்த்தாலும் பல்லி இருக்கும் கிச்சனில்,பெட்ரூமில், சட்டை மாட்டும் ஹேங்கருக்கு பக்கத்தில் என எங்கு பார்த்தாலும்  பல்லிமயம். அதுவும் அது என்னைபார்த்து "உன்னால என்னை என்ன செய்ய முடியும்"ன்னு  கேட்கிறமாதிரி இருக்கும்.அந்த பல்லிகளை கொல்ல முடிவெடுத்து பல்லி மருந்தை கண்ணன் டிபார்ட்மெண்டில் வாங்கி வந்தேன்.அந்த மருந்து பல்லியை விரட்டும் ,நான் அதை பல்லிகள் அதிகம் உலவும் இடங்களாக பார்த்து வைத்தேன் .மருந்தின் வேலையால்  பல்லியின் நடமாட்டம் குறைந்தது .அப்புறம் அந்தவார வியாழன் வந்தது .ஒவ்வொரு வியாழனும் குளித்துவிட்டு வந்து சாமிக்கு பூ வைத்து பூஜைசெய்வது என் வழக்கம்.அப்போ ஏழுமலையான் போட்டோவுக்கு பூ வைக்கலாம்ன்னு கையை கொண்டுபோனேன், சரேல்ன்னு ஏழுமலையான் படத்துக்கு பின்னிருந்து பல்லி ஒன்று வெளிப்பட்டு என்னை பார்த்து நின்றது . "என்னை நீ தொந்தரவு செய்தால், நான் உன்னை தொந்தரவு செய்வேன்"என்று சொல்வது போல் இருந்தது,பின் அது மீண்டும் அந்த போட்டோவுக்கு பின்னாலேயே சென்று ஒளிந்துகொண்டது. அடுத்தவாரமும் அதேமாதிரி பூஜை பண்ணும்போது பாபா போட்டோவுக்கு பின்னாடி இருந்து வெளிபட்டுச்சு ..இது என்னை தடுமாற வைத்தது,யோசித்தேன்.

 

                அந்தவார  குங்குமத்தில் வெளிவரும் "சாய்பாபா" தொடரை படித்தபோது அதில் பாபா  சொல்வதாக வருவது "நாய்,பல்லி போன்ற உயிரினங்கள் அது  வசிக்கும் இடத்தில் மற்றவர்கள் வந்தாலும் அவர்களை விரட்டிவிட்டு ஆக்கிரமிக்க நினைப்பதில்லை,மனிதன் மட்டுமே அப்படி செய்கிறான்" என்பார் .அதே நேரத்தில் "ரமண மகரிஷி"யின் அனுபவமும் நியாபகத்துக்கு வந்தது.ஒருமுறை அவர் ஆசிரமத்துக்குள் பாம்பு வந்துவிட்டது மற்றவர்கள் அடிக்க போக ரமணர் அதை தடுத்து சொன்னாராம் "நாம்தான் அதனுடைய இடத்திற்கு வந்து ஆக்கிரமித்திருக்கிறோம் அதனால் அதை அடிக்காதீர்கள்". (ஆசிரமம் திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது)
                இது எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது ,நம்ம வீட்டில்  பல்லிக்கும் இடமுண்டு அதை தடுக்க நாம் யார்?!! என முடிவுசெய்தேன் .உடனே அந்த பல்லி மருந்துகளை எடுத்து வெளியே எறிந்தேன் .இப்போது பல்லி சாமி படங்களுக்கு பின்னால் தென்படுவதில்லை .பழைய இடத்திலேயே பார்க்கமுடிகிறது.
               சிலருக்கு இது முட்டாள்தனமான பதிவாக தோன்றலாம் . பாவபுண்ணிய கணக்கில் எனக்கு நம்பிக்கையுண்டு .ஏனெனில் ஒரு வருடத்திற்கு முன்பு என் வீட்டில் செடிகள் வைத்திருக்கும் இடத்தில் ஓரு  "பச்சை பாம்பு" வந்தது நானாக சென்று அதை அடித்துகொன்றேன்.மனைவி ஒரு மாதம் கழித்து என் ஜாதகத்தை பார்த்தபோது அந்த ஜோசியக்காரர் நான் ஒரு பாம்பை கொன்றிருப்பேன் என அருகில் இருந்து பார்த்ததுபோல் சொல்லியிருக்கிறார்.
               உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானது நாம் வலிமையாக இருப்பதால் அதை அழிக்கலாம் என்பதில் நியாயமில்லை.நம் பாவ புண்ணிய கணக்கு நம்முடன் எப்போதும் கூடவே இருக்கும் .அதில் இல்லாதவர்களை விட இயலாதவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் போன்றோருக்கு உதவி செய்து புண்ணிய கணக்கை சேர்த்து கொள்ளுதல் நலம் .
             இன்று மதியம் சாய்பாபா கோவிலுக்கு சென்று விட்டு வந்தபோது வாசல் கதவில் நிறைய எறும்புகள்.. கடித்த பிறகு பார்த்துக்கலாம் என நினைத்துக்கொண்டு பாபா கோவிலில் இருந்து கொண்டுவந்த பூவை "சாய்பாபா" படத்திற்கு அருகில் வைத்தேன்..!